பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 4, 2017

"நன்னெறி" Part VII


  நன்னெறியின் இந்தப் பகுதியில் 31ஆம் பாடல் முதல் 35ஆம் பாடல் வரையில் உரையுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த பகுதியோடு நன்னெறி நிறைவு பெறும்.

31. பிறர் துன்பம் தாங்குக

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார்; - நேரிழாய் 
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.

பெண்ணே! நம்மை ஒருவன் கோல் கொண்டு அடிக்க வருவதாக வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம், அந்த அடி நம் மீது படாதபடி நம் கையால் அதைத் தடுத்துவிடுவோம் அல்லவா? அதுபோலத்தான் பிறருக்கு ஒரு துன்பம் வருகிறது என்று சொன்னால் பெரியோர்கள் என்ன செய்வார்கள்? ஓடிச்சென்று அவருக்கு அந்தத் துன்பம் நேரா வண்ணம் தடுத்துக்காத்திடுவார்கள்.

32.  அறநூல்களை உணராதவர்கள் செய்யும் அறம் வீண்.

பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே; - நன்னுதால்! 
காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.

விசாலமான நெற்றியுடையவளே! நம் வீட்டிற்கு மிக உயர்ந்த மரங்களைக் கொண்டு உறுதியாகக் கதவுகளை செய்து கட்டியிருக்கிறோம். அப்படி அமைந்த கதவுகளுக்குத் தாழ்ப்பாள்கள் உறுதியாக இல்லையென்றால் பாதுகாப்பு உண்டா? இல்லையல்லவா, தாழ்ப்பாள் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிடலாமே!

அதுபோல தர்மங்கள் இவை இவையென்று அறநூல்கள் வாயிலாகப் படித்து நன்கு பகுத்துணர்ந்து எத்தகைய தர்மங்கள் செய்தல் வேண்டும், அப்படிச் செய்யும் தர்மங்களுக்கு என்ன பயன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒருவன் செய்யும் தருமம் எந்தப் பயனையும் தராது என்பது இதன் கருத்து.

33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை

எள்ளா திருப்ப இழிஞர் போற்றற் குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே; -  தள்ளாக் 
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல்.

நாம் நம் ஊர் பயன்பாட்டுக்காகப் பல நீர்நிலைகளை அதாவது குளம், குட்டை, ஏரி போன்றவற்றை உருவாக்கி அதன் கரைகளை வலுவாக அமைத்து அதில் தண்ணீரைத் தேக்கி வைக்கிறோம். அப்படிச் செய்யாவிட்டால் தண்ணீர் அங்கே தேங்குமா, தேங்காது அல்லவா? ஏரி, குளங்களுக்கு கரை அவசியம் ஆனால் கடல் இருக்கிறதே அது எத்துணை பெரிது? அதற்கு நாம் கரை கட்டியா தேக்கியிருக்கிறோம். அதுவாகவே பள்ளத்தில் கடல்நீர் தேங்கி சுற்றிலும் உயர்ந்த கரைகள் இருப்பதால் அதற்கென்று தனியாக கரை அமைக்கத் தேவையில்லை.

அதைப் போலத்தான், மோசமானவர்கள் தங்களைப் பிறர் இகழ்ந்துரைக்கவும், தாக்கவும் கூடும் என்பதால் தங்களைப் பாதுகாக்கக் காவலர்களை நியமித்துக் கொள்கிறார்கள். ஆனால் பண்பில் சிறந்த பெரியோர்களுக்கு காவலா வேண்டும். அவர்களை யாரும் இகழவோ தாக்கவோ வரமாட்டார்கள், அப்படி வந்தாலும் அவர்களுடைய சீரிய மேலான குணம் அவர்களைக் காத்துவிடும்.

34. அறிவுடையோர் பழிக்கு அஞ்சுவர்

அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும்;  - பிறைநுதால்! 
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு.

பிறைபோல் வளைந்த நெற்றியுடைய பெண்ணே! பொதுவாகவே இருளைக் கண்டால் எல்லோருக்கும் சற்று அச்சம் உண்டு. தான் போகுமிடம் இருளாக இருக்கிறது என்பது யார் கண்களுக்குத் தெரியும். நன்றாகக் கண்கள் பார்வை தெரிபவர்களுக்கு எங்கு இருள் இருக்கிறது எங்கு வெளிச்சம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் இரு கண்களிலும் பார்வை இல்லாத குறையுடையவர்களுக்கு இருளுக்கும், வெளிச்சத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரியாதல்லவா?

அதுபோலத்தான் தங்கள் மீது ஏதேனும் வீண் பழி விழுந்துவிடுமோ, யாரேனும் தங்களைக் குறை சொல்லிவிடுவார்களோ என்று அறிவுடையார் அஞ்சியிருப்பர். ஆனால் அப்படியில்லாத கீழ்மக்கள் இதுபோன்ற பழிகளுக்கெல்லாம் அஞ்சுவதில்லை, அவர்களுக்கு இதெல்லாம் பழக்கமாகிப் போனவை.

           35. மேன்மக்கள் மேலோரையே விரும்புவர்.

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் 
மற்றையர்தாம் என்றும் மதியாரே;  - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய்!  வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம்.

வெற்றியை விரும்பும் கூரியவாள்போன்ற விழியுடைய பெண்ணே! வாழைப்பழத்தை நல்ல காய்ச்சி சர்க்கரையிட்ட பாலில் தோய்த்து உண்ணும்போது சுவையாக இருப்பதால், வாழைப்பழம் தனக்கு சுவைகூட்டும் நல்ல பாலை மட்டுமே விரும்பும். ஆனால் திரிந்துபோய் புளித்துப்போன பாலையா வாழைப்பழம் விரும்பும்? விரும்பாது அல்லவா?

அது போலத்தான் நன்கு கற்ற அறிஞர் பெருமக்களை அவர்களைப் போன்ற நன்கு கற்றவர்கள்தான் அன்போடு வரவேற்று உபசரிப்பார்கள். ஆனால் கீழ்மக்களாகத் திரிவோருக்கு இவர்களைப் போன்ற அறிஞர்களின் அருமை பெருமைகள் தெரியாமையால் அவர்களை மதிக்க மாட்டார்கள்.

No comments: