பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 16, 2017

"நன்னெறி" Part.III

       "நன்னெறி" எனும் நூலின் 11ஆம் பாடல் முதல் 15ஆம் பாடல் வரையிலுமான பாடல்களையும், அதன் பொருளையும் இந்தப் பகுதியில் காணலாம். மற்ற பாடல்களுக்கு விளக்கும் தொடர்ந்து வெளியாகும்.                         


11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே 
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்; - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

இந்தப் பாடலில் மனிதனுக்கு அவனது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றால் உண்டாகும் தாக்கங்கள் குறித்துச் சொல்கிறார். மெய் என்பது உடல், அப்படி உடலால் தீண்டும்போது ஏற்படும் துன்பம், வாயிலுள்ள நாக்கு, பல ருசிகளை உணர்ந்து மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவது, அந்த நாவினால் வரும் துன்பம், கண் காண்பது காட்சி, அந்தக் காட்சியால் வருகின்ற தொல்லை, மூக்கினால் முகரும்போது வரும் துன்பம், பிறர் கூறும் இன்னா சொற்களைக் கேட்பதால் வரும் துன்பம் என்று ஐம்பொறிகளால் உண்டாகும் தீங்கு அனைத்தையும் கடந்த மேலோருக்குக் கிடையாது ஆனால் அற்பர்கள் இவை அனைத்தாலும் துன்புறுவர்.

இதற்கு ஒரு உதாரணத்தையும் தருகிறார் கவிஞர். பெரிய சூறாவளிக் காற்று வீசுகிறது. அது பெரிய கற்தூண்களையா அசைக்க்க முடிகிறது, இல்லை. ஆனால் மெல்லிய சிறு துரும்பினைச் சுற்றிச் சுற்றி வீசுகிறதே அதைப்போல.

12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை!திருந்திழாய்!
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.

ஒரு குடத்தில் நீரினை மொண்டு வைக்கிறோம். அது நல்ல குடமாக இருந்தால் நீர் அதிலேயே இருக்கும். அந்த குடம் ஒருக்கால் ஓட்டை விழுந்த குடம் என்றால், அதில் ஊற்றிவைத்த குளிர்ந்த நீர் அதிலே அப்படியேவா இருக்கும், அத்தனையும் அந்த ஓட்டை வழியாக ஒழுகிப் போவதென்பது என்ன ஆச்சரியமான செய்தியா? இல்லையே.
ஆனால் நம் உடம்பில் ஒன்பது ஒட்டைகள், அத்தனை ஓட்டைகளை இந்த உடம்பில் வைத்துக் கொண்டு நம் உயிர் அவற்றின் வழியாகப் போய்விடாமல் நம் உடலில் தங்கி இருப்பதென்பது ஆச்சரியம்தான் இல்லையா பெண்ணே!

13. அன்பொடு உதவுக

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர்; - சுரக்கும் 
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

பெருத்தெழுந்து சுரக்கும் மார்பழகுப் பெண்ணே! நிலா இருக்கிறதே அது முழுநிலவாக இருக்கும்போது வீசுகின்ற ஒளி, அது நாளுக்கு நாள் அளவில் சிறுக்கச் சிறுக்க அதன் ஒளி படிப்படியாகக் குறைந்து கொண்டு வருவதைப் போல, நல்லோர்கள், தரும சிந்தனை கொண்ட பெரியோர்கள் தங்களிடம் நிறைந்த செல்வம் இருக்கும்போது அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள், அது சிறுகச் சிறுக இல்லை என்று சொல்லாமல் கொடையும் சிறுத்துப் போகுமே யன்றி கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

14. செல்வச் செருக்குக் கூடாது

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யவர் செருக்குச் சார்தல் - இலையால் 
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

செல்வத்தில் சிறந்த சான்றோர் பெருமக்கள் தாங்கள் குறைவில்லாத பெருஞ்செல்வத்தைப் படைத்திருக்கிறோம் என்று கர்வம் கொள்ள மாட்டார்கள். வண்டுகள் வாயினால் ஊதுவதால் இதழ்கள் மலர்ந்த பூக்களை அணிந்த மெல்லியலே! மேரு மலை இருக்கிறதே அது சிவபெருமான் அதை எடுத்து வில்லாக வளைத்து திரிபுராதி அரக்கர்களோடு போர் புரிந்த போது அதில் மகாவிஷ்ணுவை அம்பாக வைத்து எய்தபோது அந்த மேரு மலையே வளைந்ததல்லவா, அதனைப் போல தான் எனும் கர்வம் தலைக்கேறி மேரு மலை போல இருந்தாலும் தலை குனிவு ஏற்படும் என்பது இதன் பொருள்.

15. அன்பற்ற செல்வம் பயனற்றது

இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும்? - நல்லாய் 
மொழியிலார்க் கேது முதுநூல்? தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு?

நற்குணம் மிக்க நங்கையே! கேள்! மொழிகள் குறித்த ஞானம் இல்லாத ஒருவனிடம் மூத்த அறிஞர்கள் பலர் எழுதிய நூல்கள் இருந்தும் என்ன பயன்? படிக்கவே தெரியாத அவன் அந்த புகழ்மிக்க நூல்களை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? அது போல கண்கள் இரண்டிலும் பார்வையில்லாத மனிதர்க்கு விளக்கு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அவன் பார்வையே இருள் படிந்தல்லவா இருக்கும்?

அதுபோல அன்பு எனும் உணர்வு இல்லாத ஒரு மனிதனுக்கு நல்ல வீடு, வாசல், நிலம் நீச்சு என்று அனைத்தும் இருக்கிறது, நிறந்த செல்வம் இருக்கிறது, ஏவியதைச் செய்ய ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள் இப்படி எல்லாம் இருந்தும் அன்பு எனும் உணர்வு இல்லாதவனுக்கு இவற்றால் என்ன பயன் விளையும்? சொல். 

No comments: