பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 15, 2016

திருக்கோகர்ணம் திருத்தல வரலாறு

                          



எல்லா திருத்தலங்களுக்கும் உள்ளது போன்றே திருக்கோகர்ணத்துக்கும் புராணக்கதை ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப் பெயரும் அமைந்தது. ஒருமுறை அமரருலகில் தேவர்களின் தலைவனான இந்திரனின் அவை கூடியிருந்தபோது, எல்லாரும் குறித்த நேரத்தில் அவைக்கு வந்து விட்டார்கள். கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் இயல்புடைய தெய்வப் பசுவான காமதேனு மட்டும் சற்றுக் காலம் கடந்து வர நேரிட்டுவிட்டது.

இதனால் தேவேந்திரனுக்குக் கடும்கோபம் உண்டாயிற்று, காமதேனு. தாமதமானதற்காகக் கூறிய காரணங்கள் எதையும் கேட்பதற்கு அவன் விரும்பவில்லை, நேரங்கடந்து நீ அவைக்கு வந்திருக்கிறாய். சமாதானங்களை ஏற்க மாட்டேன். உன்னுடைய தாமதமான வருகைக்கு உரிய தண்டனையாக. நீ பூமியில் போய் பசுவாகப் பிறப்பாயாக என்று சாபம் தந்துவிட்டான், வேறு வழியில்லை. காமதேனுப் பசு பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்து அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு பேணிப் பாதுகாத்து வந்தார். பூமியில் வந்து பிறந்துவிட்ட போதிலும் தெய்வப் பசுவுக்கு மனிதர்களோடு பேசும் ஆற்றல் இருந்திருக்கின்றது. அத்துடன் தன் வினையையும். வினைப்பயனையும் உணர்ந்த நிலையிலும்இருந்தது.
                                      
ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும் வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது. மாமுனிவர் வழி சொன்னார். பாரதத்தின் தென்பகுதியில் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்று உள்ளது. அங்கே கபிலர் என்னும் முனிவர் ஒருவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன் சாபம் நீங்கும், வடமொழியில் வகுளம் என்றால் மகிழமரம் என்று பொருள். வகுள ஆரண்யம் என்பது மகிழமரக்காடு.

அவ்வாறே நெடுந்தொலைவு நடந்த பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம் சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில் வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்ப தாகவும் சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம் அகலும் என்று வழி காட்டினார். 

அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக் கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு. இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று பாலூட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள் அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது, உடனே அதைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை. வேங்கையிடம் மன்றாடியது பசு..... என்னை விட்டு விடு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன், என்னை இப்போது விட்டுவிடு. அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத் தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன். என்னை நம்பு. நான் சொல் மாற மாட்டேன்.... தயவு செய்து என்னை மேலே செல்ல அனுமதித்து வழியை விடு.. என்று வேண்டிக் கேட்டுக் கொண்டது.
                                             
சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு. தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர். அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார்...வழிமறித்தார். பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை. சொன்ன சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு. பசுவின் வாக்கு தவறாத பண்பால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக் காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.

வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது. அபிஷேகம் செய்தது போக எஞ்சிய கங்கை நீரை காமதேனுப்பசு பாறையைக் கொம்புகளால் கீறி அதில் வடித்துச் சேமித்தாம். அது கபில தீர்த்தம் என்கிற பெயருடன் இன்றைய திருகோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில் மலைச் சுனையாக. வற்றாத பெருங்கருணையாய் என்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது, இதை கங்கா தீர்த்தம் எனவும் வழங்குவதுண்டு.
ஆலய அமைப்பும் கருவறைகளும்  மங்கள தீர்த்தம்
திருக்கோயில் வளாகத்தையொட்டி, கிழக்கில், ஒரு கற்பாறைப் பள்ளமாக மங்கள தீர்த்தம் என்னும் புனிதமான நீர்நிலை விளங்குகிறது. இத்திருக்குளத்தின் வடகரையில் படிகள் கற்பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இவை மூலவரின் குடைவரை உருவான காலத்தில் உருவானதாயிருக்கலாம் என்கிறார்கள். 

இத்திருக்குளக் கரையில் கிழக்கு நோக்கியவாறு இரண்டு தூண்களில் அழகான குதிரை வீரர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து பேரழகுடன் விளங்கியிருக்கக் கூடிய இச்சிற்பங்கள் பெருமளவில் சிதைந்து அழிக்கப்பட்டுள்ளன. இத்திருக்குளத்துக்கு நேரே அமைந்துள்ளது வகுளவனேசுவரின் கிழக்குப் பார்த்த கருவறை. ஆண்டின் சில நாட்களில் சூரிய ஒளி இந்தச் சிவலிங்கத்தின் மீது படியும். பிரதான தேவதைகளான வகுளவனேசுவரர், கோகர்ணேசுவரர், பிரகதாம்பாள், மாடியில் உள்ள வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதிகள் எல்லாம் கிழக்கு நோக்கியே உள்ளன. மங்கள நாயகி அம்மன் கருவறை மட்டும் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இந்த மங்களாங்குளம் எனப்படும் மங்கள தீர்த்தத்தில் நீராடிவிட்டே பக்தர்கள் ஆலயத்துக்குள் வழிபாட்டுக்காக வந்திருப்பார்கள் என நம்பலாம். ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நகரம் விரிவடைந்ததையொட்டி, பிரதான வாயில் தென்வடலாய் அமைந்து விட்டது.

ஆலய அமைப்பு
நுழைவாயிலுக்கு இடப்புறத்தில் தேரடி விநாயகர், கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். உயரமான மேடையை ஒட்டி இவருடைய சிறிய கருவரற உள்ளது. தேரடி விநாயகருக்கே காவல் இருக்கிற மாதிரி, கருவறைக்கு வெளியே இரண்டு அழகான யானைச் சிற்பங்கள் கொள்ளை அழகு. இந்த விநாயகர் சாட்சியாகத் திருமண முன்னேற்பாடுகள், மாப்பிள்ளை அழைப்பு போன்றவற்றை இந்த விநாயகர் மண்டப மேடையில் வைத்தே நிகழ்த்துகிறார்கள். எதிர்புறச் சுவரிலும், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் சிலரின் திருவுருவங்களும், புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெருந்தொண்டாற்றிய திவான் சேஷையா சாஸ்திரிகள் என்பாரின் தொந்தியும் தொப்பையுமான உருவமும் வரையப்பட்டுள்ளன. நேரே நடந்தால் இருபுறமும் சிறிய திண்ணைகள் போன்ற அமைப்போடு நாற்புறமும் தூண்களோடு ஒரு சிறு மண்டபம் உண்டு. இந்த மேற்கூரைப் பகுதியில் இரண்டு கல்வளையங்கள் சங்கிலியாத் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதற்கு அனுப்பு மண்டபம் என்று பெயர். தரிசனம் முடிந்து வீடு திரும்புகிற பக்தர்கள் இந்தத் திண்ணைகளில் சிறிது நேரம் அமர்ந்து செல்வது என்பது ஒரு மரபு. ஆலயத்துக்குள்ளே கால்கடுக்க நடந்த களைப்புத் தீர என்று இப்படி அமர்ந்து செல்லும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

இதனை அடுத்து இருபுறமும் உள்ள தூண்களில் நல்ல ஆகிருதியோடு கூடிய பத்துத்தலை, இருபது கரங்கள் கொண்ட உருவங்களை வெகு நேர்த்தியாகக் கல்லில் வடித்திருக்கிறார்கள். இரண்டிலும் கரங்கள் பெரிதும் சேதப்பட்டுள்ளன. இவை இராவணேசுவரனின் வடிவங்களாகவும் கருதலாம். ஏனெனில் அவன் சிறந்த சிவபக்தன் அல்லவா? இந்தத் தூண்களுக்கு மேற்கில் பசுமடம் என்னும் கீதாரமும், அருகில் காசி விசுவநாத சுவாமியின் கருவறையும் உள்ளன. இதனை அடுத்துப் பதினாறு தூண்களோடு கூடிய மண்டபம் ஒன்று உண்டு. மையத்தில் உள்ள மேடையைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்கேற்ற முறையில் அகழிப் பள்ளங்கள் நாற்புறமும் உள்ளன. நெடுநாட்களுக்கு முன்னால் வைகாசி மாதம் வசந்த விழாவின் போது இந்த அகழிப் பள்ளத்தில் நீர் நிரப்பப் பட்டது என்பது செவிவழிச் செய்தி.

ஆனி மாதம் மாம்பழத் திருவிழா என்று நடக்கும். இதை டோலோத்சவம் என்பார்கள். இறைவனும் இறைவியும் எழுந்தருளிக் காட்சி தருவார்கள். மைய மண்டபத்துக்கு நாற்புறமும் திருச்சுற்று உண்டு. இதில் இசை முழக்கங்களோடு ஸ்வாமியும் அம்பாளும் திருவுலா வருவதுண்டு. ஒவ்வொரு திருச்சுற்றிலும் வீணை, நாதசுரம், சங்கு என்று விதம்விதமான இசை முழங்கியதுண்டு. இப்போது ஆவணி மூல உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றுதான் இறைவன் வேங்கை உருவத்தை விட்டுவிட்டு ரிஷப ஆரூடராய்க் காமதேனுப் பசுவுக்கு காட்சி கொடுத்தார். அன்றைக்குத் தல புராணம் படிக்கும் வழக்கமும் உண்டு.

இவ்விழாக்கள் நடைபெறும் பதினாறு கால் மண்டபத்துக்கு வஸந்த மண்டபம் என்றே பெயர். பிள்ளையார், பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர், மகாலெட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற திருவுருவங்களையும், வேறுபல சிற்பங்களையும் தூண்களில் புடைப்பு சிற்பங்களாய்க் காணலாம். இது நாயக்க மன்னர்களின் காலத்தில் அரசாண்ட பல்லவராயர்கள் என்னும் அரச வம்சத்தவரால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு. அடுத்து, தென்புறத்தில் ராஜகோபுரம் வழியே திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டும். நுழைவாயிலுக்கு முன்னதாக இருபுறமும் உயரமான மேடைகளின் மீது துவாரபாலகர்கள் நல்ல ஆதிருதியான சிற்ப வடிவங்களைக் காணலாம். வலப்புற மேடையில் முரசு உண்டு. பூஜை நேரங்களில் தம்.....தம் என்று சீரான ஒலியோடு முரசு முழங்கும். இந்த துவார பாலகர்கள் விஜயநகரப் பேரரசர்கள் காலத்துக் கலை வடிவங்கள். ராஜ கோபுர தரிசனம் வெளியிலிருந்து சாத்தியமே இல்லை. கிரிவலப் பாதை முடிந்து திரும்புகிற பகுதியிலிருந்து ஓரளவு காணலாம். திருக்கோவிலின் மாடிப் பகுதிக்கு சென்றால், புதிதாக வண்ணமெருகு ஊட்டப்பட்ட சிகரங்களையும் கண்டு இன்புறலாம்.

ராஜகோபுர வாயிலைக் கடந்தவுடன் ராயத் தொண்டைமான் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட சிற்ப மண்டபம் உள்ளது. இதன் விதானப் பகுதியில் பன்னிரண்டு ராசிகளும் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் சிற்ப மண்டபத்தை ராசி மண்டபம் எனவும் வழங்குவர். சிற்ப மண்டபம் ஓர் அருமையான கலைக் கருவூலமாய்த் திகழ்ந்திருக்க வேண்டும். இப்போது பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் அழகைக் கண்டு மனம் பறிகொடுக்க முடிகிறது. வீரபத்திரர், ரதி மன்மதன், அருச்சுனன், காளி நடனம், ஊர்த்துவ தாண்டவர், கர்ணன், இராமர், யாளிகள், குதிரை வீரர்கள் - என்று தூண்களில் அணிவகுக்கும் கலையழகை நிதானமாகக் கண்டு மகிழ வேண்டும். சிற்ப மண்டபத்தின் இடப்புறத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இங்குதான் நவராத்திரி விழாவின் போது பத்து நாட்களும், அம்பிகைக்கு விதம் விதமான அவதார ஒப்பனைகள் செய்து வைத்திருப்பார்கள். மண்டபத்தின் இருபுறமும் பொம்மைக் கொலுவும் அழகாக இடம் பெறும். மகிஷாசுர வதம் போன்ற அச்சுறுத்தும் ஒப்பனைகளிலும் அம்பிகை காட்சியளிப்பார். இந்த மண்டபத்தில் தான் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருக்கல்யாணம் நிகழும்.

சிற்ப மண்டபத்தின் வலப்புறத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இதுவும் பதினாறு கால்கள் கொண்ட அமைப்பு. புடைப்புச் சிற்பங்களாக நிறையக் கலை வடிவங்களைக் காணலாம். திருக்கல்யாணத்தன்று இறைவனும் இறைவியும் இங்கு ஊஞ்சலில் எழுந்தருளுவார்கள். சிற்ப மண்டபத்தைக் கடந்து நேரே நடந்தால் பிரதான மண்டபத்தை அடையலாம். இடப்புறம் திரும்பினால் நீளமான மேடையில் அறுபத்து மூவர் திருமேனிகள் அணிவகுக்கின்றன. அங்கு திரும்பாமல் சற்று நேரே வந்து இடப்புறம் திரும்பினால் அருள்மிகு பிரகதாம்பாளின் கருவறைக்குள் நுழையலாம். அம்பிகையின் நின்ற திருக்கோலம், அரக்கர்களின் விதம் விதமான ஒப்பனைகளால் பக்தர்களைக் கட்டி இழுக்கும். குறிப்பாக சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசங்கள், உள்ளங்கையில் மரகதக் கற்கள் உட்படப் பூரண ஒப்பனைகளில் அம்பிகையை தரிசிப்பது வாழ்வின் மிகப் பெரும் பேறு.

அம்மன் சந்நிதிக்கு நேரே கையில் விளக்கேந்தி நிற்கும் ஒரு பெண்ணின் திருமேனி கொள்ளை அழகுடன் உலோக வார்ப்பில் நின்று கொண்டிருக்கிறது. பாவை விளக்கு என்று வழங்கப்படும் இச்சிற்ப சௌந்தர்யம் வெகு நுட்பமான அணிகலன்கள் ஆடை வேலைப்பாடுகளுடன் உயிர் வடிவமாய்க் காட்சி தருகிறது. மேற்குபுறம் படியேறினால் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதி. அம்பிகை தனிக் கருவறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். புதுக்கோட்டை மன்னர் ஒருவர் கடற்பணயம் மேற்கொண்டிருந்த போது, கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அப்போது சின்னஞ்சிறு பெண் ஒருத்தி உறக்கத்திலிருந்த மன்னரை தூங்குகிறாயே எழுந்திரு... கப்பலில் தீப் பற்றிவிட்டது என்ற எச்சரித்ததாகவும் சொல்வார்கள். தம்மை உறக்கம் கலைத்துக் காப்பாற்றிய சின்னஞ்சிறு பெண் அன்னை பிரகதாம்பாளே என்று உணர்ந்தார் மன்னர்.

இந்த நிகழ்வின் நன்றி வெளிப்பாடாக அம்மன் சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதற்க வெள்ளியாலான கூண்டு ஒன்றும் வைத்து மூடியிருக்கிறார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் பழைமையானது இந்த நந்தா விளக்கு. வெள்ளிக் கூண்டின் மேல் பகுதியில் 1912.... மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்... என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையின் மீது இத்தனை ஈடுபாடும் பக்தியும் அந்த மாமன்னர், தம்முடைய வாழ்வின் பிற்பகுதியில் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட முடியாமல் போனது ஒரு சோகம். இவர் மோலிஃபிங்க் என்னும் ஆஸ்திரேலியப் பெண்மணியை காதலித்து மணந்து கொண்டதே காரணமாயிருக்கலாம். (அவர்களுக்கு சிட்னி தொண்டைமான் என்ற மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு இளவரசு பட்டம் கட்ட மன்னர் நினைத்தார். ஆனால் மக்கள் ஒரு அந்நிய தேசத்து மனைவிக்குப் பிறந்ததால் இந்த மண்ணை ஆளும் உரிமை இல்லை என்று மறுத்துவிடவே, மன்னர் பிரான்ஸ் சென்று விட்டார். அவர் இங்கிலாந்தில் இறந்து போனார் என்கிறது வரலாறு.) அன்னை பிரகதாம்பாள் கருவறைக்க முன்னால் தென்புறம் விநாயகரும், வடபுறத்தில் பள்ளியறையும் உள்ளன. பள்ளியறைத் திருமேனிகள் சிறிய உருவங்களாயினும் கொள்ளை அழகோடு விளங்குகின்றன. அன்னையின் எதிரில் வெண்கலத்தாலான நந்தி இருப்பது புதுமையும் அரிதான சிற்பச் சிறப்பும் உடையது. வெள்ளிக் கிழமை, சிறப்பான நாட்களில் முழுமையான அலங்கார அணிமணிகளோடு அம்பிகையின் அருட்தோற்றம் பேசும் திருமேனியாகக் காட்சி தரும். சந்நிதியின் எதிரில் புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் உலோகத் தகடுகள் போர்த்தப்பட்ட அழகான கொடி மரமும், அதற்கு அப்பால் தலவிருட்சம் உள்ளன.

அம்பிகையின் கருவறைக்குத் தென்புறம் உள்ள படிக்கட்டில் இறங்கினால் எதிரே நீண்ட மேடையில் அறுபத்து மூவர் திருமேனிகள் வரிசையாக நின்று காட்சியளிக்கிறார்கள்.




திருமேனிகளுக்கு மேலே, வண்ண ஓவியமாகவும், உரிய திருநாமங்களுடனும் அறுபத்து மூவர் காட்சி தருகிறார்கள். மேடையின் மேற்குக் கோடியில் விநாயகர் திருமேனி உண்டு. இவற்றை அடுத்து, தனிக் கருவறையில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறவர் ரிஷப ஆரூடராக விளங்கும் சிவபெருமான். காட்சி கொடுத்த நாயனார் என்ற வழங்குகிறார்கள். முக்கியமான நாட்களில் இவருக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அடுத்துக் காசிலிங்க தரிசனமும் உண்டு. அறுபத்து மூவர் மேடைக்கு எதிரில், அம்மன் சந்நிதியின் தென்புற வாயிலை ஒட்டிப் பல விநாயகர் திருமேனிகளைக் காணலாம். அறுபத்து மூவர் மேடைக்கு முன்பே அம்மன் கருவறையின் திருசுற்று ஆரம்பமாகிவிடும். கருவறையின் பின்புறப்பாதை குடைவரைப் பாணியில் பாறையை வெட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றின் இடப்புறத்தில் உள்ள மலைப்பாறையை வருடிக் கொண்டே நடந்தால் சிறிய படிக் கட்டுகளின் மீது குட்டிக் கருவறையில் காட்சி தருகிறார் குழந்தை வடிவேலன்.

அடுத்ததாய் மீண்டும் ஏழு படிக்கட்டுகள் ஏறினால் சப்தலிங்கம் தரிசனம் கிடைக்கும். இந்தப் படிக்கட்டுகளின் கீழே, புதிதாக சங்கீதம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள், அரங்கேற்றத்துக்கு முன்னால் சப்தலிங்க சந்நிதியில் அமர்ந்து பாடி, அல்லது இசைக் கருவிகளை வாசிப்பது வழக்கம். அடுத்துச் செல்லவேண்டியது சுமாமி சந்நிதிக்கு. அதற்கு முன்னால், குழந்தை வடிவேலன் கருவறைக்கு எதிரில் சிறிய கட்டுமானத்தில் உள்ள சண்டேசுவரரை தரிசிப்பது வழக்கம். கோவிலுக்கு யார்யார் எல்லாம் வருகிறார்கள் என்று அவர் கவனிப்பாராம்.

சண்டேசுவரரைச் சுற்றி வருவதில்லை. கையை மட்டும் தட்டி ஒலி எழுப்புவார்கள். சிவன் சொத்து எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்று அவரிடம் அறிவிப்பதாகும் அது. அப்படியே திருமபி வடக்குப் புறம் படிக்கட்டில் ஏறி நடந்தால், இடப்புறப் பள்ளத்தில் ஸப்த கன்னிமாரை தரிசிக்கலாம். அப்படியே இன்னும் நடந்தால் சுவாமி சந்நிதி வரும். மூலவர் கோகர்யேசுவரரை வணங்கிவிட்டு வலப்புறம் திரும்பி படியேற வேண்டும். அங்கே இரு புறமும் துவார பாலகர்கள் உண்டு.
சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு இடப்புறம் விநாயகரும் வலப்புறம் கங்காதரரும் பாறைக் குடைவில் உருவானவர்கள். எதிரில் குடைவரைக் சரிவில் அழகான கொடிமரம்-த்வஜஸ்தம்பம் நிற்கிறது. சுற்றிலும் போர்த்தியுள்ள தகடுகளில் முருகன், விநாயகர் முதலான திருமேனிகளை வடித்திருக்கிறார்கள். கொடிமரத்தைப் பார்ப்பதற்கு முன் துவாரபாலகர்கள் உள்ள மண்டபத்தை விட்டு படியேறி இடப்புறம் திரும்பினால் மரையில் வெட்டப்பட்ட படிக்கட்டுகள் உண்டு. இவற்றின்மீது நடந்தால் திருக்கோயிலின் மாடிப் பகுதிக்கு செல்லலாம்.
படிகளின் இடப்புறம் நிறைய கல்வெட்டுகள் உண்டு. நேரே சென்றால் மலைச்சுனைக்கு போகும் வழி. இடப்புறம் திரும்பினால், உயரமான தளத்தின் மீது வள்ளி தேவயானை சமேதரான சுப்பிரமணியரைக் கருவறையில் தரிசிக்கலாம். முருகனுக்குத் தென்புறம் சிறுசிறு கருவறைகளின் வரிசையாக சரஸ்வதி, மகாலெக்ஷ்மி, துர்க்கை, அன்னபூரணி, ருத்ராட்சலிங்கம் ஆகியோரை தரிசிக்கலாம். முருகன் கருவறைக்கு எதிரில் வேம்பும் வில்வமும் தழைத்து வளர்ந்திருக்கின்றன. இந்த மேற்குப்புற மாடிப் பகுதியில் ராஜகோபுரம் உட்பட எல்லாக் கருவறைகளின் சிறு சிறு கோபுரங்கனையும் ஒருசேரக் கண்டு மகிழலாம். மகிழமரம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது காண்பதற்கு அரியதான பசுமைத் தோற்றம். மகளிர் பயபக்தியோடு மகிழமரம் என்னும் திருத்தல மரத்தை வலம் வருகிறார்கள். இன்னம் சற்றுக் கீழே நடந்தால் மாடியின் மேலேயிருந்து, மங்கள தீர்த்தம் என்று வழங்கப்படும் தெப்பக் குளத்தின் அழகிய காட்சியைக் காணலாம். ராஜகோபுரத்துக்கு மேற்கில் இக்கோவிலின் நந்தவனம் உள்ளது. மாடிப்பகுதியின் வலப்புறத்தில் பிரம்மா, ஜ்வரஹேஸ்வரர், சூர்யன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் (நால்வர்), சந்திர பகவான், தண்டாயுதபாணி ஆகியோரின் திருமேனிகள் காணவேண்டியவை. இந்த நால்வர் மேடைக்குத் தென்புறமாக மலையில் வெட்டப்பட்ட படிக்கட்டுகள் இறங்கும், சற்றுத்தொலைவில் இந்தப் பாதையைச் சுவர் வைத்து தடுத்துவிட்டார்கள்.

ஒருகாலத்தில், சுனையிலிருந்து ஆலயப் பணிக்ளுக்கான தண்ணீரை இந்த வழியாகவே எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என நம்பலாம். இந்தப் படிகள், சுவர்த் தடுப்பு இல்லாவிட்டால் கீழேயுள்ள ஆதிதேவதையான மங்களநாயகி கருவறையின் கிழக்குத் திருச்சுற்றுவரை வரவேண்டும். சுனை வழியில் மேலே சென்றால் இடப்புறப் பாறைப் பிளவில் வற்றாத சுனை இருக்கிறது. சுனைத்குக் கிழக்கே பாறை நல்ல உயரத்தில் செல்கிறது. அதன் உச்சியில் நாகர் திருமேனிகள் உள்ளன. இங்கும் பக்தர்கள் வந்து வழிபட்டு வலம் வருகிறார்கள். சுனையையும், நாகரையும் தரிசித்துவிட்டு மலைப் படிகளில் நிதானமாக இறங்கி, இடப்புறம் திரும்பிக் கொடிமரத்தை வலம் வந்து கீழே இறங்கவேண்டும். மீண்டும் படிக்கட்டுகளில் இறங்கி, இடப்புறம் திரும்பினால் உயரமான மண்டபம் போன்ற பகுதியில், ஆடல்வல்லானாகிய நடராஜரின் பஞ்சலோகத் திருமேனியை தரிசிக்கலாம். அருகிலேயே இடம்பெற்றுள்ள சிவகாமி அம்மையையும், நால்வர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். அப்படியே நடந்து வலம் வந்தால் மங்கள நாயகியின் கருறையை அடைந்து தேவியை தரிசிக்கலாம்.

மீண்டும் படியிறங்க வேண்டும். இடப்புறம் கோயிலின் கிழக்கே மங்களதீர்த்தம், மங்கள தீர்த்த மண்டபம், குதிரை வீரர்களின் சிற்பத் திருமேனிகள் எல்லாவற்றையும் காணலாம். மங்கள தீர்த்தத்துக்குப் போகும் வழியைக் கீழைவாசல் என்பார்கள். இந்த மண்டபம் பாண்டிய மன்னர்களாலும், தொண்டைமான் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் தென் பகுதியில் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதிக்கு எதிரே, கோபுரத்தோடு கூடிய நுழைவாயில் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

மங்களாம்பிகை சந்நிதிக்கு கீழே, விசாலமான மண்டபம் ஒன்ற அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. இது குலசேகர பாண்டியன் காலத்துத் திருப்பணி என்கிறார்கள். புதுக்கோட்டை பகுதியை தொண்டைமான்களுக்கு முன்னால் ஆண்ட பல்லவராயர்களின் சிலைகள் மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன. தவிர யாளிகள், துர்க்கை போன்ற சிற்பத் திருமேனிகளையும் காணலாம். இம்மண்டபத்தின் மேற்குக் கோடியில் இத்தலத்தின் ஆதிமூர்த்தியாக விளங்கியிருக்கக் கூடிய வகுளவனேசுவரரின் லிங்கத் திருமேனி உள்ளது. பசு வடிவில் வந்து பிறப்பெடுத்த காமதேனுவின் குளம்புத்தடம் இத்திருமேனியில் பதிந்திருப்பதாய்ச் சொல்வார்கள். எதிரே நந்தி ஒன்று, செவ்வக வடிவிலான தொட்டிக்குள் அமைக்கப் பட்டிருக்கிறது. வறட்சிக் காலங்களில், இந்த நந்தி மூழ்கும்படி தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை உண்டு.

வகுளவனேசுவரர் திருக்கோயிலின் பின்புறப் புழையில் லிங்கோத்பவரின் திருமேனியும், வடக்கு நோக்கிய புழையில் பிரும்மாவும், இடம் பெற்றுள்ளனர். தெற்குப்புற புழையில் திருமேனியில்லை. எனினும் அதனருகில் தட்சிணாமூர்த்தியையும், விநாயகப் பெருமானும் அருகருகே இடம் பெற்று அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். தெற்கு வடக்காக நீண்டுள்ள சந்நிதி வீதியிலிருந்து நேரே நடந்தால் இவர்களைத்தான் வந்து சந்திப்போம். உண்மையில் சந்நிதிவீதி என்பதை தட்சிணா மூர்த்தி சந்நிதியாகத்தான் கொள்ள வேண்டும். தட்சிணாமூர்த்திக்கும் விநாயகப் பெருமானுக்கும் வியாழக் கிழமைகளில் காலையில் ருத்ரஜபத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அம்மன் சந்நிதிக்கு வடபுறத்தில் திருவீதியுலாவரும் முருகப் பெருமானின் திருமேனி இடம் பெற்றுள்ளது. அதை அடுத்து வகுளவனேசுவரர் கருவறைக்குத் தெற்கில் ஸோமாஸ்கந்தர், அம்மன் திருமேனிகள் உள்ளன. இவர்களை தரிசித்துவிட்டு, வகுளவனேசுவரர் கருவறையை நோக்கி வடக்குப் பார்த்து உடல் படிய வீழ்ந்து வணங்குவது வழக்கம். அப்படியே வணங்கி எழுந்து தெற்கு நோக்கி நடந்தால் கிணறும், கிணற்றுக்கு கிழக்கே ஒரு தட்சிணாமூர்த்தியின் திருமேனியும் உள்ளன. சற்றே சிதலமடைந்துள்ள வடிவம் எனினும் அழகான கலைப் படைப்பு இது. திருச்சுற்றில் தெற்கு நோக்கி வந்து மேற்கே திரும்புகிற பகுதியில்தான் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் மண்டபம் என்னும் சக்ரவார மண்டபம் உள்ளது. இதை வலம் வந்தால் ஒரு தூணில் சதாசிவபிருமேந்திரர் திருமேனி எண்ணெய்க் காப்பில் பளபளக்கும். பக்கத்திலேயே இந்த அவதூத சந்யாசியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பைச் சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சதாசிவபிரும்மேந்திரர் திருச்சி மாவட்டம் கரூருக்கு அருகில் உள்ள நெரூர் என்னுமிடத்தில் சமாதியடைந்துள்ளார்.

நேரே வந்து பிரகதாம்பிகை அம்மன் சந்நிதியில் வடக்கு பார்த்து வீழ்ந்து வணங்குவதோடு திருச்சுற்று தரிசனம் நிறைவடையும். திரும்புகையில், முன்னே சொல்லப்பட்ட அனுப்பு மண்டபத்தில் சில நிமிடங்கள் அமர்ந்து பின்னரே வீடு திரும்புகிற வழக்கம் உண்டு.
குடவறைக் கோயில் அழகுகள் 
குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. மாமல்லபுரத்தில் உள்ள கல் தேர்கள் மற்ற கலை வடிவங்கள் இப்படி மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டவை. இந்தக் கலையைப் பேணி வளர்த்தவர்கள் பல்லவ மன்னர்கள். திருகோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் கோயிலுக்குச் சென்றால், கோகர்ணேசுவரர் சந்நிதி இப்படிக் குடைவரைக் கலையில் உருவாகியிருப்பதைக் கண்டு மகிழலாம், பிரமிப்படையலாம்.

இது உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு. (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள். இதே போன்ற குடவரைக் கலைச் செல்வங்களைப் புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள சித்தன்னவாசலிலும், குடுமியாமலை, திருமயம் போன்ற இடங்களிலும் காணலாம். சித்தன்னவாசல், குடுமியாமலை இரண்டும் மலைகளின் உயரப் பகுதியில் குடையப்பட்டவை. ஆனால் திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் உருளை வடிவிலான பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவறில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில் கங்காதரமூர்த்தியும் நல்ல ஆதிருதியுடன், அழகுடன் வடிக்கப்பட்டிருக் கிறார்கள். கங்காதரர், தன் செஞ்சாடைக் கற்றையை இடக்கரத்தால் கோதியவாறு நிற்கும் அழகு, கண்டு ஆனந்திக்கப்படவேண்டிய அழகு. இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இறைவனுக்கு முன்புறம் அமைந்துள்ள நந்தி மேடைப் பக்கமாக நின்று, தூண்களுக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் குடைவரைக் கருவறை உருவாகியுள்ள பாறையின் வெட்டுச் சரிவு நன்றாகத் தெரியும். சந்நிதியின் இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப் பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம். இந்தப் பாறைச்சரிவின் அடிப்புறத்தில், தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர் திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும் திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன. பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் உடையவை. இவற்றைக் குனிந்து பள்ளத்துக்குள் பார்த்து நுட்பங்களை அனுபவிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
http://www.sreebragadambal.org/newsite/gallery/sapthakanni.jpg
இந்தச் சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும் இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின் கலைப்பணி என நம்பப்படுகிறது. கி.பி. 1012 இல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திரச் சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் திருக்கோயில் எடுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம் திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடிப் பகதியில் முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இது மாடியில் முருகன் வள்ளி தேவஸேனாவுடன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது.

கட்டுமானங்கள் இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாகக்கப்பட்டுள்ள பாறையின் மேல் பகுதியில் இக்கல்வெட்டு அமையும். முருகன் கோயிலை ஒட்டி வடபுறச் சுவருக்கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது. மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத நீர்வளத்தோடு விளங்குகிறது.

குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. மாமல்லபுரத்தில் உள்ள கல் தேர்கள் மற்ற கலை வடிவங்கள் இப்படி மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டவை. இந்தக் கலையைப் பேணி வளர்த்தவர்கள் பல்லவ மன்னர்கள். திருகோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் கோயிலுக்குச் சென்றால், கோகர்ணேசுவரர் சந்நிதி இப்படிக் குடைவரைக் கலையில் உருவாகியிருப்பதைக் கண்டு மகிழலாம், பிரமிப்படையலாம்.







No comments: