பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 8, 2017

பிற்கால நீதிநூல்களில் மூதுரை


                                                        பிற்கால நீதிநூல்களில்
                           மூதுரை
                         (“வாக்குண்டாம்”)
      பிற்கால நீதிநூல்கள் என்பவற்றில் “மூதுரை” எனும் “வாக்குண்டாம்”, “ஆத்திசூடி”, “நல்வழி”, “உலகநீதி”, “கொன்றைவேந்தன்”, “வெற்றிவேற்கை”, “நன்னெறி”, “நீதிவெண்பா” ஆகிய நூல்கள் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முன்பெல்லாம் தொடக்கப் பள்ளிக்கூட மாணவர்களுக்குச் சொல்லித்தரப்படு, அவைகளை மனப்பாடம் செய்யச் சொல்வர். அப்படி அந்தச் சிறு வயதில் மனனம் ஆன பாடல்கள் மனிதன் கடைசிவரை நினைவில் கொண்டிருப்பர். இப்போதெல்லாம் ஆங்கில “ரைம்ஸ்” வந்த பிறகு “ஜாக் அண்டு ஜில்” “லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டவுன்”, “ரெயின் ரெயின் கோ அவே” போன்றவைகள் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டுவிட்டன. ஆனாலும் எந்தக் காலத்திலும் மேலே சொன்ன நீதிநூல்கள் மக்கள் மனங்களை விட்டு அகலாமல் இருக்கின்றன. மேடைப் பேச்சுக்களில் இந்தப் பாடல்களை எடுத்துக் காட்டி நீதி, நேர்மை பற்றி உரக்கப் பேசுகின்றனர். இவைகளைப் பயில வேண்டாமா இன்றைய இளைய தலைமுறையினர்? போகட்டும் இவைகளை இதுபோன்ற எளிய நூல்களிலாவது படிக்கட்டும். இளம் தலைமுறையினர் பயன்படட்டும் என்று இந்த நூல்களையும், அந்தப் பாடல்களுக்கான எளிய உரையினை கதை வடிவிலும் சொல்லத் துணிகின்றேன். பயன்பெற விரும்புவோர் தங்கள் குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லித் தரலாமே.

“வாக்குண்டாம்” எனும் இந்த சிறார்களுக்கான நூலை மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இதை சிறுவயதில் படிக்காத பெரியவர்களும் இதை நிச்சயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பசுமை நிறைந்த இளம் மனங்களில் இந்த நூலில் காணப்படும் செய்திகள் பசுமரத்தாணி போல் செலுத்தப்படுமானால், அது பின்னாளில் அவர்களுக்கு அவை பயன்படும்.

இதன் ஆசிரியர் ஒளவையார் என தெரிகிறது. தெளிவான நடைகொண்ட நல்ல பாடல்கள். ஒளவையார் என்ற பெயரில் பண்டைய நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்திருப்பார்கள் போலும். இந்த ஒளவையாரின் தமிழ்நடை மிக எளிமையாக இருக்கிறது. கடவுள் வாழ்த்து ஒரு பாடல் தவிர முப்பது பாடல்கள் கொண்டது இந்த “வாக்குண்டாம்”. இதில் என்ன சிறப்பு என்றால், இந்த பொதுநீதி எல்லா காலத்துக்கும் எல்லா மனிதர்க்கும் ஏற்றது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் இந்தப் பாடல்களின் கருத்தையொட்டு நமது முடிவுகளை எடுப்பது என்பது நல்ல பலனைத் தரும். ஒரு முறை அல்ல, பல முறை இவற்றைப் படித்து மனத்தில் பதிய வைத்துக் கொண்டால், சந்தர்ப்பங்கள் நேரும்போதும், கூட்டங்களில் பேசும்போதும் இவற்றை எடுத்துச் சொல்லி விளக்குவது பயனுள்ள காரியமாக இருக்கும். இனி இந்த “வாக்குண்டாம்” நூலுக்குள் மூழ்கி முத்தெடுக்கலாம் வாருங்கள்!

                         விநாயகர் துதி

 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்                               நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு                                 துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்                                     தப்பாமல் சார்வார் தமக்கு.    
                    
நம் பண்பாட்டில் எந்தப் பணியைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானைத் துதிப்பது என்பது வழக்கம்.

இங்கு விநாயகக் கடவுள் நமக்கெல்லாம் முழு முதற் கடவுள். அந்த விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர், நம் பணிகளில் முன்னின்று நடத்தி முடிப்பவர் என்ற நம்பிக்கை உண்டு. சிவபெருமானின் இளைய மகனுக்கும் தினைப்புலம் காக்கும் குறக்குல வள்ளிக்கும் திருமணம் செய்து முடிக்க விநாயகரை அழைத்ததாக நமது புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட விநாயகரை நாம் எந்தத் தொழிலை அல்லது பணியைத் தொடங்கினாலும் முதலில் வழிபட அவரை ஒரு மஞ்சளிலாவது பிடித்து வைத்து வணங்கிய பிறகே தொடங்குகிறோம். அப்படி இந்த “வாக்குண்டாம்” எனும் இலக்கியத்தைப் படைக்கத் துவங்கும் முன்பு ஒளவையார் அவரைத் துதித்துப் பாடும் முதல் இறைவணக்கப் பாடல் இது.

இதில் கவிஞர் விநாயகப் பெருமானை சிவந்த வண்ணமுடையவராகக் காண்கிறார். செம்மை எனும் சொல்லுக்கு சிவப்பு வண்ணம் என்பது தவிர அழகு, நேர்மை, ஒற்றுமை, சுத்தம் எனவும் பொருள் உண்டு. இங்கு வண்ணம் தவிர அவரை மற்ற எல்லா குணநலன்களும் உள்ளவராகப் பார்க்கலாம். அவருடைய அந்தச் சிவந்த முகத்தில் அழகு பொருந்திய துதிக்கை மேலும் அழகு சேர்க்கிறது. அப்படிப்பட்ட மகாகணபதியை மணமுள்ள புதிய மலர்களைக் கொண்டு அவர் புகழைச் சொல்லி அர்ச்சித்து, அவர் பாதங்களை எப்போதும் பணிவோர்க்கு சிறப்பான சொல்வன்மை, பிறர் மீது அன்புகொண்டு நல்லவைகளையே செய்யும் தூய மனம், செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, அனைத்திற்கும் மேலாக நல்ல உடல் நலம் அத்தனையும் தருவார் அந்த கணபதி என்று பாடுகிறார்.

                              நூல்

 நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி                                         என்று தருங்கொல் என வேண்டா – நின்று                                       தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்                                           தலையாலே தான் தருதலால்.                1.

நமக்குத் தெரிந்த ஒருவருக்கு ஏதோவொரு பிரச்சனை. அந்த இக்கட்டான சமயத்தில் அவருக்கு நமது உதவி தேவைப்படுகிறது. நமக்கு ஏன் வம்பு என்று நாம் ஒதுங்கிக் கொள்ளாமல், அவர் ஆயிற்று, அவருடைய பிரச்சனை ஆயிற்று நமக்கு என்ன வந்தது என்று சுயநலத்தோடு இருந்து விடாமல் நாமாகவே முன்வந்து அவருக்கு வேண்டிய உதவியைச் செய்தோமானால், அதிலும் அவர் கேட்டுத்தான் செய்ய வேண்டுமென்பதில்லை, நாமாகவே அவருடைய நிலைமையை உணர்ந்து அவருக்கு உள்ளன்போடு உதவி புரிவோமானால் அது மாபெரும் நற்செயல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு நாமே ஓடிப்போய் உதவி செய்தோமே அதற்கு பிரதிபலனாக அவர் நமக்கு எப்போது என்னமாதிரி உதவியைச் செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. நம் மனம் சொல்லிற்று, நண்பர் சிரமத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவைப்படுகிறது, அந்த உதவியைச் செய்யக்கூடிய நிலைமையில் நாம் இருக்கிறோம், போய் அவருக்கு நாமாக முன்வந்து உதவியைச் செய்கிறோம் அதுவும் பிறருக்குக்கூட தெரியவேண்டுமென்கிற அவசியமில்லாமல் செய்கிறோம், என்றால் அதுதான் உண்மையான உதவி. அப்படிப்பட்ட உதவிக்கு அவரிடமிருந்து கைமாறு எதிர்பார்ப்பது வியாபாரம் ஆகிவிடாதா, இது என்ன பண்டமாற்றா? நான் உனக்கு உதவினேன், நீ எனக்கு உதவ வேண்டும் என்று சொல்வதற்கு. தேவையில்லை. பயன் கருதாத உதவியே உண்மையான உதவி, அப்படிச் செய்ய நல்ல மனம் வேண்டும் எதுபோலத் தெரியுமா?

நீண்ட நெடுமரமாக நூறாண்டு காலம் வாழக்கூடிய தென்னை மரம் இருக்கிறதே அது இளமைப் பருவமான கன்றாக இருந்த காலம் தொட்டு, இன்று நெடிய மரமாக வளர்ந்து விட்ட வரையிலும் இடையறாது நிலத்தடி நீரை அது குறைவானதோ, நிறைவானதோ, அதிகமோ, குறைவோ, கிடைத்ததை உறிஞ்சி வளர்ந்தபின் அதே நீரைத் தன் தலையில் தெங்கங்காயாகக் காய்க்க வைத்து அதனுள் சுவை மிகுந்த இளநீரை நிரப்பி நமக்குக் கொடுக்கிறதே அது எந்த கைமாறையாவது எதிர்பார்த்தா செய்கிறது. அதன் தயை குணம் தான் உண்ட நீரைத் தன் தலையாலே கொடுப்பது, அது கொடுக்கிறது. மனிதர்களாகிய நமக்கும் அதுபோன்ற குணம் இருக்க வேண்டும் என்கிறது இந்த முதல் பாட்டு.

 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்                                         கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத                                   ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்                                         நீர்மேல் எழுத்திற்கு நேர்.                    2.

மனிதருள்தான் எத்தனை மாதிரிகள். நல்லவர்கள், நல்லவர்போல நடிப்பவர்கள், தீயவர்கள், தீமை புரிந்து கொண்டே நல்லவர் போல காட்டிக் கொள்பவர்கள், எதிலும் ஈடுபடாத சுயநலமே மனித வடிவம் கொண்டவராக இப்படிப் பற்பல மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவர்களில் நாம் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ள முடியுமா? சந்தர்ப்ப வசத்தால் நாம் பலருடன் பழக வேண்டிய கட்டாயம், நம் பணியின் நிமித்தமாக, பயணம் செய்யும் போது, ஓரிடத்தில் நாம் வசித்துக் கொண்டிருக்கும்போது என்று பல சந்தர்ப்பங்களில் பல புதிய மனிதர்களுடன் நாம் பழக வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இவர்களைத் தரம் பார்த்து, யாருடன் பழகுவது நல்லது, யாருடன் எந்த தகராறும் செய்து கொள்ளாமல் ராஜதந்திரத்தோடு பழகுவது, எவர் நம் உணர்வுகள், நம்பிக்கைகள், நம் நன்மைகள் இவற்றை மதித்து உண்மையான நட்பு அல்லது உறவு பாராட்டுகிறார்களோ அவர்களுடன் மட்டுமே பழகுவது என்று தீர்மானிப்பது என்பது இயலாத காரியம் அல்லவா?

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறர்க்கு உதவும் நற்குணம் நமக்கிருந்து, அப்படி செய்த உதவியை அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவர் மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அதற்காக வாய் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், மனத்தால் உள்ளார்ந்த நன்றியுணர்வோடு நம்மை நினைத்துக் கொள்ளும் நல்ல மனம் படைத்தோருக்குச் செய்யும் உதவி, நாம் ஆலயங்களில் பார்க்கிறோமல்லவா, கருங்கற்களில் வெட்டி வைத்த எழுத்துக்கள், அதைப் போன்ற அவர் மனதில் நன்றியைத் தன் நெஞ்சில் எழுதி வைத்திருப்பார்கள். காலத்தால் அழியாத அற்புத கல்வெட்டுக்கள் அவை.

மாறாக சற்றும் மனிதாபிமானம், நட்புக்குப் பெருமை தரும் மனம், இவைகள் இல்லாத கல்நெஞ்சு படைத்த மனிதர்க்கு நாம் செய்த உதவி செய்த அடுத்த கணமே, அவ்வளவு ஏன், உதவியைச் செய்யும்போதே மறந்து விடும் கயமை சுபாவம் அவர்களுக்கு உண்டு. அடுப்பில் நெருப்பில் வைத்த சுடுசட்டியில் சிறிது நீர் தெளித்தால் அடுத்த கணம் அது மறைந்து விடுவதைப் போல, நதியில் ஓடுகின்ற நீரின் மீது கவிதை எழுதி படிக்க முயன்றால் எழுதும் எழுத்து எப்படி அடுத்த கணமே மறைந்து போகிறதோ அப்படி மறைந்து போய்விடும். நாம் செய்யும் நன்றிக்குக் கைமாறு என்பது அங்கு ஒரு சிறு துளியும் இருக்காது என்பது இந்தப் பாட்டின் கருத்து.

 இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்                                   இன்னா அளவில் இனியவும் – இன்னாத                                       நாளல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே                                     ஆளில்லா மங்கைக்கு அழகு.                3.

வாழ்க்கையில் பிறந்தது முதல் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நல்லவற்றையும் தீயவற்றையும் கலந்துதான் எதிர்கொள்கிறோம். எனக்கு நன்மையே நடக்க வேண்டுமென்று நினைத்தால் அது நடக்குமா, இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. அப்படி நாம் எதிர்கொள்ளும் துன்பங்களில் கொடிய துன்பங்கள் என சிலவற்றை இனம்பிரித்துப் பார்க்க முடியும். சாதாரண துன்பங்களை எளிதில் எதிர்கொள்ள முடிந்த நம்மால் இதுபோன்ற கொடிய துன்பங்களையும் எதிர்கொள்ளவோ, அவற்றைத் தாங்கிக் கொண்டு சமாளிக்கவோ முடியுமா என்பது சந்தேகம் தான்.
அப்படி நாம் எதிர்கொள்ளும் சில துன்பங்கள் இளமைப் பருவத்தில் நமக்கு ஏற்படும் வறுமை முதன்மையானது. இளம் வயதில் நம் வயதொத்தப் பிள்ளைகள் நல்ல உடைகள், நல்ல உண்டவு, செளகரியமான வாழ்க்கை, பெற்றோர்களின் அரவணைப்பு இப்படி வாழும்போது நாம் மட்டும் இவை எதுவும் இல்லாமல் விரும்பிய உணவு கிடைக்காமல், பிறரைப் போல ஆடம்பரம் இல்லாவிட்டாலும் பார்வைக்கு கெளரவமான உடைகள் இல்லாமலும், தங்க வசதியான இடங்கள் இல்லாமலும், கல்வி கற்க செல்வம் இல்லாமலும் சிரமப்படும்போது நம் மனம் படும் துன்பத்தை அளவிட்டுச் சொல்ல இயலுமோ? “கொடிது கொடிது இளமையில் வறுமை” இந்த வரிகளை நாம் முன்பே கேட்டிருக்கிறோம் அல்லவா? ஆம்! இளம் பருவத்தில் வறுமை என்றால் அது துன்பம்.
இளமையில் நமக்கு எத்தனையோ கனவுகள், ஆசைகள். அவைகள் நிராசைகளாக ஆகிவிட்ட நிலையில் வயது முதிர்ந்த பருவத்தில் எவைகள் எல்லாம் நம்மால் அந்த முதுமையில் அனுபவிக்க முடியாதோ அந்த இன்பங்கள் நமக்கு இன்பமாகவா இருக்கும்? துன்பத்தைத்தான் தரும். பற்கள் அனைத்தும் போய் பொக்கையாக இருக்கும் பருவத்தில் கடின பதார்த்தங்களான சீடை, முறுக்கு இவற்றைக் கொண்டு வந்து நம் முன் வைத்தால் என்ன பயன்? அந்தந்த பருவத்துக்கு எவைகள் எல்லாம் தேவையோ, அவைகள் கிடைப்பதாக இருந்தால் வாழ்க்கை இனிமையுடைத்து, இல்லையென்றால் துன்பம் தான்.
இப்படி அமைகின்ற வாழ்க்கையை எதனோடு ஒப்பிடலாம் என்றால், காலம் கெட்ட காலத்தில், அதாவது எப்போது மலர வேண்டுமோ அப்போது மலராமல், எப்போது மலரக்கூடாதோ, அல்லது மலர்ந்தாலும் நுகரமுடியாதோ அப்போது மலரும் மலருக்கு ஒப்பாகும். விடியற்காலையில் சூரிய உதய காலத்தில் மலர்ந்த மலரின் இதழ்களில் பனித்துளிகள் படர்ந்து காணப்படும் காட்சி இனிது. அதுவே உச்சி வெயிலில் மலர்ந்து துவண்டு மணம் வீசாமல் இருப்பதை நம்மால் ரசிக்க முடியுமா?

அதைப்போல்தான் பெண் என்றால் அவள் பருவமெய்தியதும், அவளுக்குத் தகுந்த மணாளனைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்திடல் வேண்டும். கொடிகள் வளரும்போது அது படரும் வகையில் கொடி வளரும்போது அதற்கு கொழுகொம்பு தேவை. அப்போது அது தானாக அந்த கொழுகொம்பில் தழுவிப் படர்ந்து ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி அழுந்தி வளர்ந்து விடும். அதுபோலவே பெண்கள் பருவ காலத்தில் ஒரு துணை தேடிக் கொண்டால் இல்லறம் நல்லறமாக ஆகும், வாழ்க்கையும் சிறக்கும். எந்தெந்த வேலைகளை எப்போது செய்ய வேண்டுமோ அப்போது செய்வது சிறப்பு. காலங்கெட்ட காலத்தில் செய்யும் பணிகள் எவையும் சிறக்காது என்பது கருத்து.

 அட்டாலும் பால் சுவையில் குன்றாது; அளவளாய்                             நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்;                                         கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு                                     சுட்டாலும் வெண்மை தரும்.                      4.

அப்போது கறந்த பசும்பாலை அடுப்பில் பாத்திரத்திலிட்டு காய்ச்சும்போது, நேரமாக ஆக அது சுண்டிப் போய் கெட்டியாகத் தொடங்கும். அது காய்ச்சக் காய்ச்ச அதன் சுவை அதிகமாகுமே யன்றி குறைவு படாது. அது போலவே மனிதர்கள் படைப்பில் அனைவருமே செல்வந்தராக, வசதிகள் படைத்தவர்களாக படைக்கப்படுவதில்லை. அவரவர் நிலைமைக்கேற்ப வசதி படைத்தவராகவோ, வறியவராகவோ இருப்பது நாம் தினமும் காணுகின்ற காட்சிதான். எனினும் நல்ல நிலையில் இருந்து பிறகு சந்தர்ப்ப வசத்தால் வறுமை நிலை அடைந்த பின்னரும், தனது மேன்மையான குணங்களை விடாமல் காப்பாற்றி வருவர் மேன்மக்கள். ஆனால், கீழ்மக்களொ வளமை இருக்கும் வரை பெருந்தன்மையுடையவர் போல நடந்து கொண்டு, காலம் கேடு செய்யுமானால் அவரவர் கீழ்புத்தியைக் காட்டுபவராக மாறிவிடுவர். மேன்மகள் எனப்படுவோர் எந்த நிலையிலும் மேன்மக்களாகவே வாழ்வர்; கீழதுகள் சமயம் வந்தால் தங்கள் வண்ணத்தைக் காட்டிவிடுவர்.

சங்கு வெண்மையானது. அது எப்போதும் தன் பரிசுத்தமான வெண்மை நிறத்தோடுதான் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட சங்கை தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் வெண்மை மாறாது. தீயின் சுட்டதனால் அதன் நிறம் மாறிவிடுவதில்லை; அப்படிப்பட்ட உயர்ந்த குணமுடையது சங்கு.

நட்பு என்பது அவரவர் தராதரம் பார்த்து பழகிக் கொள்வது. நம் பழக்க வழக்கங்கள், நம் குணாதிசயங்கள் போன்ற பல உணர்வுகளோடு ஒத்துப் போகக்கூடியவர்கள்தான் நல்ல நட்பாக இருப்பர். அப்படி இல்லாமல் சற்றே ஏறுமாறாக இருப்பார்களாயின் அந்த நட்பு நட்பாக இருக்காது. நம் நலனில் அக்கறை இல்லாதவர்கள் நட்பு நமக்குத் தீங்கைத்தான் தரும். நம்மையும் தங்களைப் போலவே கருதி ஓடிவந்து நமக்குத் துணை நிறக்கக் கூடியவர்கள்தான் நல்ல நண்பர்கள். எனவே என்னதான் நெருங்கிப் பழகினாலும், இப்போதைய நிலைமையைப் போல மாமன், மச்சி என்றெல்லாம் உறவுமுறை சொல்லி ஈருடல் ஓருயிர் போல நடித்துப் பழகினாலும், பண்பாளர்களின் நட்பு போல அவை அமைந்து விடாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை விளக்குவதுதான் இந்தப் பாடல்.

 அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி                                       எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த                                           உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்                                   பருவத்தால் அன்றிப் பழா.                   5.

அந்தத் தோட்டத்தில் பல்வகை மரங்கள். ஓரிரண்டு ஆண்டுகளில் பலன் கொடுக்கும் மரங்களிலிருந்து வெகு நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் பூ வைக்கும் அரிய வகை மரங்களும் அங்கு இருந்தன. மரங்களின் வகைகளும், அவை பயனளிக்கத் தொடங்கும் காலத்திலும், ஒவ்வொரு வகை மரமும் எத்தனை காலம் இருந்து பயனளிக்கும் என்பதில் எல்லாம் வேற்றுமைகள் உண்டு. ஓரிரு ஆண்டுகளில் பூத்துக் காய்த்துப் பலனளிக்கும் மரங்கள் விரைவில் பட்டுப்போய் விடுவதும், வெகு நாட்கள் கழித்து பலனளிக்கும் மரங்கள் பல்லாண்டுகள் பலன் அளித்துக் கொண்டிருப்பதும் பெரியோர்கள் சொல்லிக் கேட்டதுண்டு.

