பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 25, 2011

சோதனைமேல் சோதனை


சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்கிற இந்தப் பாடல் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். ஒன்றன்மேல் ஒன்றாகக் கஷ்டங்கள் வரும்போது மூளை வேலை செய்ய மறுக்கிறது. எத்தனைத் துன்பங்களைத்தான் தாங்கமுடியும்.

"பீலிபெய் சாகாடும் அச்(சு) இறும், அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"

இந்தக் குறளின் பொருள் மெல்லியதான மயிலறகாயினும், அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்துவிடும் என்பது. அதுபோலத்தான், அளவுக்கு அதிகமான, மனித மனம் தாங்கக்கூடிய அளவிற்கு மேலாகத் துன்பங்கள் வந்து சேர்ந்தால் மனம் பேதலித்து விடுகிறது. ஒரு துன்பத்தின் தொடர்ச்சியாக பல துன்பங்கள் வந்தால்கூட சமாளிக்கலாம்; ஆனால் வெவ்வேறு வழிகளில் புதிய துன்பங்கள் ஏற்படுமானால் எதனைத் தாங்குவது, எதனை ஒதுக்குவது?

ஒருவருக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தனவாம். ஒருவன் வீட்டில் வளர்த்து வந்த பசு என்று கன்று போடும் என்று காத்திருந்தான். பசு கன்று போடும்போது, விழித்திருந்து ஜாக்கிரதையாகப் பசுவையும் கன்றையும் கவனிக்க வேண்டும். அப்படி அன்று கன்று போட்ட செய்தி வந்ததும் ஓடிப்போய் மிகுந்த அக்கறையுடன் அதை கவனிக்கத் தொடங்கினர். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. மாட்டுக் கொட்டகை நீர் ஒழுகத் தொடங்க, கன்று போட்ட பசுவையும் கன்றையும் காப்பாற்றுவதற்காக அவற்றை வீட்டினுள் கொண்டு வந்து கட்டினார்கள். அப்போது வீடு இடிந்து விழுந்தது. உதவிக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரியைத் தேடினால், அவளுக்கு அந்த நேரம் பார்த்து உடல் நலம் குன்றி படுத்திருந்தாள். அப்போது கொட்டும் மழையில் ஒரு நபர் வந்து அவர்கள் பண்ணையில் பணிபுரியும் பண்ணையாள் இறந்து போனான் என்கிற செய்தியைக் கொண்டு வந்து சொல்கிறான். வயலுக்கருகில் கதிர் அடித்துக் களத்தில் குவித்து வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துவிடப் போகிறதேயென்று அவசர அவசரமாக அதை அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் கடன்காரன் வந்து வழிமறித்துக் கடனுக்கு அந்த நெல்லைக் கொடு என்று தொல்லை கொடுத்தான். அந்த நேரம் பார்த்து எவனோ ஒருவன் யார் வீட்டிலோ யாரோ இறந்து விட்டார்கள் என்ற துக்கச் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தான். எங்கே வந்து கழுத்தை அறுப்பானோ என்று பயந்து கொண்டிருந்த வேண்டா விருந்தாளி அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைய, அந்த சமயம் பார்த்து வாயிற்படியில் படுத்திருந்த பாம்பு அவன் காலில் கொத்திவிட, வாசலில் அரசாங்க அதிகாரிகள் நிலவரியை உடனடியாகக் கொடு என்று சொல்லி வந்து நிற்க, அவ்வூர் புரோகிதர் தனக்கு வரவேண்டிய தட்சிணைப் பணத்தைக் கொடுங்கள் எனக்கு செலவு இருக்கிறது என்று நச்சரிக்க, அந்தக் குடும்பத் தலைவன் படும் பாட்டைச் சற்று சிந்தித்துப் பாருங்கள், எப்படியிருக்குமென்று. ஒரு புலவர் இந்த சூழ்நிலையைப் படம்பிடித்து ஒரு பாட்டைப் பாடிச்சென்றிருக்கிறார்.

"ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டு ஒருவன் எதிரே செல்லத்
தள்ள ஒண்ணா விருந்துவரச், சர்ப்பம் தீண்டக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!"

காய்ந்து சிவந்தது?

"காய்ந்து சிவந்தது சூரியகாந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்; தொல்பல நூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம்; அனுதினமும்
ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இரு கரமே!"

இது வள்ளல் சீதக்காதியின் மீது படிக்காசுப் புலவர் பாடிய செய்யுள். சூரியகாந்தி மலர் வெயிலிற் காய்ந்து சிவந்தது; மின்னல்கொடி போன்ற இளம்பெண்கள் கண்கள் கூடலில் தோய்ந்து சிவந்தன; பாட்டிசைக்கும் பாவலர் மனம் பழமையான இலக்கியத்தில் தோய்ந்து செம்மை அடைந்தன. மேகம் போன்ற வரையாது வழங்கும் வள்ளல் சீதக்காதியின் கரங்கள் தானம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்தன என்பது இந்தப் பாடல்.

இதேபோன்ற பாடலொன்றை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம். ஆம்! "கர்ணன்" திரப்படத்தில் கர்ணன் அவைக்களத்தில் ஒரு புலவர் பாடும் பாட்டாக இதைப் போன்ற பாடல் வருவதைக் கேட்டிருப்பீர்கள். "மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்" எனத் தொடங்கும் பாடல் தொகுதியை திருச்சி லோகநாதன் அவர்கள் பாடியிருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.

Tuesday, May 24, 2011

தமிழுக்குக் கதி மகாகவி பாரதி.

தமிழுக்குக் கதி மகாகவி பாரதி.

தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் மேம்படுத்துவதற்காக அவ்வப்போது தோன்றி செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்த சான்றோர்கள் பலரை நம் வரலாற்றில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட மேலோர்களின் நினைவு மக்கள் மனதிலிருந்து நீங்கா வகையில் பாடுபட்ட பலரில் இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன்னால் வாழ்ந்து மறைந்தவர் மகாகவி பாரதி.

மிகப்பெரிய ஆங்கில சாம்ராஜ்யத்தை எதிர்த்து சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகள் பாடுபட்டு இந்திய சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த சுதந்திர தாகம் மிகப் பெரிய அளவில் தோன்றிய காலத்தில் அந்தச் சுதந்திரப் பயிரை கண்ணீரால் அல்ல, செந்நீரால் வளர்த்துக் காத்த பெருமை மகாகவிக்கு உண்டு. பாரதியே அடிக்கடிப் போற்றிப் பாடுகின்ற கம்பனை, வள்ளுவரை, இளங்கோவை அடியொற்றி இந்த மண் செய்த புண்ணியத்தால் இங்கு வந்து தோன்றியவன் பாரதி.