அப்படிப்பட்ட மரங்களின் தன்மை பற்றி அறிந்த அந்தத் தோட்டக்காரர் ஒவ்வொரு மரத்தையும் பற்றி மிக அழகாக விளக்கிக் கொண்டு வந்தார். இதோ பாருங்கள் இந்த மரம் ஐந்தாண்டுகளில் நன்கு வளர்ந்து பலன் அளிக்கத் தொடங்கிவிடும் என்பார். சில மரங்களைக் காட்டி, பாருங்கள் அது நான் சிறு வயதாக இருக்கும்போது வைக்கப்பட்ட மரம், இன்னமும் அது காய்க்கத் தொடங்கவில்லை என்றபோது அதிசயிக்கத் தோன்றியது. மரங்களிலும் இத்தனை வகைகளா? ஆம்! மரங்களில் உடனடி பலன் தரும் மரங்கள், நீண்ட காலம் கழித்து பலன் தரும் மரங்கள் என்பதெல்லாம் உண்டு. அந்தந்த மரங்கள் எப்போது பூத்து, காய்க்க வேண்டுமோ அப்போது நிச்சயம் காய்க்கும் என்பதை அந்தத் தோட்டத்துக்குச் சென்ற பிறகு அறிந்து கொள்ள முடிந்தது. காய்க்க வேண்டிய காலம், பருவம் வந்தால்தான் அந்தந்த மரங்கள் காய்க்கும், பலன் தரும் என்பது புரிந்தது. கோடையில் தான் மாமரம் பலன் தரும். சித்திரையில் தான் பலா பழுத்துப் பலன் தரும் என்பது போன்ற தகவல்கள் தெரிந்தது.

அது போலவே நாம் ஒரு செயலை எடுத்துக் கொண்டால், அது எப்போது செய்து முடிக்கப்படும், எப்போது வெற்றி கிடைக்கும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. இடைவிடாது முயற்சி செய்து கொண்டே இருந்தால் அந்த முயற்சி வீண் போகாமல் அது முடிய வேண்டிய நாளில் நிச்சயம் முடியும் என்கிறது இந்தப் பாடல்.

 உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்                               பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கற்றூண்                                 பிளந்திறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்                                 தளர்ந்து வளையுமோ தான்.                       6.

சமூகத்தில் மனிதன் பெருமைக்குரியவனாக, பிறரால் போற்றி பாராட்டப்படு பவனாக மானமுள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர, எப்படியும் வாழலாம் என்று சிறுமைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு வாழலாமா? அப்படி வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? மானமே உயிர் என்று வாழ்கின்ற உயர் மனிதர்கள் தங்களுக்கு ஏதேனும் அவமானம் ஏற்பட்டால், ஊரார் முன்னால் சிறுமை ஏற்பட்டுத் தலைக்குனிவு ஏற்படுமானால், உயிரை விட்டுவிடுவார்களே தவிர அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்று இருக்க மாட்டார்கள். “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்” என்று அத்தகையவர்களைப் பெருமைப் படுத்துகிறார்கள் பெரியோர்கள்.

அப்படிப்பட்ட அனிச்ச மலரையொத்த மேலோர்கள் எதிர்களிடம் பணிந்து போய் விடுவார்களா என்ன? இயற்கையில் தன் மானமும் நேர்மை குணமும் வாய்க்கப் பெற்றவர்கள் எதிரிகளிடம் பணிந்து போய் எவ்வகையேனும் உயிர் வாழ்ந்தால் போதுமென்று இருக்க மாட்டார்கள். அப்படி இயலாத நிலை வந்தால் உயிர் நீப்பரே தவிர கோழைகளைப் போல அடிபணிந்து போக மாட்டார்கள். இவர்களை எதனோடு ஒப்பிடலாம்?

வலிமை மிக்க ஓர் சிறப்பான கல் மண்டபம். அதனைத் தாங்குவன கற்றூண்கள். அதிக பாரத்தைச் சுமக்க வல்ல வலிமை மிக்கக் கற்றூண்கள். அதன் மீது அளவுக்கு மீறி பாரம் ஏற்றப்படுமானால் என்னவாகும். அது வளைந்தா கொடுக்கும், கொடுக்காது அல்லவா, தன் உயிரே போனாலும் வளையாத மானமுள்ள நேர்மையாளனைப் போல அந்தக் கற்றூண் பிளந்து நொறுங்கிப் போகுமே அன்றி வளையாது அல்லவா? அதைப் போலத்தான் என்கிறது இந்தப் பாடல்.  
 
 நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்; தான் கற்ற                                       நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – மேலைத்                             தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்                                   குலத்தளவே ஆகும் குணம்.                       7.

அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் ஓர் அழகிய தடாகம். அதில் ஏராளமான அல்லி மலர்கள். மழை காலத்தில் அந்தத் தடாகம் நீர் நிரம்பி வழியும், கோடை காலத்தில் நீர் வற்றி நீர்மட்டம் குறைந்து அடிமட்டத்தில் இருக்கும். அப்போதெல்லாம் நீரின் அளவு எதுவரை இருக்குமோ அந்த அளவுக்கு அல்லி மலர்களும் நீர்மேல் நிற்கும். நீர் மட்டம் குறைய குறைய மலர்களும் அதோடு நீர் மட்டத்திற்குப் போய்விடும்.

அதைப் போலவே ஒருவன் தான் கற்கும் கல்வியைப் பொறுத்தே அவன் அறிவு வளர்ச்சியும் இருக்கும் எத்தனைக்கு எத்தனை அரிய நூல்களைக் கற்கிறானோ அந்த அளவுக்கு அவன் அறிவு வளர்ச்சியும் இருக்கும். தகுதியும், அறிவும் படைத்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து எவை நல்லவை, எவை தீயவை, எவற்றையெல்லாம் செய்யலாம், எவற்றையெல்லாம் தவிர்க்கலாம் என்பதை நன்கு உணரச் செய்திருப்பார்களானால் நாமும் அவர்களைப் போலவே நற்குணங்களும், நற்செயல்கள் செய்பவர்களாகவும் வாழ முடியும். அறிவில் சிறந்த ஆசிரியரை, வழிகாட்டியைப் பெறுவதன் மூலம் தான் நாம் வாழ்வில் எப்படிப்பட்ட தகுதிகளைப் பெறமுடியும் என்பதை நிர்ணயிக்க முடியும். பெரியோர்கள் வழிகாட்டுதல், நல்ல நூல்களைக் கற்றல் இவைகள்தான் நம் வளர்ச்சிக்கு அஸ்திவாரம். அதை முறையாகப் பெற்று விட்டால், நம் வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று நல்லவனாக இருப்பவர் சிலர் வசதியாக, செல்வச் செறுக்குடன் வாழவில்லையே, நல்லவராக இருந்து என்ன பயன் என்று கேட்போம் இல்லையா? அது போலவே எல்லா தீய குணங்களும் இருந்தும் ஒருவன் நல்ல நிலையில் வாழ்கிறானே அது எப்படி எனும் சந்தேகமும் நமக்கு வருகிறது இல்லையா? ஆம்! அதெல்லாம் அவன் முற்பிறவியில் செய்த நல்ல அல்லது தீய காரியங்களின் பலனேயாகும். முற்பிறவியில் செய்த தவம், அவனுக்கு இப்பிறவியில் வாழ்க்கை அமைகிறது, செல்வம் கிடைக்கிறது, வாழ்க்கை அமைகிறது. அவரவர் செய்த செய்கைகளே மறு பிறவியில் அவர்களுக்கு பயன்களாகக் கிடைக்கின்றன.

நாம் பழகுகிறவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருப்பதில்லை. சிலர் நல்லவர்களாக, நம் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். சிலர் பழகக்கூட ஏற்றவர்களாக இல்லாமல் நற்குணங்கள் என்பதே இல்லாதவர்களாக இருப்பார்கள். காரணம் என்ன? அவர்கள் வந்த வழி அது. அவருடைய குணம், அவருடைய தாய் தந்தையர், பாட்டன் பாட்டி என்று வழிவழி வரும் குணமாக இருக்கும். நற்குணம் தீயகுணம் என்பது அவரவர் பிறந்த பாரம்பரியத்தின் வழி வருவது என்கிறது இந்த ஏழாம் பாடல்.

 நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க                                   நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்                                   குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு                                     இணங்கி இருப்பதுவும் நன்று.                      8.

வாழ்க்கையில் நல்லவர் யார் தீயவர் யார் என்பதை நாம் ஓரளவு புரிந்துதான் வைத்திருப்போம் இல்லையா? தெர்ந்தே தீயவருடன் நாம் நட்பு கொள்வோமா? சந்தர்ப்பம் சூழ்நிலைகள் காரணமாக தீநட்பு நமக்கு ஏற்பட்டாலொழிய நல்லவர்கள் நட்பைத்தான் நாம் விரும்பி ஏற்போம். நற்குணங்கள் உடைய, நமக்கு நன்மைகள்தான் நடக்க வேண்டுமென்று விரும்புவர்கள் நல்லவர்கள். குணத்தால், நடத்தையால் நல்லவர்கள். அப்படிப்பட்டவர்களோடுதான் நாம் பழக வேண்டும் அப்போதுதான் அவர்களது நல்ல குணங்கள் நமக்கும் வரும். இல்லையேல் தீயோர் நட்பு தீமைகளைத் தரும் என்பதோடு தீய குணங்கள் நம்மையும் மெல்ல மெல்ல தீயோனாக ஆக்கிவிடும்.

யார் நல்லவர்கள்? நம் மீது அக்கறை கொண்டவர்கள், நமக்கு நல்வழி காட்டி ஆலோசனை சொல்பவர்கள், நல்லது எது தீயது என்பதை அறிந்து நமக்கு வழி காட்டக் கூடியவர்கள், மனதால், சிந்தனையால், செயலால் நல்லவற்றை மட்டுமே நினைத்தும் செயல்படுத்தியும் வருபவர்கள் நல்லோர். நல்லோர் அன்பு உள்ளவர்கள், அறவழியைப் பின்பற்றுபவர்கள், இளைத்தோர் நலம் வேண்டுபவர்கள். தீயோர் எனப்படுவோர் இவைகளுக்கு எதிரான கொள்கைகள் உள்ளவர்கள்.

எனவே நல்லவர்களைத் தொடர்பில் வைத்திருப்பதும், அவர் சொல்லும் நல்ல வழிகளைப் பின்பற்றுவதும் நல்லது. அப்படிப்பட்ட நல்லோர்களுடைய மனத்தின் திண்மையை, உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது நல்லது. அப்படிப்பட்ட நல்லவர்களின் நட்பை நாடிப் பெற்று வளர்த்துக் கொள்வது அதனினும் நல்லது.

தீயோரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற                                        தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்                                        குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு                                      இணங்கி இருப்பதுவும் தீது.                  9.

முந்தைய பாடலில் நல்லாரோடு இணங்கி இருப்பது பற்றி பார்த்தோம், இந்தப் பாடலில் தீயோரிடமிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பார்க்கலாம்.    

தீயோர் என்று யாரைச் சொல்கிறோம்? தீய குணங்கள் உள்ளவர்கள் பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள், அப்படிப்பட்டவர்களுடனான சேர்க்கையை நாம் உடனடியாக விலக்கிக் கொண்டே ஆகவேண்டும். காரணம், தீயார்களோடு நாம் இணங்கியிருப்பதால் நமக்கும் அந்தத் தீய குணங்கள் வந்து சேரும். விளைவு நாளடைவில் நாமும் ஒரு தீயவனாக மாறிட நேர்ந்து விடும். யாராவது தீயவனாக இருக்க விரும்புவார்களா? இருண்ட மனமும், தீய உள்ளமும் உள்ளவர்கள் நிச்சயம் தீயவர்களாகத்தான் இருப்பார்கள். மனிதரில் யார் நல்லவர், யார் தீயவர் என்று எப்படி அறிந்து கொள்வது? ஒரு சிறிய பொழுது பழகினாலே போதும் யார் தீயவர் யார் நல்லவர் என்பதை அறிந்து கொள்ள. அப்படி ஒருவரை அறிந்து கொண்டபின் நல்லவரோடு இணங்கி இருக்கவும், தீயவரோடு விலகி இருக்கவும் நாம் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

அப்படிப்பட்ட தீயவர்கள் நம் கண்ணில் பட்டுவிட்டால், கூடியவரையிலும் அவர்களிடமிருந்து அவர்கள் பார்வையில் படாமல் விலகிச் செல்லுதல் நன்று. அப்படி அவர்களிடம் பேசும்படி நேர்ந்துவிட்டாலோ, அவர்கள் சொல்லுவதை யெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கேயே விட்டுவிடுவது நன்று. தீயவர்களை வழியில் கண்ட செய்தியையும், அவர்கள் சொன்ன தீயவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு அவற்றைப் பற்றி பிறரிடம் பேசாமல் இருப்பது நன்று. அவற்றை அப்போதே அங்கேயே மறந்து விடுவது நன்று. எந்த காரணம் கொண்டும் தீயவர்களோடு சேர்ந்து கொண்டு எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நன்று. அதனால்தான் திருவள்ளுவரும் “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்” என்கிறார்.

 நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்                              புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்                               நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு                                 எல்லார்க்கும் பெய்யும் மழை.                     10.

மனிதனின் விருப்பத்திற்கேற்ப மழை பொழியுமா? மனிதருள் நல்லவர் கெட்டவர் என்று பார்த்து பூமியில் செயல்கள் நடைபெறுமா? அது எப்படி சாத்தியம். ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அறிந்து கொள்ளாமல் விளைவுகள் அவனுக்கு நல்லதாகவோ, தீயதாகவோ எப்படி கிடைக்கும். அப்படித்தானே நாம் நினைக்கிறோம். ஆனால் ஒருவன் நல்லவனா, தீயவனா என்பது நமக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம். எங்கும் பரந்து விரிந்து வியாபித்து, படைத்துக் காத்து அழித்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சக்திக்கு நம்மில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்பது தெரியாமல் போகுமா? தெரியும், தெரிந்து கொண்டு நாம் செய்யும் காரியங்கள் எப்படியோ அப்படி நமக்குப் பலன்களைக் கொடுப்பான். கேடு நினைப்பவனுக்கு கேடுதான் வந்து சேரும். நன்மை செய்வானுக்கு நன்மைகள் நடக்கத்தான் செய்யும். இது இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மனிதக் கூட்டத்தில் நல்லவரையும், தீயவரையும் தரம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையின் பணி நின்று போகாதா? இத்தனை பெரிய கூட்டத்தில் ஒரேயொரு நல்லவன் இருந்தாலும் போதும், அவனுக்கு இடையூறு இழைக்க முடியுமா? ஆகையால் போகட்டும் அவன் ஒருவனுக்காக அத்தனை பேருக்கும் மழையைக் கொண்டு வந்து பொழிகிறான் இறைவன். இன்றைக்கும் மக்கள் சொல்லும் கருத்து, நல்லவர்கள் இருப்பதால்தான் மழையும் பருவம் தவறாமல் பொழிந்து கொண்டிருக்கிறது. அப்படி சில பருவங்கள் மழை தவறிப் போகிறதே அது ஏன்? அதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களை நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும், பொதுவாக மக்களிடம் அளவுக்கு அதிகமாக பாவச் செயல்கள், மோசடிகள், தவறுகள் நடைபெறத் தொடங்கிவிட்டதால் இயற்கையும் கூட இங்கு மழையைப் பொழிவிக்க மறந்து விடுகின்றன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆகையால், இவ்வுலகின் இயக்கம் ஒழுங்காக, தவறுகளின்றி, காலத்தே மழை பொழிந்து, மக்கள் வாழ்க்கை சிறந்திட யாரோ ஒரு நல்லவருக்காவது மழை பொழிந்தே தீரும். ஆகையால்தான் மக்கள் உயிரோடு வாழ முடிகிறது. அந்த நல்லவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.  

இது எப்படி இருக்கிறதாம்? துறவுக் கிணற்றில் கவலையேற்றம் போட்டு பெரிய கூடையில் நீரைச் சேந்தி வாய்க்காலில் வடித்து ஓடச் செய்து அதை வயல்களில் பரவச் செய்கிறோமே, அப்போது அந்த வாய்க்கால் வழியாக ஓடுகின்ற தண்ணீர் வயலில் உள்ள பயிர்களுக்கு மட்டும்தான் உதவுவோம், வழிநெடுக வளர்ந்து கிடக்கும் புற்களுக்கு அல்ல என்றா சொல்கிறது. பயிருக்கென செல்லும் நீர் வழிநெடுக புற்களுக்கும் அல்லவா பயன்படுகிறது. பயிர்கள் வாழ்வது போல அந்தப் புற்களும் வாழ வைப்பது போல நல்லவர்கள் வாழ்வதால் அனைவரும் நன்மை அடைகின்றனர் என்பது கருத்து.

 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்                                         விண்டு உமி போனால் முளையாது ஆம் – கொண்டபேர்                         ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி                                     ஏற்ற கருமம் செயல்.                             11.

விதை நெல்லை வயலில் தூவி நாற்று உண்டாக்கி அதனை நட்டால்தான் அது வளர்ந்து விளைச்சல் கொடுக்கும். நெல்லின் மேல் மூடியிருப்பது உமி என்பார்கள். நெல்லைக் குத்தி உமியைப் புடைத்தெடுத்துதான் சோறு சமைப்பார்கள். உமியோடு கூடிய நெல்லை சமைத்தல் இயலாது. உமியோடு கூடிய நெல்லைத்தான் வயலில் இட்டு பயிர் செய்ய முடியும். நெல்லைப் பயிர் செய்வது அதனுள் இருக்கும் அரிசியை எடுத்து உணவுக்காகப் பயன்படுத்துவதற்காகத்தான். நெல்லிலுள்ள உமியை நீக்கியபின்தான் அரிசி உணவுக்குப் பயன் தரும். அப்படி உமி நீக்கிய அரிசியை விதைத்து பயிர் செய்ய முடியுமா, முடியாதல்லவா. உணவுக்குப் பயன்படுத்த முடியாத உமியோடு கூடிய அரிசிதான் நமக்குப் பயன் தரும்.

அது போல ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு எத்துணை வலிமை பொருந்தியவராக இருந்தாலும் அவர் வலிமைக்கேற்ற அளவுதான் செயல்களை செய்து முடிக்க முடியும். தனது வலிமைக்கும் மேற்பட்ட சக்தி தேவைப்படும் வேலைகளை செய்து முடிக்க மேலும் வலிமையுள்ள துணையை நாடித்தான் செய்ய முடியும். இன்ன தொழிலை செய்து முடிக்க இந்த அளவு செயல் திறன் வேண்டுமென்று இருக்கின்ற போது, ஒருவன் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்து முடிக்க வேண்டுமானால், தேவையான அதிகப்படி சக்தியையுடைய துணையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்                                       உடல் சிறியர் என்று இருக்க வேண்டா – கடல் பெரிது                             மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்                                     உண் நீரும் ஆகிவிடும்.                           12.

தாழம்பூ ஒரு வகை கள்ளிச் செடியில் உருவாகிறது. அதன் மடல்கள் பெரிதாக இருக்கும், தாழம்பூ வாசமுடையது. மகிழம்பூ உருவத்தில் மிகச் சிறியது. மரத்தில் மலரும் இந்த சிறிய மலர் வாசத்தில் மிக உயர்ந்தது. தாழம்பூவை விட உருவில் மிகச் சிறியதாக இருக்கிறது என்பதற்காக மகிழம்பூவின் வாசம் குறைவானது என்று கருத முடியுமா? முடியாதல்லவா.

அது போலத்தான் உருவு கண்டு எள்ளாமை வேண்டும். உருவத்தில் மிகச் சிறியவர் என்பதற்காக அவருடைய திறமையை, பெருமையைக் குறைவாக எடை போட்டு விடக் கூடாது. அது போலவே உருவில் பெருத்த சரீரமுடையவர்கள் உருவத்தில் பெரியவர் என்பதற்காக செயற்கரிய சாதனைகளைச் செய்து முடிக்கக் கூடியவர் என்றும் எடை போட்டுவிடக் கூடாது. உருவத்தை வைத்து ஒருவரின் திறமையை கணிக்கக் கூடாது, எப்படி மகிழம்பூ தாழம்பூவை விட உருவில் சிறியது என்பதனால் வாசனையில் குறைவு இல்லையோ, அப்படி.

கடல் மிகப் பெரியது, அது நீரால் நிறைந்தது. அதன் நீர் உப்பு நீர், கரிக்கும். நம் உபயோகத்துக்குக் கடல் நீர் உபயோகப்படாது. ஆனால் கரையில் தோண்டப்பட்ட ஊற்று நீர் நல்ல நீராக இருக்கும், அது நமது உபயோகத்துக்குப் பயன்படும். எனவே உருவில் பெரிய கடல் நீரின் பயன்பாட்டைக் காட்டிலும், கரையில் தோண்டப்பட்ட சிறு ஊற்றின் நீர் நமக்குப் பயன்படும் என்பதை உணர்தல் வேண்டும் என்கிறது இந்தப் பாடல்.

 கவை ஆகிக் கொம்பு ஆகிக் காட்டகத்தே நிற்கும்                                 அவை அல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே                                   நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய                                   மாட்டாதவன் நல் மரம்.                     13.

நீண்டு நெடிது வளர்ந்த மரங்கள் பற்பல கிளைகளாகப் பிரிந்து அதிலிருந்து ஏராளமான கொம்புகள் பிரிந்து இலையும், தழையுமாகத் தளிர்ந்து வளர்ந்து காடுகளில் நிற்பதைக் காண்கிறோம். காடுகளில் இயற்கை சூழ்நிலையில் எந்த ஊறும் இன்றி வளரும் அந்த மரங்கள் அடர்ந்து வளர்ந்து பெருத்திருக்கும். அவைகளை மரங்கள், அதாவது எதையும் உள்வாங்கிக் கொண்டு அல்லது உள்வாங்கிக் கொண்ட கருத்துக்களை வைத்து அதன்படி நடந்து கொண்டோ, அறிவுள்ள உயிர்கள் போல அவற்றால் செயல்பட முடியுமா. நீண்டு நெடிது வளர்ந்த மரங்கள் பார்க்க பெரிதாக வளர்ந்து நிற்கும் அவ்வளவே!

அப்படி காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்கள்தான் மரங்கள் எனச் சொல்லத் தகுந்தவையா அல்லது கற்றவர்கள் நிறைந்த சபையொன்றில் ஒரு மனிதனிடம் ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்து அதில் எழுதப்பட்டுள்ள வரிகளைப் படி என்று சொன்ன போது, அதனைப் படிக்கத் தெரியாமல் அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டு நிற்கிறானே அவனை மரம் என்று சொல்லத் தக்கவனா? மரம் என்பது சிந்தனை, செயல், புரிதல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இல்லாத ஓர் உயிரினம். ஆனால் மனிதன் மேற்சொன்ன அனைத்தையும் உடைய ஆறறிவு படைத்த உயிர். இதில் முதலில் சொன்னது மரமா, அத்தனை அறிவு படைத்தும் பொதுச் சபையில் ஒரு ஓலையைப் படிக்க முடியாத அளவுக்கு கல்வி அறிவு இல்லாத ஒருவன் மரமா? இதுதான் இங்கு கேள்வி.

கல்வி அறிவு இல்லாமல் சான்றோர் கூடிய அவையில் படிப்பறிவு இல்லாமல் திகைத்துப் போய் நிற்பவனே மரம், காட்டில் நீண்டு நெடிது வளர்ந்த மரங்களை மரங்கள் என்று சொல்வதற்கில்லை.

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி                                          தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்  தன்                                 பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே                               கல்லாதான் கற்ற கவி.                            14.

கானகத்தில் சுதந்திரமாக வாழ்ந்து பறந்து திரிந்து, நேரம் வந்தபோது தன் அழகிய தோகையை விரித்து ஆடுகின்ற மயில் ஒன்று. வானம் இருண்டு மழை வரும்போன்ற சூழலில் அமைதியான அந்த வனாந்தரத்தில் அது தன் தோகையை பரந்து விரித்து, வண்ண விளக்குகளுடன் கூடிய அலங்கார மேடையில் ஆடை ஆபரணங்களுடன் ஒரு ஆடல் அழகி ஆடுவதைப் போல அது ஆடும் அழகைப் பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். அப்படி ஆடுகின்ற அழகை மனிதர்கள் மட்டுமா, வனாதரத்திலுள்ள இதற உயிரினங்களும் பார்க்கின்றன. அவைகளால் எல்லாம் அந்த மயிலைப் போல ஆட முடியுமா?

வான்கோழி என்றொரு வகையான காட்டுப் பறவை. அது அழகு இல்லாத ஒரு ஜீவன். மயிலைப் போல அற்புதமான வண்ணமயமான சிறகுகளும் இல்லை. தோகைகளும் இல்லை. அப்படிப்பட்ட அவலட்சணமான வான்கோழிக்கு கானகத்து மயில் ஆடுவதைப் போல தானும் ஆட வேண்டுமென்கிற ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது மயில் தோகை போல தனக்குத் தோகை இல்லாவிடினும் அவை தோகையுடன் ஆடினால், நான் எனக்கு உள்ள இறகை விரித்து ஆடுகிறேன் என்று தன் அவலட்சணமான இறகை விரித்து ஆடுகிறது. அதைப் பார்க்க எப்படி இருக்கும். மயிலின் அழகிய ஆட்டத்தின் முன் இந்த அவலட்சண ஆட்டம் பார்க்கும்படியாகவா இருக்கும்?

அதைப் போலத்தான் நன்கு கல்வி கற்ற அறிஞர் பெருமக்கள் மேடையில் பல கவிதைகளையும், காப்பியங்களின் நயங்களையும் விரிவாகப் பொருளுரைத்து உரையாற்றுகிறார்களே அதைப்போல தானும் செய்ய வேண்டும் என்கிற ஆசையால் கல்வி கல்லாத ஒருவன், ஏதோ வொரு கவிதையைக் கற்றவர் ஒருவர் சொன்னதைக் கேட்டுத் தானும் அவரைப் போல இலக்கியச் சுவைச் சொட்டச் சொட்ட பேசுவதாக நினைத்துக் கொண்டு உரையாற்றுவானாகில் அது எப்படி இருக்கும். குயிலின் இசையைக் கேட்டவன் கர்த்தபத்தின் குரலைக் கேட்பது போல அல்லவா இருக்கும். கானகத்தில் தோகை விரித்தாடும் மயிலைப் பார்த்து அந்த வான்கோழி ஆடிய அவலட்சண ஆட்டம் போல அல்லவா இருக்கும் என்கிறது இந்தப் பாடல்.

வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகாரி                                   ஆங்கதனுக்கு ஆகாரமானால் போல் – பாங்கறியாப்                              புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்                                         கல்லின்மேல் இட்ட கலம்.                   15.

கானகத்தில் வாழும் வேங்கைப் புலி. மனிதன் அதனைப் பார்க்கவே அஞ்சுவான். சர்க்கசில் கூண்டில் அடைத்து வைத்திருந்தால்கூட புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் அச்சம் தருவனவே. அப்படிப்பட்ட கொடிய வரிப்புலி ஒன்றுக்கு காட்டில் ஏதோ காலில் முள் தைத்து நடக்க முடியாமல் அவதியுற்றுக் கிடந்தது. அப்போது கானகம் வழியாக வந்த வைத்தியன் ஒருவன் அந்தப் புலியின் நிலை கண்ட மனமுருகி, ஐயோ பாவம், இந்தப் புலி காலில் காயம் பட்டு நடக்க முடியாம இப்படித் தவிக்கிறதே, இதன் துன்பத்தை நானே தீர்ப்பேன், என்று அதனருகில் சென்று அதன் காயத்துக்கு மருந்துகள் வைத்துக் கட்டி அதனை குணமாக்கினான். அந்தப் புலிக்குத் தன் கால் சரியாக ஆனதும், இனி தனது வழக்கமான வேட்டையில் இறங்கலாம் என்ற எண்ணமும், அதன் வயிற்றுப் பசியும் ஒருசேர அதற்கு வந்து சேர்ந்தது. அது தன் இரைக்கு எங்கு போகும்? பார்த்தது, தனக்கு வைத்தியம் செய்த வைத்தியன் அருகில் இருந்தான், இரை தேடி எதற்காக அலைய வேண்டும், இதோ இந்த வைத்தியன் இருக்கிறானே, இவனையே அடித்துச் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணி, அவனை அங்கேயே அடித்துத் தின்றுவிடுகிறது. அது காட்டு விலங்கின் குணம். காட்டு விலங்காச்சே அதன் அருகில் போனால் அது நம்மை அடித்துக் கொன்று விடுமே, நாம் அதன் துன்பத்தை நீக்குபவன் என்ற அறிவு அதற்கு இருக்குமா என்றெல்லாம் யோசியாமல் அவன் செய்த செயல் அவன் உயிரையே பறித்து விடுகிறதல்லவா?

அதைப்போலத்தான் நாம் ஒருவருக்கு உதவி செய்வதாயிருந்தால், அந்த நபர் நாம் செய்யும் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுடையவர் தானா, அவர் நாம் செய்யும் உதவியின் பெருமையை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுபவர் தானா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துத்தான் உதவி செய்ய வேண்டும். அதை விட்டு தீய எண்ணம் கொண்டவனுக்கும், நன்றி எனும் குணம் இல்லாத கயமை குணம் கொண்டவர்க்கும் நாம் மனம் இரங்கி உதவி செய்தால், அவர்கள் நாம் செய்த உதவியின் மேன்மையைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், மாறாக வாய்ப்பு கிடைத்தால் நம் கழுத்தையே அறுக்கவும் தயங்க மாட்டார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்று சொல்லி வைத்தார்கள். நாம் நம் இயற்கையான உதார குணத்தால் அனைவருக்கும் உதவி செய்வோம், ஆனால் அப்படிச் செய்யும்போது அவர்கள் அந்த உதவிக்கு உரியவர்தானா, தகுதி உடையவரா என்பதை அறிந்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் செய்யும் உதவியானது பாறையில் எறிந்த மண்பாண்டம் சிதறுவதைப் போல நம் உதவி சிதறிப்போகும் என்கிறது இந்தப் பாடல்.

 அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
 கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்                                 ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்                                               வாடி இருக்குமாம் கொக்கு.                        16.

சலசலத்து ஓடும் ஒரு வாய்க்கால். நல்ல மழைபெயது நாடெல்லாம் வளம் பெற்று நீர்நிலைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிய எங்கும் பசுமைத் தோற்றம். ஓடைகளில் நீரோட்டம் சீராகப் போய்க்கொண்டிருக்கிறது. அந்த நீரோட்டத்தில் ஏராளமான மீன்கள் சிறிதும் பெரிதுமாக நீந்திக் களித்துக் கொண்டே நீரோடு போய்க்கொண்டிருக்கிறது. ஓடைக் கரையில் ஒரு வெண்ணிறக் கொக்கு, அசைவின்றி ஓடும் நீரையும் அதனுள் பாய்ந்து செல்லும் மீன்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கொக்கு மீனைக் கொத்தி உண்ணக் காத்திருக்கிறது என்றால், நீரோடு போகிற மீன்களில் எவற்றை வேண்டுமானாலும் கொத்தித் தின்னலாமே, ஏன் பின்னர் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறது. திடீரென்று அந்த கொக்கு ஓடுகின்ற மீனில் ஒன்றை திடீரென்று கொத்தித் தின்றுவிடுகிறது. கவனித்துப் பார்த்ததில் தெரிந்த உண்மை என்னவென்றால், அந்தக் கொக்கு தனக்கு எந்த மீன் உண்ண போதுமானதாக, நன்கு செழித்து வளர்ந்த மீனாக இருக்கிறதோ அதைத் தேடிக் காத்திருந்து, அத்தகைய மீன் வரும்போது அதை மட்டும் கொத்தியிருக்கிறது. வீட்டு வாயிலில் காய்கறிக் கூடையோடு வரும் வியாபாரியிடம் நம் வீட்டுப் பெண்கள் காய்களை கையால் எடுத்து அழுத்திப் பார்த்து நன்கு தேறிய காய்களை வாங்குவது போல அந்த கொக்குத் தனக்கு ஏற்ற மீனைத் தேர்ந்தெடுத்துக் கொத்தித் தின்கிறது.

அதைப் போல நமக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் அடக்கமானவர். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற அகம்பாவமோ, அல்லது தேவையில்லாத எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துத் தன் மேதாவித் தனத்தை பிறருக்கு அறிவிப்பவராகவோ இல்லாமல் மிக அடக்கமாக இருக்கிறார். ஆனால் அவர் நன்கு கற்றுத் தேர்ந்த அறிவாளி, தேவையென்று போய் அவரிடம் யாராவது கேட்டாலொழிய அனாவசியமாக தானாக முன்வந்து உபதேசம் செய்பவரல்ல. அவரிடம் சென்று தனக்கு இன்ன உதவிகள் வேண்டுமென்று விரும்பிக் கேட்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்யக் கூடியவர்கள். ஆகையால் ஒருவர் அமைதியாக தன் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் என்பதற்காக அவரை ஒன்றும் தெரியாதவர் என்று தவறாக எடைபோட்டு விட வேண்டாம் என்கிறது இந்தப் பாடல்.

 அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்                                       உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்                                     கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே                                       ஒட்டி உறுவார் உறவு.                      17.

அழகிய தடாகம் ஒன்று. நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது. அதில் நீர்வாழ் உயிரினங்கள் எராளமாக இருக்கின்றன. நீந்தி விளையாடி இரையுண்டு மகிழ்ந்து வாழ்கின்றன. அங்கு பல்வகைப் பறவைகள் பறந்து வந்து தமக்கு வேண்டிய உணவை உண்டு மகிழ்கின்றன. எப்போதும் நீர்ப்பரப்பில் மலர்களும், இலைகளும், அவகளோடு ஆங்காங்கே அமர்ந்திருக்கும் பறவைகளும் அந்த சூழ்நிலையே மிக அழகியதாகக் காணப்படும். அந்த தடாகத்தில் கோடை காலத்தில் நீர் வற்றிப் போகிறது. அதில் வாழும் நீர்வாழ் உயிரினங்களான மீன்கள் முதலியன இல்லாமல் போகின்றன. உணவுக்காக பறந்து வந்து அங்கு உட்கார்ந்திருக்கும் பறவைகளும் வேறு இடம் நோக்கிச் சென்று விடுகின்றன. அந்த நீர்நிலை களையிழந்து போய்க் காணப்படுகிறது.

ஒருவர் நல்ல செல்வச் சீமானாக வசதியோடு வாழ்கிறார். அன்றாடம் அவர் இல்லம் மக்கட் கூட்டத்தால் நிறைந்து வழியும். போவோர் வருவோர் அனைவரும் அவர் இல்லத்தில் சத்திரம் போல உணவருந்திக் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட செல்வந்தர் வசதிகள் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தன் சொந்த வாழ்வுக்கே தவித்துக் கொண்டிருக்கிற சமயம், அவரைத் தேடி யார் வருவார்? அப்படி வருவோர்க்கு அங்கே வயிறு நிறைய உணவளிக்க அவரிடம் என்ன இருக்கிறது. ஆகவே அப்படி வந்து கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் அவரிடம் வருவதே இல்லை. அவர் தனித்து விடப்பட்டு விடுவார், நீர் வற்றிய குளத்தில் நீர்வாழ் இனங்களும் பறவைகளும் ஓடிவிட்டதைப் போல.

உண்மையான மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நீர்நிலைகள் நீர் நிரம்பி இருந்த காலத்தில் அங்கு உயிரோடு இருந்த கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீரில் விளையும் செடிகொடிகள் நீரோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்து விட்டு, குளத்தில் நீர் வற்றிய காலத்தில் அவைகளும் துவண்டு, வாடி, மடிந்து விடுவதைப் போல, செல்வந்தரோடு அவர் செல்வத்துடன் இருந்த காலத்தில் உறவாடியவர்கள், அவர் வறுமை நிலை எய்திய காலத்திலும், அவர் துன்பத்திலும் வறுமையிலும் பங்கு பெற்று அவருக்கு உள்ளதே நமக்கும் என்று அவர் படும் துயரங்களைத் தாங்களும் படுவதே உண்மையான உறவு. இதை விளக்குவதுதான் இந்தப் பாடல்.

சீரியர் கெட்டாலும் சீரியர் சீரியரே;                                           அல்லாதார் கெட்டாலாங்கு என்னாகும் – சீரிய                                பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும்; என்னாகும்                        மண்ணின் குடமுடைந்தக்கால்.         18.

மேன்மை குணமுடையோர் நல்ல நிலையில் நல்ல செல்வாக்கோடு இருந்த போதும் சரி, அல்லது தங்கள் தகுதியிலிருந்து இழிந்து செல்வம் இழந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர்களுடைய பெருந்தன்மையும், வள்ளல்தன்மையும், பிறரை மதிக்கக்கூடிய பண்பும் மாறாதவர்களாவே இருப்பார்கள். அவர்களுடைய பெருந்தன்மைக்குத் தங்கள் வசதியோ, வசதியின்மையோ இடையூறாக இருக்காது, எப்போதும் ஒரே மாதிரியான பண்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

மாறாக கீழ்மை குணமுடையோர் எப்போதுமே தங்கள் கீழ்மைக் குணங்களைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் செல்வம், தகுதி இவை எதுவும் அவர்கள் கீழ்மை குணத்தை மாற்றாது. அவர்களால் மற்றவர்களுக்கு எந்த நல்லனவும் இருக்காது மாறாக தீமைகளே அதிகம் இருக்கும். இவ்விரு தரமுள்ள மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தோமல்லவா? இதனை இப்படி ஒப்பிட்டுப் பார்க்கலாமே! அதாவது பொன் என்பது ஒரு விலை மதிப்புள்ள உலோகம். பொன் நகைகளை மிக விரும்பி பெண்கள் வாங்கி அணிகின்றனர். அத்தகைய பொன்னால் ஆன ஒரு பாண்டம், உடைந்து விடுகிறது. அப்படி உடைந்த அந்தப் பொன் பாத்திரத்தை மீண்டும் உருக்கி விலை மதிப்பற்ற பொன் ஆபரணங்களாகவோ, பொன் பாத்திரமாகவோ மாற்றிக் கொள்ள முடியும். காரணம் அந்த உலோகம் ஒரு உருப்பெற்றிருந்தாலும் சரி, அந்த உருமாறி உடைந்து போயிருந்தாலும் சரி அதன் மதிப்பு குறையாது, உயர்ந்ததாகவே இருக்கும் அதைப் போல மேலோர்கள் இழிந்த நிலைக்குப் போனாலும் தங்கள் உயர்ந்த குணங்கள் மாறாமல் இருப்பார்கள்.

ஆனால் கீழோர்கள் என்றும் கீழோர்களே. எப்படியென்றால் ஒரு மண்பாண்டம் கீழே விழுந்து உடைந்தது என்று வைத்துக் கொள்வோம், அது எதற்குப் பயன்படும்? அதுவும் மண்ணோடு மண்ணாகத்தான் போகும், அதன் மதிப்பு சற்றும் மாறாமல் கீழானதாகவே இருக்கும் என்பது இந்தப் பாடலின் கருத்து.

 ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்                                           நாழி முகவாது நால்நாழி; - தோழி!                                             நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்                                         விதியின் பயனே பயன்.                     19.

கடல் மிகப் பெரியது; ஆழமானது. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டது என்பர். அத்தகைய பிரம்மாண்ட நீர் பரப்பில் ஒரு பாத்திரத்தைக் கொண்டு நீரை முகர்ந்தால் அந்த பாத்திரம் கொள்ளும் வரைதானே நீரை மொண்டு வர முடியும். கடலில் ஏராளமாக நீர் இருக்கிறது என்பதற்காக அந்தப் பாத்திரம் அதைப் போல் நான்கு மடங்கு நீரையா மொண்டு கொள்ள முடியும்? முடியாதல்லவா.

அது போலத்தான் ஒரு பெண்ணுக்கு நல்ல கணவன் அமைந்திருக்கிறான்; செல்வத்திலும் வசதிகளிலும் ஒன்றும் குறைவில்லை. அப்படியானால் அந்த கணவன் மனைவி வாழ்க்கைக்கு வேறு என்ன வேண்டும். செல்வம் இருப்பதால் எல்லா வசதிகளையும் செய்து கொள்ள முடியும்; தேவைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்; விரும்பிய உணவு வகைகளை வகை வகையாகச் செய்து அருந்த முடியும். ஆனால் இறைவன் எல்லாவற்றுக்கும் ஒரு அளவு வைத்திருக்கிறான். அத்தனை வசதிகளும் இருந்தும் நாவுக்கு விருப்பமான உணவுகளைச் சிலர் சாப்பிட முடிவதில்லை. தங்களுக்கு சர்க்கரை நோய் என்கின்றனர். சிலர் தங்களுக்கு ரத்தக் கொதிப்பு என்கின்றனர். மருத்துவர் ஆலோசனைப்படி தான் தினை மாவைத்தான் உணவாகக் கொள்கிறேன் என்கின்றனர். ஏன் இப்படி? தேவைப்பட்ட பொருட்கள் அனைத்துமே இல்லத்தில் இருந்தாலும் அவைகளைப் பயன்படுத்த முடியாதபடி ஏதேனும் இடையூறு அவர்களுக்கு அமைந்து விடுகிறது. இதெல்லாம் முன் ஜன்ம கர்ம பலன்களால் ஏற்படுவது. இந்தப் பிறவியில் எல்லாம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாதபடி முற்பிறவி வினை இவர்களைத் தடுக்கிறது. இந்த நிலையும் ஒரு சொம்பில் கடல்நீரை அந்த சொம்பு கொள்ளும் அளவுக்குத்தான் எடுத்து வரை முடியும் அல்லவா அது போல நமக்கு என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ அதை மட்டும்தான் நாம் அனுபவிக்க முடியும் என்கிறது இந்தப் பாடல்.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா                             உடன்பிறந்தே கொல்லும் வியாதி; - உடன்பிறவா                            மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்                                  அம்மருந்து போல்வாரும் உண்டு.            20.

நாம் ஆயிரம் பேருடன் அன்போடு, நேசத்தோடு பழகி வந்தாலும், நம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் இருக்கும் உறவினைப் போல் ஆகுமா? என்ன இருந்தாலும் ரத்தபாசம் நம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளை ஏனையோரிட மிருந்து வேறு படுத்திக் காட்டாதா? ஆம், உண்மைதான். ஆனாலும் நாம் பிறவி எடுக்கும்போது நம் உடல்கூறின் படி நமக்கு சில கோளாறுகள், உடல் நோய்கள் இவைகள் வருகின்றனவே அவைகளும் நம் கூடவே பிறந்தவைகள் தானே, நம் சகோதர சகோதரிகளைப் போல. அப்படியானால் என்னதான் ரத்தபந்தம் இருந்தாலும் உடன் பிறந்த உறவு இருந்தாலும் நம்முடனே பிறந்து நம்மை வாட்டிப் பின் உயிரைக்கூட மாய்த்துவிடும் நோயும் நம் உடன் பிறந்தது தானே. ஆகையால் உடன்பிறந்தார் என்பதற்காக அவர்கள் நம் உயிர் காப்போர், நம் உரிமை காப்போர், நமக்காக வாழ்பவர் என்றெல்லாம் எண்ணி விட வேண்டாம். எப்படி நம்முடனேயே பிறந்த நோய்கள் நம்மை மாய்த்து விடுகிறதோ, அது போலவே உடன் பிறந்தார் எல்லோருமே நாம் நம்மைக் காத்துக் கொள்வது போல அவர்கள் நம்மைக் காப்பர் என்று கருதிவிட வேண்டாம். அவர்களாலும் துன்பங்கள் இழப்புகள் நேரலாம்.

நம் உடலுக்கு ஒரு நோய் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் வைத்தியரிடம் சென்று கேட்கிறோம். அவர் ஒரு மூலிகை மருந்தினைக் கொடுத்து அந்த நோயைத் தீர்க்கிறார். அந்த மூலிகை நம்மோடு பிறந்ததா, இல்லையே. எங்கோ ஒரு மலையில் காட்டில் வளர்ந்த மூலிகை அல்லவா அது. அப்படிப்பட்ட மூலிகை நம் நோயைக் குணப்படுத்துவது போல நம்முடன் பிறக்காவிடினும், நம்மீது அன்பும் பாசமும் பொழிந்து நம் தேவைக்கேற்ப நமக்கு நன்மைகள் செய்து காப்பாற்றுவாரும் உண்டு என்பது இந்தப் பாடல் சொல்லும் கருத்து.

 இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை                               இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்                                 வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்                                   புலிகிடந்த தூறாய் விடும்.                   21.

இல்லறம் என்பது நல்லறம் என்பர் பெரியோர். இல்லறம் என்பது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அன்போடு நேசித்து, ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இல்லறம் செய்பவர். அப்படிப்பட்ட தம்பதியர் அமைந்து விட்டால் அது சொர்க்கத்துக்கு ஈடாக ஆகும். இல்லாள் என்பாள் சற்றே ஏறுமாறாக நடப்பவளாக இருந்துவிட்டாலோ, கேட்க வேண்டாம் அந்த கணவன் படும் பாடு துயரம் நிறைந்ததாக இருக்கும். அப்படி யொரு அன்பைக் காட்டி, ஓருயிர் ஈருடலாக இருக்கும் தம்பதியர் உள்ள வீட்டில் அந்த இல்லாள் இருக்கும்போது வேறு எதுவுமே தேவையில்லை. குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பணியை அந்த மனைவி மிகச் சிறப்பாக செய்து வருவாள். கணவன் பொருளீட்டிக் கொண்டு வந்து கொடுத்து இல்லறம் செழிக்கச் செய்தால் போதும், அந்த இல்லம் இறைவன் வாழும் வீடு. அப்படிப்பட்ட மனைவி வீட்டில் இருந்தால் அவனிடம் இல்லாதது என்று எதுவுமே கிடையாது.
ஆனால் அப்படியொரு மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் அல்லவா? நல்ல மனைவி, மேற்சொன்னபடி ஓருயிர் ஈருடலாக இல்லாத இல்லாள், இல்லாமல் போவாளேயானால் அந்த இல்லம் என்ன நிலைமையை அடையும். சற்று சிந்தித்துப் பார்க்கலாம். கணவனை மதிக்காத மனைவியை ஏனையோர் மதிக்க மாட்டார்கள். அந்த பெண்ணுடன் யாரும் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல குணம் அமையாத இல்லத்தரசியுடன் உறவினர்களும் நல்ல உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள், பட்டும் படாமலும் சற்று விலகியே இருப்பார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று இன்சொல் பேசி உபசரிக்காத இல்லத்தரசியை யாரும் விரும்ப மாட்டார்கள், அவள் இல்லத்துக்கு யாரும் போகவும் அஞ்சுவார்கள். இது எப்படியிருக்கிறது என்றால், காட்டில் புதரினுள் மறைந்திருக்கும் புலிகள் உள்ள காட்டினுள் நுழைய எப்படி அச்சப்படுவார்களோ அப்படி நல்ல குணம் இல்லாத இல்லாள் இருக்கும் இல்லத்துக்குச் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள். புலிகள் பதுங்கிய காட்டினுள் செல்வது போல அச்சப்படுவார்கள் என்கிறது இந்தப் பாடல்.

எழுதியவாறே காண் இரங்கும் மடநெஞ்சே!                                  கருதியவாறு ஆமோ கருமம்? – கருதிப்போய்                                கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்                        முற்பவத்தில் செய்த வினை.                22.

இந்தப் பாடலில் கவிஞர் மக்களில் ஒரு பகுதியினரை விளித்துச் சொல்கிறார்: “அட! மூடர்களே! உம் வாழ்வில் நடக்கும் அனைத்துமே முன்வினைப் பயனால் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் உமக்கு இப்பிறவியில் வந்து சேரும் எனும் உண்மையைப் புரிந்து கொள்வீர்! நாம் நினைத்தபடியா எல்லா செயல்களும் நடக்கின்றன? நாமொன்று நினைக்க அது ஒழிந்திட்டு வேறொன்றல்லவா நடக்கின்றது. ஆக செயல்கள் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று நாம் நினைக்கலாமே தவிர, அது எப்படி நடக்கிறது என்பது நம் கையில் இல்லை. நல்வினை, தீவினை நாம் செய்தவை, அவைகளுக்கேற்ப நடப்பவைகளே இப்பிறவியில் நாம் எதிர் கொள்ளும் காரியங்கள். இதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
தேவலோகத்து விருட்சம் கற்பக விருட்சம். அதனடியில் அமர்ந்து எதை வேண்டுகின்றோமோ அதனை வழங்க வல்லது அந்த கற்பக மரம். ஆனால் அதனடியில் அமர்ந்து கொண்டு நல்லனவற்றையே எண்ணி நல்லவற்றை வேண்டினால் நல்லவைகளே கிடைக்கும். ஆனால் நம் விதிவசப்படி கற்பக மரத்தினடியில் அமர்ந்து கொண்டு எட்டி மரத்தில் காய்க்கும் விஷத் தன்மையுள்ள காஞ்சிரங்காய் வேண்டுமென்று நினைத்தால் மனிதனைக் கொல்லும் அந்த விஷக் காய்கள்தான் கிடைக்கும், இல்லையா? இவைகள் எல்லாம் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளை யொட்டியே அமையும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்லனவற்றை நினைத்து, நல்லனவற்றையே கேட்கும் நல்ல மனம் வேண்டுமென்றால் எந்தப் பிறவியிலும் நல்லனவற்றையே சிந்தித்தும், செய்தும் வரவேண்டும், அப்போதுதான் முற்பிறவி வினை நம்மைத் துரத்திக் கொண்டு வராது என்பது இந்தப் பாட்டின் பொருள்.

 கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்                                  பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – வில்பிடித்து                           நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே                                           சீரொழுகு சான்றோர் சினம்.                 23.

இந்தப் பாடல் தீயவர்கள் பழகிவிட்டுப் பின்னர் பிரிந்தால் என்னவாகும், அதுவே சான்றோர்கள் கருத்து பேடம் கொண்டு பிரிந்து போனால் அவர்கள் நட்பு எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது.

பாறை இருக்கிறதே அது உறுதியானது. அதனைப் பிளந்தோமானால் இருவேறு கூறுகளாகப் பிளவுண்டு போகும். அப்படிப் பிளந்த பாறை ஒன்று சேருமா? என்னதான் அதனை இணைத்து வைத்தாலும், இரு பகுதிகளும் ஒட்டிக்கொள்ளும்படி பசைகளை வைத்து ஒட்டினாலும், பிளந்தவை பிளந்தவையே, அவை ஒன்றுசேர வாய்ப்பே இல்லை.
ஆனால் சான்றோர்களுக்குள் வேற்றுமை வந்தால், எதனால் அந்த பிரிவு வந்தது, அதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அந்தத் தவற்றைத் திறுத்திக் கொண்டு அடுத்த கணமே பிரிவுக்கான காரணத்தை மனதில் கொள்ளாமல் இருவரும் நல்லெண்ணம் கொண்டு இணைந்து விடுவார்கள். எதைப் போலத் தெரியுமா?
நீர் இருக்கிறது. நீர் நிரம்பிய அந்த நீர்நிலையில் ஒரு வில்லில் அம்பினைப் பூட்டி அதில் எய்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது என்னவாகும்? அம்பு நீரைப் பிளந்து உள்ளே செல்லும் அந்த வினாடியே நீரில் ஏற்பட்ட அந்தப் பிளவு மறைந்து நீர் சமமாக ஆகிவிடும். அங்கு அம்பு பாய்ந்த சுவடே இருக்காது அல்லவா? அதுதான் சான்றோர்களுக்குள் ஏற்படும் வேற்றுமை தீரும் விதம். இரு மனங்களுக்குள் பேதம் வருமானால் அது நீரில் அம்பு பாய்ந்ததும் நீர் ஒன்றாகும் விதத்தில் தீரவேண்டுமே தவிர பிளந்தது பிளந்ததாகவே இருந்துவிடக் கூடாது.

 நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்                           கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா                                   மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்                                     காக்கை உகக்கும் பிணம்.                         24.

அழகிய மலர்ச்சோலையின் நடுவே ஓர் நளிர்நீர்த் தடாகம். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அந்த தடாகம் தூய்மையாகவும், அழகாகவும் விளங்குகிறது. அத்தகைய குளத்தை நாடி அன்னப் பறவைகள் வந்து அந்த நீரில் நீந்தி விளையாடுகின்றன. அப்படிப்பட்ட காட்சியே இனிமையானதாக இருக்கும் அல்லவா? அது போலத்தான் நன்கு கற்றறிந்த அறிஞரை மற்றொரு கற்ற அறிஞர் தேடி வந்து நட்பு கொள்வர். இருவருக்குள்ளம் அறிவு சார்ந்த கருத்துப் பரிமாற்றம் நடைபெறும். அத்தகைய உறவினால் நல்ல எண்ணங்கள் மக்களிடைய பரவ வாய்ப்பாக இருக்கும்.
அது போலவே சமுதாயத்தில் தீயனவற்றை மட்டுமே செய்துகொண்டு தீயவராக வாழ்பவர்கள் தங்களைப் போலவே தீயவர் கூட்டத்தையே விரும்பி நாடிச் சென்று நட்பு பாராட்டுவார்கள். இனம் இனத்தோடு சேரும் என்பதற்கேற்ப தீயவர்கள் தீயவரோடு சேர்ந்து தீய செயல்களைச் செய்யத் தயாராக இருப்பர். இது இயற்கையின் விதி. இது எதைப் போல இருக்கிறது?

இடுகாட்டில் பிணங்களைக் கொண்டு புதைக்கவும், எரிக்கவும் செய்கிறார்கள். அங்கு எஞ்சிய பிணத்தின் நிணங்களை விரும்பி உண்ணத் தேடிவரும் காக்கைகள் போல இருக்கிறது.

 நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்                                   அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு; - நெஞ்சில்                                   கரவுடையார் தம்மைக் கரப்பர்; கரவார்                                           கரவிலா நெஞ்சத் தவர்.                     25.

இந்தப் பாடலில் மனிதன் குணவிசேஷங்களையும், அவற்றின் பயனாக அவனுடய செயல்பாடுகளையும் பாம்புகளை எடுத்துக்காட்டாகக் காட்டி விளக்குகிறார் கவிஞர். நல்ல பாம்பு என்கிறோம், அந்தப் பிராணி மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அது கடித்தால் மரணம் நிச்சயம் என்கின்றனர். அப்படிப்பட்ட விஷம் கொண்ட பாம்பு மனிதன் கண்களில் பட்டுவிட்டால் என்ன செய்கிறான்? உடனே தடிகொண்டு அடித்து அதைக் கொன்று போடுகிறான். மனிதன் தங்களைக் கண்டால் உடனடியாக அடித்துக் கொன்று விடுவான் எனும் பயத்தில் நல்ல பாம்புகள் மனிதன் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டிருக்கும்.
ஆனால் தண்ணீர் பாம்பு என்றொரு வகை உண்டு. அது நீரில் வாழும். அந்த இன பாம்புகளுக்கு விஷம் கிடையாது. அதனால் அது மனிதன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதுபாட்டிலும் நீரில் நீந்திக் கொண்டிருக்கும். மனிதனும் அத்தகைய தண்ணீர் பாம்பைக் கண்டால் இது விஷமில்லாத ஜந்து தானே, இது என்ன செய்யும், போகட்டும் என்று அதை அடிக்கவோ, கொல்லவோ மாட்டான்.
அதைப் போலத்தான் தீயவர்கள் நல்லோர் கண்களில் படாமல் ஒளிந்து வாழ்வர்; காரணம் தங்களை நல்லவர்கள் கண்டால் அஞ்சுவர் அவர்களை விரும்ப மாட்டார்கள். நல்லவர்களோ எவருக்கும் அஞ்சி மறைந்திருக்க மாட்டார்கள், மக்கள் தங்களை விரும்புவார்கள் என்பதால் வெளியில் இருந்து அனைவருடன் அன்போடு பழகுவார்கள்.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்                                  மன்னனில் கற்றோன் சிறப்புடையன்; - மன்னற்குத்                            தன்தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்றோற்குச்                                  சென்ற இடமெல்லாம் சிறப்பு.                26

ஒரு நாட்டின் அரசன் இருக்கிறான், அதே நாட்டில் நன்கு கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கும் இருக்கிறார். இவ்விருவரில் யார் அதிகம் சிறப்புடையவர் என்று ஆராய்ந்தால் மன்னனைவிட அறிஞருக்கு சிறப்பு அதிகம் என்பது விளங்கும். அதற்கு என்ன காரணம்? மன்னன் என்பவன் சகல அதிகாரங்களும் கொண்டவன் அல்லவா? செல்வச் செழிப்பிலும் மன்னவனே உயர்ந்தவன் அல்லவா? நாட்டு மக்கள் அனைவருக்கும் மன்னனைத் தெரியாமல் இருக்க முடியாதே, அப்படியிருக்க மன்னனைவிட அறிஞனுக்குத்தான் சிறப்பு எப்படி இருக்க முடியும்?

மன்னனை அவன் நாட்டு மக்கள் மட்டும்தான் மதித்துப் போற்றுவார்கள். அவனுடைய சிறப்புகள் அவன் நாட்டு மக்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் சான்றோர்களுடைய சிறப்பு எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெருமைக்குரியதாகவே இருக்கும். ஆகவே ஒரு நாட்டு மன்னனையும் ஒரு சான்றோனையும் எடுத்துக் கொண்டால், அந்த மன்னனைக் காட்டிலும் கற்றறிந்த சான்றோன் எல்லா இடங்களிலும் பெருமைக்குரியவனாக இருப்பான் என்கிறது இந்தப் பாடல்.

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்;                            அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம் – மெல்லிய                              வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம், கூற்றமே                                இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண்.                27.

உலகில் கற்றவர்களும் இருக்கிறார்கள்; கல்வியறிவு இல்லாதவர்களும் இருக்கிறார்கள். கல்வி அறிவில்லாதவர்கள் வாழ்க்கையில் நெறிமுறைகளைத் தெரியாமலும் இருப்பார்கள் அல்லவா? அப்படி அவர்கள் தினசரி வாழ்க்கையில் தவறுகளைச் செய்வார்களானால் கற்றறிந்த பெரியோர்கள் அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். ஆகவே கற்றவர்கள் சொல்லும் சொல் தவறு செய்த கல்லாத மனிதர்க்குத் துன்பத்தைக் கொடுக்கும்.

தருமம் அல்லாத, நியாயம் அல்லாத மார்க்கத்தைச் சில பின்பற்றி வாழ்வார்கள், அப்படிப்பட்ட மாந்தர்களுக்கு தர்மம் அல்லது நியாயம் கூற்றுவன் போல் தீங்கு செய்பவைகளாகத் தோன்றும். காரணம் தவறுகளை மட்டுமே பின்பற்றுபவர் களுக்கு தர்மமும் நியாயமும் கூட கூற்றுவனாகத் தோன்றும்.

வாழை மரம் அதன் ஜீவகாலத்தில் ஒரேயொறு முறை தார் ஈன்றவுடன் அதன் பயன் முடிந்து விடுகிறது. ஆகையால் வாழை தார் ஈன்றவுடன் அதனை வெட்டி விடுவார்கள். தான் ஈன்ற காயே அந்த மரத்துக்கு எமனாக வந்து சேர்ந்து விடுகிறது.
கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வதே சுகம். அப்படியில்லாமல் கணவனுக்கு மாறான கருத்துடன் ஏறுமாறாக நடக்கும் மனைவி கணவனுக்கு மட்டுமா எமன், இல்லை அந்தக் குடும்பத்துக்கே எமனாக ஆகிவிடுகிறாள் என்கிறது இந்தப் பாடல்.

சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்                                      கந்தம் குறைபடா தாதலால் – தந்தம்                                        தனம்சிறியர் ஆயிடினும் தார்வேந்தர் கேட்டால்                             மனம்சிறியர் ஆவரோ மற்று?                   28.

மனிதருள் எத்தனை யெத்தனை குணங்கள்? அது போலவே சில பொருள்களுக்கும் சில தனித் தன்மைகள் உண்டு. சில மரங்கள் விரகுக்குத்தான் பயன்படும். சில மரங்கள் தான் வீசும் மணத்தினால் உயர்ந்த பணிகளுக்குப் பயன்படும். சில மரங்கள் தனது வலிமைத் தன்மையால் மர ஆசனங்கள் செய்யவும் பயன்படும். சந்தன மரம் இருக்கிறதே அதன் கட்டைகள் மணம் பொருந்தியவை. அதனை தண்ணீர் விட்டு கருங்கல்லில் தேய்க்கத் தேய்க்க அது மணம் பொருந்திய சந்தனக் குழம்பைத் தருகிறது. அந்தக் கட்டைத் தேய்ந்து தேய்ந்து மெலிந்து அழிந்து போகும் வரையிலும் அதன் மணம் குறைவதில்லை.
அதுபோல மனிதருள் உயர்ந்த தரும சிந்தனை படைத்தோர் ஏராளமாக உண்டு. மகாபாரதத்தில் கர்ணன் எனும் பாத்திரம். அவன் தான தருமங்களுக்குப் பெயர் போனவன். அவன் யுத்தகளத்தில் அடியுண்டு விழுந்து கிடந்த நேரத்திலும் அவன் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தான தருமங்கள் அவன் உயிரைக் காப்பாற்றுகின்றன என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உணர்ந்தார். அப்போது அவர் கர்ணனிடம் சென்று ஒரு ஏழை பிராமணன் வேடம் தரித்து கர்ணன் இதுவரை செய்திருந்த புண்ணியங்கள் அனைத்தையும் தனக்குத் தானமாகத் தரவேண்டுமென்று கேட்கிறார். மார்பில் அம்பு பாய்ந்து விழுந்து கிடந்த கர்ணன் தன் குருதியைக் கையில் ஏந்தி தாரை வார்த்துத் தன் புண்ணியங்கள் அனைத்தையும் கிருஷ்ணனுக்குக் கொடுக்கிறான் என்கிறது புராணம். அதுபோல சகல வசதிகளோடு இருந்தபோதும் தான தர்மங்கள் செய்து வந்த மன்னன் அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாகப் போன நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டுமென்றுதான் நினைப்பார்களே தவிர தனது தரித்திர நிலையைக் காட்டி இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல                                    உருவும் உயர்நலமும் எல்லாம் – திருமடந்தை                                ஆம்போது அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து                                போம்போது அவளோடும் போம்.             29.

செல்வம் தந்த செழுமை ஒரு புறம், ஏழ்மையின் இழிநிலை மற்றொரு புறம் இப்படி இருவேறு நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். செல்வந்தர்கள் ஏழை இவ்விரு சாராரும் இந்த சமூகத்தின் அங்கங்கள். செல்வந்தர்களைப் பாருங்கள், வளமான வாழ்க்கை, நினைத்ததையெல்லாம் கேட்டுப் பெற்று மகிழ்வோடு வாழக்கூடிய சூழ்நிலை. செல்வம் மிகுந்திருப்பதால் ஏராளமான சுற்றத்தார்கள் இவர்களை எப்போது சூழ்ந்திருப்பார்கள். ஆகாயத்தை முட்டுமளவுக்குச் செல்வமும், பொருட்களும் அவர்களிடம் கொட்டிக் கிடக்கும். செல்வம் இருந்தாலே தோற்றத்தில் ஒரு பொலிவு கூடும். பிறர் பாராட்டும், புகழும் ஏராளமாக வந்து சேரும். இவைகள் எல்லாம் எதுவரை தெரியுமா? செல்வத்துக்கு அதிபதியாம் திருமடந்தை இலக்குமி வாசம் செய்யும் வரையில்தான். எல்லாம் லட்சுமி கடாட்சம் என்பர், ஊர் போற்ற, உலகம் வாழ்த்த சுகபோக வாழ்க்கை அமைந்திருக்கும்.

அந்தத் திருமகள் பிரிந்து சென்று வறுமையின் கோரப்பிடியில் விட்டுவிட்டாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், என்ன ஆகும்? திருமகள் இவர்களைப் பிரிந்து செல்லும்போது முன்பு சொன்ன அத்தனை மங்கலங்களும், சிறப்புகளும், பெருமைகளும் அவள் பின்னால் அணிவகுத்துச் சென்றுவிடும். இத்தனை மங்கல சிறப்புகளும் பிரிந்து சென்று விட்டால் என்ன விஞ்சும்? வறுமை, வறுமையின் இழிவுகள், அவைதான் விஞ்சும். இந்தப் பாடல் சொல்லும் கருத்து அதுதான்.

 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை                            ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்                               குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து                                 மறைக்குமாம் கண்டீர் மரம்.                 30.

மேலோர்கள் என்போர் நம்மிடையே வாழ்பவர்தாம். அவர்கள் எப்போதும் மேலான குணங்களை உடையவர்களாக இருப்பர். நல்ல சிந்தனை, நல்ல செயல்கள், பிறர் நாடி செயல் செய்தல் போன்றவை அவர்தம் குணங்கள். அவர்களுக்குச் சிலர் தீங்கிழைக்கவும் கூடும். அவர்கள் தீங்கிழைத்தவர்கள் என்பதனால் அவர்களுக்குத் தீங்கு செய்பவர்கள் அல்ல மேலோர்கள். தீங்கிழைத்த கீழோர்களுக்கும் நல்லதே செய்யும் மாண்புடையவர்கள். எல்ல காலத்திலும், நாம் உயிர்நீத்து இவ்வுலகைவிட்டு அகலும் வாரையிலும் பிறருக்காக நல்லவைகளை செய்வதே கடனாகக் கொண்டவர்கள் அத்தகைய மேலோர். இது எப்படி இருக்கிறது தெரியுமா?

கோடை வெயிலில் நல்ல குளிர் நிழலைத் தருகிறது மரம். நல்ல காய் கனிகளைக் கொடுக்கிறது மரம். நல்ல நிழல் தரும் மரத்தை ஒருவன் வந்து வெட்டுகிறான், வெட்டும்போதும் அடிக்கும் வெயிலில் இருந்து அவனை நிழல் கொடுத்து காக்கிறது அந்த மரம். வெட்டி வீழ்ந்த பிறகும் அவனுக்கு நிழல் கொடுக்கின்றன அவன் வெட்டி வீழ்த்திய கிளைகளின் நிழல். இது அந்த மரத்தின் இயல்பு. மேற்சொன்ன மேலோர்கள் சாகும் வரை பிறருக்கு உதவி செய்தல் போல மரங்கள் தன்னை வெட்டுபவனுக்கும் கீழே விழும்வரை நிழல் கொடுத்து உதவி செய்வதைப் போல என்கிறது இந்த நிறைவுப் பகுதிப் பாடல்.
இந்தப் பாடலுடன் “மூதுரை” எனும் ஒப்பற்ற நீதிகளைச் சொல்லும் தமிழ்க் கவிதை நூல் நிறைவு பெறுகிறது. தொடக்கக் கல்வி பயிலும் மாணவர் அனைவருமே இந்த முப்பது பாடல்களையும் மனப்பாடமாகப் படித்து வைத்துக் கொள்வது வாழ்க்கையில் பயன்படும்.
                 
     







                                   


                 

     

     

     



     
     


2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மூதுரை..தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயனுள்ளது. நன்றி.

Musiri N. Janakiraman said...

My understanding of this Blog is that it was திரு VGopalan (alias Thanjavooran). If not, to WhomSoEver It May Concern":= thank you very much for the service to தமிழ் & தமிழ்-speaking நண்பர்கள் (future ones inclusive) everywhere!