தமிழுக்குக் கதியெனத் திகழும் இந்த மூன்று கவிஞர்களைத் தவிர ஒளவையாரையும் தன் கட்டுரைகளில் மேன்மை படுத்தியிருக்கிறான் பாரதி. கவிநயத்துக்கு ஒரு கம்பன், வாழ்வியல் நீதிக்கு ஒரு திருவள்ளுவர், காப்பியச் சுவைக்கு ஒரு இளங்கோ என்றால், சின்னஞ்சிறு சிறார்களை நல்வழிப்படுத்தி இந்த நாட்டின் நல்ல மைந்தர்களாக ஆக்கும் பணியை ஒளவையார் போலச் செய்தவர் யாருமில்லை. அந்தப் பெண்பால் புலவர் பாடிய பல நல்வழிப் பாடல்களும், நீதிநெறிச் செய்யுள்களும் செய்த பணி தொடர பாரதியும் குழந்தைகளுக்கென்று பாடலை இயற்றியது போற்றத் தக்கது.

குழந்தைகளுக்கு அவன் முதன் முதலாகக் கூறிய அறிவுரை "அச்சம் தவிர்" என்பது. அதைத் தொடர்ந்து தனது புதிய ஆத்திசூடியில் அவன் கொடுத்திருக்கும் அறிவுரை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் ஏற்று நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான வரிகள். தன் கட்டுரையொன்றில் பாரதி கூறுகின்றான், இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம், நீங்கள் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறீர்களா, அல்லது கவி ஷேக்ஸ்பியரை இழக்கிறீர்களா என்று கேட்டல், நாங்கள் எங்கள் நாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் இழப்பதாக இருந்தாலும், எங்கள் கவிஞர் ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோம் என்று சொல்வார்களாம். அதுபோல என்னிடம் நீங்கள் தமிழ்நாட்டுச் செல்வங்களை இழக்கிறீர்களா அல்லது ஒளவையாரை இழக்கத் தயாரா என்றால், எதை இழந்தாலும் எங்கள் ஒளவையை இழக்க மாட்டோம் என்று எழுதுகிறார். நாமும் எதை இழந்தாலும் பாரதியையும் அவன் கவிதைகளையும் இழக்கத் தயாராக இல்லை.

எல்லோரும் மகாகவி பாரதியை ஒரு தேசியக் கவி என்கிறார்கள். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த இந்த நாட்டில் சுதந்திரப் பயிர் துளிர்விட்டு எழத் தொடங்கிய காலம் அவன் வாழ்ந்த காலம். ஆகவே இயற்கைக் கவிஞனான பாரதிக்கு இந்திய சுதந்திரத்தின் பால் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் சுதந்திர தாகத்துக்கும் மேலாக அவன் உள்ளத்தை வாட்டி எடுத்த நிலைமை வேறொன்று உண்டு. அது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் நிலைமை எப்படி இருந்தது. நாம் இப்போது கற்பனை செய்தோ அல்லது பாரதியின் கவிதைகள் மூலமாகவோதான் அறிந்து கொள்ள முடியும். அவ்வளவு பிற்போக்கான நிலைமை அப்போது. இந்த மக்களை வைத்துக் கொண்டு இந்த மண்ணின் சுதந்திரத்துக்கு எப்படிப் போராட முடியும். என்று இவர்கள் தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். என்று இவர்கள் தங்களையும் தங்கள் முன்னோர்களின் பெருமைகளையும் உணர்ந்து தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். அவன் நெஞ்சு பொறுக்கவில்லை.


சுற்றிலும் நிலவிய சூழ்நிலையால் அவன் பாதிக்கப்படவில்லை. வீறுகொண்டு எழுந்தான். இவர்களைத் தூக்கி நிறுத்தித் தங்கள் பழம் பெருமையை உணரச் செய்து மற்ற எவர்க்கும் நாங்கள் தாழ்ந்தவர் இல்லை என்ற உணர்வினை ஏற்படுத்த அயராது பாடுபட்டான். விளவு ஒன்றும் அவ்வளவு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை, எனினும் அவன் தளர்ந்து போகவில்லை. மக்கள் நெஞ்சில் பதியும்படியான தனது கூர் அம்பு போன்ற சொற்களை வீசி அவர்களைத் தட்டி எழுப்பப் பார்த்தான். அவன் வாயால் அதனைக் கேட்போம். பாரத ஜனங்களின் தற்கால நிலை என்ற தலைப்பிட்டு அவன் பாடும் கவிதை இது.

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்"

நம் மக்கள், நம் நாடு, நம் பாரம்பரியம், நம் பெருமை என்றெல்லாம் மார்தட்டிய பாரதிக்கு அப்படியென்ன குறை நேர்ந்தது. இந்த மக்கள் அப்படி என்னதான் செய்து விட்டார்கள். எப்படி நடந்து கொண்டார்கள்.

இவர்கள் அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. எந்தப் புறம் திரும்பினாலும் பேய், பூதம் என்ற அச்சம். மந்திரம், மாந்திரீகம் என்கிற அச்சம். தெருவோடு போகும் ஒரு சிப்பாயைக் கண்டு அச்சம், ஊர்ச்சேவகன் வருவது கண்டு அச்சம், துப்பாக்கியோடு எவனாவது போனால் அவனைக் கண்டு அச்சம், ஆடம்பரமாக ஆடையணிந்து செல்பவனைக் கண்டு அச்சம், எப்போதும் எவரிடத்தும் கைகட்டி வாய்புதைத்து நிற்பார், பூனைகளைப் போல ஏங்கி நிற்கும் குணம். இப்படி மக்கள் அச்சமெனும் பேய்க்கு பயந்து கொண்டிருந்தால் எப்போது சுதந்திரம் எப்போது மக்களாட்சி என்ற நிலை அன்று இருந்ததை பாரதி சுட்டிக் காட்டுகிறார்.

இப்படிப்பட்ட மக்களைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொல்லி, இவர்களிடம் பிரிவினைகள் கொஞ்சமோ அவை ஒரு கோடி என்றால் அது அதிகமோ? ஒருவன் அஞ்சு தலைப் பாம்பொன்று கண்டேன் என்பான் அதை மறுத்து மகன் இல்லையில்லை ஆறுதலை என்று சொல்லிவிட்டல் போதும் மனம் வெறுத்துச் சண்டையிட்டுப் பிரிந்து போவார்.

இப்படி மக்களைப் பற்றியே சிந்தித்து அவர்கள் முன்னேற்றத்துக்காக கவி வடித்த மாபெரும் கவி பாரதி. இவனைத் தேசிய கவி என்கின்றனர். 'தேசியம்' என்பது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. தேசியம் என்பது ஒரு தேசத்துக்குள் அடங்கிய அனைவரையும், அனைத்துக் கொள்கைகளையும் உள்ளடக்கியது. எனவேதான் நம்முள்ளே புதைந்து கிடக்கும் பெருமைகளைப் பாடிய அதே நேரத்தில் சிறுமைகளையும் சாடி அவற்றினை நீக்கிக் கொள்ள அறிவுறுத்துகிறான்.

பாரதியை ஒரு தனிமனிதனாகப் பார்க்ககூடாது. அவனை ஒரு பெரிய இயக்கமாகப் பார்க்க வேண்டும். வள்ளலார் வாக்குப்படி "வாழையடி வாழையென வந்தத் திருக்கூட்ட" மரபில் வந்த கவிஞரில் பாரதியும் ஒருவன். கண்ணன் கீதையில் கூறியபடி "தருமம் குன்றி அதர்மம் தலைதூக்கி நிற்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன்" என்று கூறியபடி, இந்தியரின் வாழ்வு குன்றி தலைகுனிந்து நின்ற நிலையில் பாரதி என்கிற விடிவெள்ளி தோன்றினான்.

ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்தியால் இங்கு மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமும், மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமையும் தலை தூக்கி நின்ற காலத்தில் அதை அழித்து சத்தியத்தை நிலைநாட்டி "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமை இனி உண்டோ?" என்று உலகத்துக்கு

எச்சரிக்கை விடுத்தவன் பாரதி. கீதையின் வாக்குப்படி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வந்த கவிஞன் பாரதி.

பாரத தேசத்தில் முதன் முதலாக தேசிய உணர்வு ஏற்பட்ட நேரத்தில் அதைக் கண்டு பரமானந்தம் கொண்டு பாரதி எழுதுகிறான்:-

"நாட்டில் ஓர் புதிய ஆதர்சம், கிளர்ச்சி, ஓர் தர்மம், ஓர் மார்க்கம் தோன்றுமானால், மேன்மக்களின் நெஞ்சனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல் அவற்றை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்தில் பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி" என்ற நவீன மார்க்கம் தோன்றியது" என்று சுதந்திர எண்ணம் தோன்றியதைப் போற்றி எழுதுகிறான்.

தன் பிறவியின் நோக்கம் என்ன என்பதையும் ஒரு கவிதையில் அவர் சொல்கிறார். அவர் சொல்வது:-

"புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே!"

எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய மடலில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் பாங்கு இது.

அது சரி, தமிழ் மொழிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த கவி யென்றால் நீங்கள் புதுமையாக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு அல்லவா? அதற்கும் அவன் விடை சொல்லுகின்றான்.

"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொல் புதிது, சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை"

தன்னுடையது என்பது அவன் வாக்கு. பாரதிக்கு முன்பு தமிழிலே சுவை மிக்க கவிதைகள் இல்லையா, பொருட் செறிந்த கவிதைகள் இல்லையா என்ற கேள்விக்கு "இருந்தன" என்பதுதான் விடை. நம் இலக்கியங்களில் உள்ள பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்கணக்கு எனும் தொகை நூல்களோடு, ஐம்பெரும் காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் இவை தவிர பரணி, உலா, பிள்ளைத் தமிழ் இவைகளும் ஏராளமாக இருந்தன. ஆனால் இவற்றிலெல்லாம் சுவை பழையது, சொல் பழையது, பொருள் பழையது, வளமும் பழையது. புதிய சொற்கள், புதிய எழுச்சி, தூண்டுதல், தன்னைத்தானே உணரச் செய்யும் ஆற்றல் மிக்க புதுயுக எழுச்சிக் கவிதைகள் பாரதியினுடையது.

பாரதியாருக்கு முன்னோடியாக தாயுமானவரையும், வள்லலார் இராமலிங்க அடிகளாரையும் சொல்லலாம். எளிய கவிதைகள், எளிய நடை, புதிய சந்தம் இப்படி பாரதிக்கு இவர்கள் வழிகாட்டியாக இருந்தனர். நம்மிடையே மதங்கள் பல. ஆயினும் எல்லா மதங்களும் போதிப்பது சன்மார்க்கம் மட்டுமே. பேதங்களை மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டான். பிறவியில் பேதங்கள் ஏது?

"பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"


என்கிற புதிய மதத்தைத் தோற்றுவித்தான். ஷண்மத ஸ்தாபனம் நடந்த இந்த நாட்டில் எந்தவொரு கடவுளரையும் குறிப்பிடாமல் இந்த நாட்டைப் பிறந்த பொன்னாட்டை இறைவனாக மதிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் பண்டைய தமிழினத்தின் மனிதாபிமானக் கொள்கையின் தொடர்ச்சி இது. மனிதாபிமானத்தின் தொடர்ச்சியே "தேசாபிமானம்" என்கிற தேசபக்தி.

என் நாடு, என் மக்கள், எங்கள் வளம் இவற்றைப் பற்றிய பெருமிதம் எல்லோருக்கும் வேண்டும். அதனைத்தான்

"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு"

என்று பாரதியை மார்தட்ட வைத்தது. அப்படி தேசபக்தி இல்லாமல் தாயகத்தின் பெருமைகளை அன்னியரின் காலடியில் போட்டுவிட்டு பரதேசிகளின் முன்பு சுதேசி உணர்வின்றி கிடக்கும், வெள்ளைக்காரர்களிடம் அடிமைத் தொழில் புரிந்து, அவனிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை பற்றி "மறவன் பாட்டு" எனும் பாடலில் "மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள் வலியும் தோள் வலியும் போச்சே" என்று சொல்லிவிட்டு அன்னியருக்குச் சேவகம் செய்து வயிறு வளர்க்கும் அடிமைகளைப் பார்த்துச் சொல்லுகின்றான் "சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று.

இந்த நிலைமை மாறாதா? விடிவெள்ளி தோன்றாதா? என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புதிய கோணங்கியின் குரல் கேட்கிறது. அவன் என்ன சொல்லுக்கிறான். நள்ளிரவு முடிந்து பகல் தோன்றும் அறிகுறிகள் தெரியும் வேளையில் அவன் குரல் கூறும் சொற்கள் மனதுக்கு ஆறுதல் தருகிறது. இதோ அவன் சொல்லுகிறான்:-

"நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது
தரித்திரம் போகுது; செல்வம் பெருகுது
படிப்பு வளருது; பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான், ஐயோவென்று போவான்."

இப்படி நல்ல குறி சொல்லிக் கொண்டு வந்த அந்த கோணங்கி நமக்கு உற்சாகம் பெருகும்படியான சொற்களைத் தொடர்ந்து சொல்லுகிறான்.

" ................................ வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது
எந்திரம் பெருகுது; தந்திரம் வளருது"

இந்தப் பெருமையெல்லாம் நமக்குக் கிட்ட வெண்டுமென்றால் சும்மா இருந்தால் கிடைத்து விடுமா? சோம்பித் திரிந்தால் வந்து விடுமா? நிச்சயம் கிடைக்காது. அந்த நிலையை நாம் அடைந்திட உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபட்டால்

"சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது
எட்டு லட்சுமியும் ஏறி வளருது
பயம் தொலையுது, பாவம் தொலையுது
சாத்திரம் வளருது; சாதி குறையுது

நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது"

அப்படியானால் பழைய பழக்க வழக்கங்கள் தொலைந்து போகும். புதிய வாழ்க்கை கிடைத்திடப் போகுது. அந்த மாற்றம் ஏற்பட எத்தனை நாட்கள், எத்தனை காலம் ஆகும்? இந்த கவலை நியாயம்தானே?

மாற்றங்கள் சிறுகச் சிறுகக் கிடைத்தால் வெகு காலம் ஆகுமே. நாம் நம்மை உணர்ந்து கொண்டோம். பழமை எனும் இருட்டறையிலிருந்து புதிய வெளிச்சத்துக்கு வரும்போது இருள் பிரிந்து வெளிச்சம் வருவது போல மெல்ல மெல்ல வரக்கூடாது. பின் எப்படி வர வேண்டும். இருள் நிறைந்த அறையின் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டவுடன் பளிச்சென்று வரும் வெளிச்சத்தைப் போல வரவேண்டும். அதன் பெயர்தான் புரட்சி.

ரஷ்யாவில் ட்சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து லெனின் செய்த புரட்சி பாரதிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். அந்தப் புரட்சியை பாரதி வானளாவப் புகழ்ந்தான். "ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்றான். அப்படி ஆகாவென்று நம் வாழ்க்கையில் ஓர் புரட்சி ஏற்படுமா? ஆம், ஏற்படப் போகிறது என்கிறான். எப்படி?

"பழைய பைத்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது"

என்று நமது பழமை படீலென்று வெடித்துச் சிதறி புதிய மாற்றங்கள் உடனடியாக ஏற்படப் போகின்றன என்று நமக்கு நம்பிக்கை ஊட்டியவன் பாரதி. இந்தக் கவிதைகளெல்லாம் நம் வாழ்க்கையோடு ஒட்டியிருப்பதால் இதை கவிநயத்துக்காக அல்ல, வாழ்க்கையின் வழிகாட்டும் நம்பிக்கை ஒளியாகப் பார்க்க வேண்டும்.

அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட மக்கள் சும்மா இருந்தால் சுகம் கிட்டுமா? கிட்டாது. பின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவனே பதிலையும் சொல்கிறான். நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குங்கள். எதற்கும் அயல்நாட்டை எதிர்பார்க்கும் நிலைமையை மாற்றுங்கள்.

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
எந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூகி நன் முத்தெடுப்பீரே
அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பிரம தேவன் கலை இங்கு நீரே!"

என்று நம்மை ஊக்குவிக்கிறான். புதிய பாரதம் படைக்கப் புரப்படுங்கள் என்று நம்மை அவசரப்படுத்துகிறான்.

எதற்கும் அயலாரை அண்டி நின்ற நமது நிலைமை மாறி தன்னிறைவு அடைந்த பின் நம்மைப் போல பிந்தங்கியவர்களுக்கு நாம் உதவ வேண்டும். பிறருக்கு வழிகாட்ட வேண்டும்.

இதைச் சும்மா வார்த்தைக்காகச் சொல்லவில்லை அவன் திரும்பத் திரும்ப பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறான். எப்படி?

"எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்"

அவ்வளவு நம்பிக்கை, இந்த மண் மீது, இந்த மண்ணின் மைந்தர்கள் மீது.

வெற்றி பெற்றால் துள்ளிக் குதிப்பதும், வீழ்ந்து விட்டால் துவண்டு போவதும் மனித இயல்பு. ஆனால் இந்த இயல்பு மானுடரின் வாழ்வு உயரப் பயன்படுமா என்றால் பயன்படாது. வெற்றியும் தோல்வியும் வீரருக்கழகு. வெற்றியினால் உன்மத்தனாகாமல், தோல்வியினால் துவண்டு போகாமல் வாழும் நிலையை அமர நிலை என்கிறான். முதல் உலக யுத்தம் வந்தது. ஜெர்மனி சின்னஞ்சிறு நாடான பெல்ஜியத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அபகரித்துக் கொள்கிறது. இங்கு பெல்ஜியம் வெகு சுலபத்தில் வீழ்ந்து விடவில்லை. தங்கள் நாட்டுக்காக அந்த மக்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து மண்ணோடு மண்ணாக மடிய நேரிடினும் மானத்தைக் காப்போம் என்று போராடி உயிர் நீத்தனர். இந்த நிகழ்ச்சி பாரதியின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.

வீரம் செறிந்த அந்த பெல்ஜிய மக்களைப் பாராட்டுகிறான்.

"அறத்தினால் வீழ்ந்து விட்டாய்
அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைத் தாக்கி
மொய்வரைக் குறப்பெண் போல
திறத்டினால் எளியயாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்"

இந்தச் செய்தியைச் சொல்லும் போது பெல்ஜியம் அடைந்த வீழ்ச்சியை "அறத்தினால் வீழ்ந்தாய்" என்கிறார். "திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்" எனும்போது உன் வீழ்ச்சி, உன் தோல்வி, வீழ்ச்சியுமல்ல, தோல்வியுமல்ல ஏனென்றால் போர்க்களத்தில் நீ "உருளுக தலைகள், ஓங்குக மானம் என்று எதிர்த்து நின்றாய்" என்கிறார். தோல்வியடைந்தது பெரிதல்ல. எதிரி வலிமையானவன் என்றாலும் அவனை எதிர்த்து நின்று நான் அழிந்தாலும், மானம் நிலைத்து நிற்கும் என்று போரிட்டாயே அதற்காகத் தலை வணங்குகிறேன் என்கிறார்.
இது பெல்ஜியத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் பாரதி வழங்கும் பாராட்டுரை அதுவேயாகும்.

தமிழர்கள் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறி விட்டனர். அப்படி அவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம் அவர்கள் பாலையும் தேனையும் பருகிடவில்லை. கருடுமுரடான வாழ்க்கை; அடிமைச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட வாழ்க்கை. நித்திய கண்டமாக இருந்த அவர்கள் வாழ்வைக் கண்டு பாரதி கண்கலங்கினார். கடல் கடந்து வாழும் தமிழ்ப் பெண்களின் துயரம் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது.



"பிஜித் தீவில் தமிழ்ப் பெண்கள் படும் தொல்லைகள்" குறித்த அவரது பாடலைப் படித்துக் கண்ணீர் சிந்தாதார் யார் இருக்க முடியும்? பாரதியாரோடு வ.வெ.சு.ஐயர், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது பாரதி சொன்னார்: "நம் தமிழ்நாட்டுப் பெண்கள் பிஜித் தீவில் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் பேசிய ஆங்கிலப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அதனைக் கவிதையாகத் தந்திருக்கிறேன்" என்றார். பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்றார் வ.வெ.சு.ஐயர். பிஜித் தீவில் உள்ள ஏராளமான கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யத்தான் இந்தியர்கள் அங்கே சென்றார்கள். ஆகையால் அந்தப் பாடலுக்குக் "கரும்புத் தோட்டம்" என்று பெயர் வைத்தேன் என்றார் பாரதி.

எங்கே அந்தப் பாடலைப் பாடுங்கள் என்றனர் ஐயர். பாரதியார் பாடினார், கேட்டவர்கள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது என்ன விவரம் என்று பாரதியாரிடம் கேட்டபோது சொன்னார். சென்னையில் தொழிலாளர் வசிக்கும் பகுதியொன்றில் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு மனைவி தன் குழந்தையுடன் வீட்டுக் கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். அப்போது ஒரு ஆள் அவசரமாக ஓடிவந்து அவளது கணவன் விபத்தில் அடிபட்டுவிட்டான் சீக்கிரம் வா என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்

அப்படிச் சென்றவன் நேராகத் துறைமுகத்துக்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த கப்பலில் அவளை ஏறச் சொன்னான். என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய். என் கணவர் எங்கே என்றாள் அவள். இங்கு ஒரு வேலையாக வந்தபோதுதான் விபத்து என்று சொல்லி அவளை அங்கு அழைத்துச் சென்றான். அவள் கப்பலுக்குள் ஏறியதும் கப்பல் நகரத் தொடங்கியது. அவள் அலறி அழத் தொடங்கினாள். சுற்றிலும் அவளைப் போல் அபலைப் பெண்கள் பலர் இருந்தார்கள். அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை நீங்களெல்லாம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள், 'பெண்ணே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். நம்மையெல்லாம் அடிமைகளாக்கி விட்டார்கள். பிஜித்தீவில் இருக்கும் ஆண்களுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டு விட்டோம் என்றார்கள். இப்படி பாரதி சொல்லிக் கொண்டிருக்கையில் வ.வெ.சு.ஐயர் கேட்டார், அந்த கணவன் விஷயம் என்ன ஆயிற்று என்று.

பாரதி சொன்னார், அந்தக் கணவன் வீடு திரும்பிய போது அங்கு ஒரு துண்டுச் சீட்டில் அவன் மனைவி எழுதியதைப் போல 'உன் ஏழ்மைத் தனத்தில் என்னால் இருக்க முடியவில்லை. நான் பெரிய பதவியை அடையப் போகிறேன், என்னை மறந்து விடு' என்றிருந்ததாம். அதையும் இந்தக் கொடுமையைச் செய்த பாவிகள் செய்திருந்தார்கள். இந்த செய்தியைக் கேட்ட மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரி அழத் தொடங்கினாள். வ.வெ.சு.ஐயர் சொன்னார், பெரியவர்களாகிய நம்மாலேயே இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே, இவள் என்ன செய்வாள் பாவம் சின்னப் பெண் என்றார்.

யதுகிரியைத் தேற்றும் பொருட்டு பாரதி சொன்னார், 'அம்மா யதுகிரி நீ பயப்படாதே. நான் பாடியிருக்கிற இந்தப் பாட்டால், காளி அந்தப் பெண்களின் அடிமைத்தனம் விலகிப் போகும்படி செய்வாள், நான் அவளிடம் முறையிட்டிருக்கிறேன்' என்றார்.

அந்தப் பாடலில் வரும் வரிகளைப் பாருங்கள்:-

"கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்தில் அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்து கின்றனரே - ஹிந்து மாதர் தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்கு கின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற் கில்லையோ - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றனரே

பெண்னென்று சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே
எண்ண மிரங்காதோ - அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்த

நாட்டை நினைப்பாரோ - எந்த நாள் இனிப்போய் அதைப் பார்ப்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ - அவர் விம்மி அழவும் திறங்கெட்டு போயினரே

நெஞ்சம் குமுறுகின்றார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமும் இல்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே
மிஞ்ச விடலாமோ? ஹே! வீர கராளி! சாமுண்டி காளி!!

பாடலை முடிக்கும் போது அந்த வீரமாகாளியிடம் முறையிட்டு முடித்து விடுகிறார். நம்மால் இனி ஆவது ஒன்றுமில்லை. எந்த ஆதரவும் இல்லாமல் அந்த பேதைப் பெண்கள் கண்ணற்ற அந்தத் தீவினில் படும் கொடுமையை எண்ணி எண்ணி அவர் மனம் அரற்றியிருக்கிறார். அந்தப் பெண்கள் விம்மி அழும் விதத்தை அவர் எத்தனை 'விம்மி விம்மி' என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

தூங்கிக் கிடந்த சமுதாயத்தை தட்டி எழுப்ப நினைத்தவன் பாரதி. எனவேதான் அவன் தாலாட்டு என்று எதையும் பாடி வைக்கவில்லை. தமிழ்நாட்டில் மற்ற கவிஞர்களெல்லாம் தாலாட்டுப் பாடி குழந்தைகளைத் தூங்க வைத்தனர். ஆனால் இங்கு குழந்தைகள் கூட தூங்கக்கூடாது, விழித்தெழ வேண்டும் என நினைத்தவன் பாரதி. பாரதி காலத்துப் புலவர்கள் பலரும் தாலாட்டுப் பாடினர்.

கவிமணி பாடுகிறார்: "கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு, ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ" என்றும்
பாவேந்தர் பாடுகிறார்: "சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு, நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு" என்றும்
பாவேந்தரின் மற்றொரு தாலாட்டு: "மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு"
நாமக்கல்லார் பாடியது: "சீராரும் காவேரி தேவி திருவருளால் வாராமல் வந்துத்த மாமணியே கண்ணுறங்கு" என்று இப்படி பலரும் பாடியிருக்கையில் பாரதி மட்டும் "பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி" என்று பாரத அன்னையைத் துயில் எழுப்பிப் பாடுவதை மட்டும்தான் நாம் காண முடிகிறது. ஆக, தமிழரை விழித்திருக்கச் சொன்னான் பாரதி.

மொழிப்பற்று:

சமூகத்தின் பால் அவனுக்கிருந்த அக்கறையைப் போலவே மொழியின் பாலும் அவன் அதிக அக்கறை காட்டினான். தமிழ்மொழி உலக மொழி என்பது பாரதியின் கருத்து. தமிழ் மொழி "உயர் ஆரியத்திற்கு நிகர்" என்றும் "தமிழ்ச்சாதி ஆரியக் குடும்பத்திலே தலைக்


குழந்தை" என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதிலிருந்து, இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் தலைமொழி என்பது பாரதியின் உறுதியான முடிவு.

அதோடு மட்டுமல்ல, ஒருநாள் தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தலைமை ஏற்கும் என்பது அவன் துணிபு. அவன் கட்டுரையில் காணப்படும் சில வரிகள் இதோ:

"எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அது பற்றியே தமிழைப் போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கிறேன். இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளி உலகத்திலே பரவாமலிருப்பதை நான் அறிவேன். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள்" எவ்வளவு தீர்க்கமான, உறுதியான பிரகடனம் இது.

தமிழ் மொழி வாழ்த்து என்ற பாடலில் அவன் சொல்லும் கருத்து வியப்பைத் தருகிறது. தமிழ் மொழி வானம் எவைகளையெல்லாம் பார்க்க, அறிந்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் அறிந்த மொழியாம்.

"வானம் அளந்த தனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே!"

இங்கு வானம் என்ற சொல் உலகைக் குறிக்கும் சொல் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தனது பாரதி நினைவுச் சொற்பொழிவுகளில் கூறியிருக்கிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாத மாற்றங்கள். பழைய பாரதத்தைப் பார்த்துப் போ போ என்று சொன்ன பாரதி புதிய பாரதத்தை வா வா என்று வரவேற்பதைக் காண்கிறோம். பழைய தீமைகள் அடியோடு பொசுங்கிப் போக, புதிய பாரதம் இளைய பாரதத்தவரால் உருவாகும் என்பது அவரது கணிப்பு.

தமிழ் மொழியின் பாரம்பரியப் பெருமையும், இலக்கியத் திறனும் ஆதிக்கச் சக்திகளால் ஒளியிழந்து கிடந்த நிலையில் தமிழின் பெருமையைத் தூசி தட்டி வெளி உலகு கண்டு வியக்கும் வண்ணம் ஒளிரச் செய்கிறார் பாரதி. அவரது இந்தச் செயலுக்கு கம்பனின் காப்பியத்தில் ஒரு ஒப்புமையைக் காட்டலாம். இரண்ய வதைப் படலத்தில் இரண்யனை வதைக்க நரசிங்கம் அவதாரம் செய்து சீற்றங்கொண்டு சிரிக்கிறதாம். அதை கம்பன் வாக்கால் சொல்லுவதானால்

"திசை திறந்தது, அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்" திசைகள் பிளந்து கொண்டனவாம். அண்டம் அதிர அதிலிருந்து கண்கள் சிவக்கப் புறப்பட்டது சீற்றம் கொண்ட அந்தச் சிங்கம்" என்கிறது கம்பனின் காவியம்.

அதனைப் போல தமிழ் மொழிக்கு ஓர் தாழ்வு ஏற்படுமானால் அதனை முறியடித்து தமிழின் பெருமையை நிலைநாட்ட பாரதி எனும் சிங்கம் சீயமென உருவெடுத்தது எனலாம்.

பாரதியாரின் "ஸ்வதேச கீதங்கள்" எனும் தலைப்பில் வெளியான பாடல்களில் முதல் பாடல் "வந்தே மாதரம் என்போம்" என்பது. இந்தப் பாடலில் வரும் வரிகளில்

"ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்திலே எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே."

என்று பிரகடனப் படுத்தியதோடு "இங்கு எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று தனது பிரகடனத்தை நிறைவு செய்கிறார்.

பாரதி தன்னைப் பிறரிடமிருந்து பிரித்துத் தான் இயற்றும் கவிதைகள் புதியவை என்று கூறப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர் தமிழில் பல புதிய சொற்களை உருவாக்கி எழுதிக் காட்டியிருக்கிறார். தமிழின் வளர்ச்சி இதுபோன்ற செயல்களில்தான் இருக்கிறது. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குப் புதிய சொற்களை படைத்துக் காட்டினார். சான்றாக 'விடுதலை' என்ற சொல் ஆன்மீகத்தில் 'முக்தி' அல்லது 'வீடுபேறு' எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பாரதியும் ஒரு கட்டுரையில் 'வீடு' எனும் சொல்லுக்கு 'விடுதலை' என்பது பொருள் என்று எழுதுகிறார். அவரே இந்திய சுதந்திரத்தைச் சுட்டும் சொல்லாக விடுதலையைப் பயன்படுத்தினார். சமுதாயத்தில் அழுத்தப் பட்டோரின் உயர்வினையும் 'விடுதலை' எனும் பொருளில் 'பெண் விடுதலை' என்றெல்லாம் எழுதுகிறார். அப்போது ரஷ்யாவில் உதயமான கம்யூனிச, சோஷலிச இயக்கத்தை சமதர்மம், சமத்துவம், பொதுவுடமை எனும் சொற்களால் குறிப்பிட்டு எழுதுகிறார். குயில் பாட்டில் குயிலின் இசையைக் கேட்கும் கவிஞர் அதன் சுவை பற்றி எழுதும் போது 'தீயின் சுவை' என்கிறார்.

'மெம்பர்' எனும் சொல்லுக்கு என்ன தமிழ்ச்சொல் என பாரதிக்கு ஓர் ஐயப்பாடு. அப்போது அதற்கெல்லாம் தமிழ்ச்சொல்லை யாரும் பயன்படுத்தவில்லை ஆகையால் அதற்கு நேரான தமிழ்ச்சொல் கண்டுபிடிக்க முயல்கிறார். அவரே கூறுவது இது:-

"'மெம்பர்' என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'அவயவி' என்பது சரியான வார்த்தை இல்லை. 'அங்கத்தான்' கட்டி வராது. 'சபிகள்' சரியான பதந்தான் ஆனால் பொது ஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். "உறுப்பாளி" ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக 'மெம்பர்' என்றே எழுதிவிட்டேன். இன்னும் ஆர, அமர, யோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்."

பாரதி தமிழின் உயர்வுக்காகச் சில கனவுகள் கண்டான். அவற்றை ஓரளவு வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த கனவுகள் கைப்படுமா? மக்கள்தான் சொல்ல வேண்டும்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்"

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
"எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!"

"நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்
வேண்டாதது அனைத்தும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே!"

"எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா"

"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்"

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

தெய்வம் துணை செய்ய வேண்டும்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்"

பாரதி கண்ட கனவுகள் மெய்ப்படுமா என்பது மக்கள் எங்ஙனம் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

நிறைவாக பாரதியின் "எங்கள் மதம்" எனும் தலைப்பில் 'உயிர் பெற்ற தமிழர் பாட்டு" எனும் பாட்டிலிருந்து சில வரிகளைத் தருகிறேன்.

"மனிதரில் ஆயிரம் சாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை" என்று சொல்லிவிட்டு

"ஒன்றுண்டு மானிடச் சாதி - பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்
இன்று படுத்தது நாளை - உயர்ந்து
ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும்".

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை, குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தின ரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

இப்படிச் சொல்லிவிட்டு யார் மேற் குலத்தார் எனும் வினாவுக்கு விடைதரும் பாங்கில் அவன் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறான்.

எது யோகம்? "ஊருக்குழைத்திடல் யோகம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம், போருக்கு நின்றிடும் போதும், உளம் பொங்கல் இல்லாத அமைதிதான் மெய்ஞானம்". பகவத் கீதை சொல்லும் கருத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டான் பாரதி.

தான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் இல்லை. பசி வந்தால் வயிற்றுக்கு இட்டு, பிணி வந்தால் நொந்து போய் படுக்கையில் படுத்து, காலன் வந்து அழைக்கையில் இறந்து போகும் சாதாரண மனிதனா நான்? இல்லை இல்லை. பின்பு நான் யார் தெரியுமா?" கேட்கிறான் பாரதி. அதற்கான பதிலை அவன் வாக்கால் கேட்போம்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"



இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு பின் என்னதான் செய்வாய்? சொல்லுகிறான்.

"நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்
அதற்கடுத்து ராமானுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்
பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்!"

இது எப்படி சாத்தியமாகும்? நீ மட்டும் சாகாமல் இருப்பது எப்படி?

"கேளீர்!
நாணத்தை கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன்; சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை"

என்று நமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

பாரதியின் பல்வேறு பரிணாமங்களையும் முழுமையாக நாம் கண்டு கொள்ளாவிட்டாலும் அவனை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறோம். இந்த சமூகத்தின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் அவன் கொண்டிருந்த காதலை ஓரளவுக்குப் பார்த்தோம். பாரதியை இனியும் தொடர்ந்து தேடுவோம். வாழ்க பாரதி புகழ்.




















Monday, May 23, 2011

முத்துத்தாண்டவர் (1525 - 1600)

முத்துத்தாண்டவர் (1525 - 1600)

தமிழிசை மூவரில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் முத்துத்தாண்டவர். மற்ற இருவர் அருணாசல கவிராயர் (1712 - 1779) மற்றவர் மாரிமுத்தா பிள்ளை (1717 - 1787). இவர்கள் மூவரையும் தமிழிசை மூவர் என்று போற்றி வருகிறோம். சீர்காழியில் ஆண்டுதோறும் இம்மூவரின் இசை விழா நடைபெற்று வருகிறது. முத்துத்தாண்டவரை கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்றுகூடச் சொல்லலாம், காரணம் இவர் உருவாக்கிய சங்கீத முறையில்தான் கிருதிகளில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியில் வசித்தார். இவருடைய பங்களிப்பு கர்நாடக சங்கீதத்துக்கு மிக அதிகமென்றாலும் கூட இவருடைய பல கிருதிகளில் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன. இவரும் ஒரு காலகட்டம் வரை மறக்கப்பட்டிருந்தார். முத்துத்தாண்டவர் பல அழகிய பதங்களை இயற்றியிருக்கிறார். பரதநாட்டியத்தில் பாடி ஆடுவதற்கு ஏற்ப பல சிறிய பாடல்களையும் இவர் இயற்றித் தந்திருக்கிறார். இவருடைய பதங்கள் இன்றும்கூட பாடி ஆடிவருவதை நாம் காணலாம். குறிப்பாக இவருடைய "தெருவில் வாரானோ?" எனும் கமாஸ் ராகப் பாடலைச் சொல்லலாம்.

முத்துத்தாண்டவர் சீர்காழியில் ஆலயங்களில் பணிபுரியும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வம்சத்தில் உதித்தவர். தற்காலத்தில் இவர்களை இசை வேளாளர்கள் என்று அழைக்கிறார்கள். இவருடைய இயற்பெயர் 'தாண்டவன்' என்பது. இந்தப் பெயர் தில்லையில் நடனமிடும் நடராஜப் பெருமானைக் குறிப்பது. இவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட உடல் உபாதையின் காரணமாக இவரது வளர்ச்சி குன்றி, பார்ப்பதற்கு நன்றாக இருக்க மாட்டார். இதனால் இவர் பிறருடன் பழகுவதை நிறுத்தி விட்டார். குடும்பத்தினரின் தொழிலான நாதஸ்வரத்திலும் இவர் பயிற்சி பெறவில்லை. மற்றவர்களும் இவரை ஒதுக்கியே வைத்திருந்தனர். இவருடைய வியாதியினால் இவர் உடலில் தோல் பகுதிகள் மாற்றம் பெற்று பார்க்க அருவெறுப்பாக இருந்தது.

இவருடன் பழகிய ஒரே ஜீவன் சிவபாக்கியம் என்பவர்தான். இவர் தினந்தோறும் சிவபெருமான் குறித்த பாடல்களை இவருக்குப் பாடிக் காட்டுவார். அதையும் மற்றவர்கள் விரும்பவில்லை, குறைகூறினார்கள். இவரை வீட்டிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள். இவர் தன்னுடைய சகா பாடுவதையும் ஆடுவதையும் போய் தினமும் பார்க்கத் தொடங்கினார். சிவபாக்கியம் பாடிய பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்திருந்தன. இவர் அவற்றை விரும்பிக் கேட்கத் தொடங்கினார். தானும் அதுபோல பாடல்களை இயற்றத் தொடங்கினார். ஆலயத்துக்கு வழிபாடு செய்ய வருகின்றவர்கள் இறைவனைப் புகழ்ந்து கூறும் சொற்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தன் பாடல்களில் வைத்துப் பாடத் தொடங்கினார். அப்படியே தினமும் ஆலயத்தில் இவர் பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டு பல பதங்களை இயற்றிப் பாடினார். 'தெருவில் வாரோனோ' பதம் மிகவும் புகழ் பெற்றுவிட்டது. பல நடனக் கலைஞர்கள் இந்தப் பாடலைப் பாடி ஆடினர். வயிற்றுப் பாட்டுக்கு ஆலயத்தின் பிரசாதம் கிடைத்து வந்தது. ஆனாலும் இவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. நடக்க முடியாமல் தவழ்ந்து வரும் நிலைக்குப் போனது நிலைமை. அப்படி ஒரு நாள் தவழ்ந்து வந்து மயக்கமாகி கீழே விழுந்தார். எழுந்திருக்க முடியவில்லை. கோயில் அர்ச்சகர்கள் இவரை அப்படியே விட்டுவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இரவில் இவருக்கு நினைவு திரும்பி எழுந்து பார்த்தார், ஒரே இருட்டு. பயமாக இருந்தது. இறைவனை அழைத்து வாய்விட்டு கதறி அழுதார். அப்போது கோயில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவருடைய சின்ன பெண் அங்கு தோன்றினாள். அவள் கையில் இவர் சாப்பிட உணவு கொண்டு வந்திருந்தாள். அந்தப் பெண் உணவை இவருக்குக் கொடுத்து ஆறுதல் கூறினாள். அப்போது அந்தப் பெண் கூறினாள், நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் அங்கு தினமும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து வாருங்கள். அந்தக் கோயிலில் நீங்கள் முதன்முதலாகக் காதால் கேட்கும் சொல் எதுவோ அந்தச் சொல்லை முதலாக வைத்து இறைவன் சந்நிதியில் புதிது புதிதாகப் பாடலை இயற்றிப் பாடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

மறுநாள் அர்ச்சகர் கதவைத் திறந்து பார்த்தபோது அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. உடலில் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தாண்டவருக்கு முழுவதுமாக குணமாகி சாதாரணமாக இருப்பதைப் பார்த்தார். இதென்ன ஆச்சரியம். முதல் நாள் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இவருக்கு எப்படி ஒரே இரவில் குணமாயிற்று? எல்லாம் இறைவன் செயல். அவனது திருவிளையாடல் என்று தாண்டவருக்கு "முத்துத் தாண்டவர்" என்று பெயரிட்டு அழைத்தார். முத்துத்தாண்டவருக்கு அப்போதுதான் ஒரு உண்மை புலனாயிற்று. தான் முன்பும், முதல் நாள் இரவும் பார்த்த அர்ச்சகரின் மகள் என்று நினைத்திருந்த அந்தச் சிறுபெண் வேறு யாருமல்ல, தான் தினமும் மனம் உருகி வணங்கி பாடிவரும் உமையம்மைதான் அவள் என்று புரிந்து கொண்டாள்.

அடடா! அம்மையின் கருணைதான் என்னே. லோகநாயகியான அன்னைத் தன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி தேடிவந்து உணவளித்து, உய்ய வழிகாண்பித்துச் சென்றாளே என்று மனம் உருகினார். நேரில் கண்டபோது அன்னையை யாரென்று அறியாமல் போனேனே. என்னே என் அறியாமை என்று மனம் வெதும்பினார்.

அன்னை பணித்தபடி உடனே கிளம்பி அவர் தில்லை பொன்னம்பலம் சென்றடைந்தார். அங்கு ஆலயத்தில் அவர் கேட்ட முதல் சொல் 'பூலோக கைலாயகிரி சிதம்பரம்". அதனை முதலடியாகக் கொண்டு அவருடைய முதல் பாடல் ஆரம்பமானது. இப்படி தினந்தினம் சிதம்பரம் செல்வதும் புத்தம் புதிய பாடல்கள் தோன்றுவதாகவும் நாட்கள் போயின. அப்படி ஒரு நாள் அவர் சிதம்பரம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தை கவனிக்காமல் நடராஜப் பெருமானையும் அன்னை சிவகாமியையும் மனதில் எண்ணியபடி நடந்தார், கொள்ளிட வெள்ளநீர் பிரிந்து அவருக்கு வழிவிட்டது.

இந்த நிலையில் ஒரு நாள் தாண்டவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அன்று கோயிலில் எவர் சொன்ன எந்த சொல்லும் முதன்முதலாக அவர் காதில் விழவில்லை. அவர் மனம் படபடத்தது. எண்ணம் அலைபாய்ந்தது. இறைவா இது என்ன சோதனை. மனிதர் சொல்லும் எந்தச் சொல்லும் என் செவிகளில் விழவில்லையே, என்ன செய்வேன், என்ன சொல்லி உன் புகழ் பாடுவேன். நெஞ்சம் படபடத்த ஒலிமட்டும்தான் அவர் செவிகளில் விழுந்தன. கதறி அழுதார், நெஞ்சே, ஒலி எழுப்பாதே, "பேசாதே நெஞ்சமே!" என்று சொல்லி அழுதார். அதுவே அன்று அவர் சொல்லி, அவர் செவிகளால் கேட்ட முதற் சொல். அந்தச் சொல் கொண்டே அன்றைய பாடல் பிறந்தது. பிறர் சொன்ன சொல்லை முதன்முதலாகக் கேட்டு பாட்டு இயற்றியது போயி, இப்போது தானே சொல்லி பாட்டு பிறக்கலாயிற்று.

முத்துத்தாண்டவரின் வாழ்க்கை இப்படியே, தில்லை நடராஜனும், சிவகாமி அம்மையும் அவர்கள் எதிரில் தினமும் பாடும் வழக்கமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர் வயதும் ஓடிக்கொண்டிருந்தது. வயது 80 ஆயிற்று. ஒரு நாள் தில்லை நடராஜப் பெருமான் சந்நிதியில் ஓர் பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்தப் பிழம்பு உருவாகி, மறையும்போது அந்த ஒளியிலேயே முத்துத்தாண்டவரும் மறைந்து போனார். அன்று பூச நட்சத்திரம். நடராஜர் ஆனந்த தாண்டவம் புரிந்து இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த நாள். முத்துத்தாண்டவரும் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைந்தார்.

முத்துதாண்டவர் இயற்றியருளிய பல பாடல்களில் எஞ்சியவை மிகச்சிலவே. காலத்தால் அழிந்துபோனவை தவிர கிடைத்தவை மிகச் சில. அப்படிக் கிடைத்த பாடல்கள் அறுபது என்கின்றனர். 25 பதங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடைய பாடல்கள் இப்போதெல்லாம் அடிக்கடி மேடைகளில் பாடப்படுகின்றன. அதிலும் தமிழிசை கோலோச்சத் தொடங்கியபின் தமிழ் மூவர் என்று இவர்கள் பாடல்களுக்கெல்லாம் தனிமரியாதை கிடைத்து இசைக்கப்படுகின்றன. அதிகமாகப் பாடப்படும் சில பாடல்களாவன, "அருமருந்தொன்று தனி மருந்திது" எனும் மோகனம் அல்லது காம்போஜி ராகப் பாடல், "பேசாதே நெஞ்சமே" எனும் தோடி ராகப் பாடல், தன்யாசி அல்லது காம்போஜியில் பாடப்படும் "காணாமல் வீணிலே", கமாஸ் ராகப் பாடல் "தெருவில் வாரானோ", கீரவாணி ராகத்தில் "உனை நம்பினேன் ஐயா", "ஈசனே கோடி சூர்ய பிரகாசனே" எனும் நளினகாந்தி ராகப் பாடல், "சேவிக்க வேண்டுமையா" எனும் அந்தோளிகா ராக பாடல், "இன்னும் ஒரு தரம்" எனும் சிம்ஹேந்திரமத்யமம் ராகப் பாடல், இன்னும் ஒரு சுருட்டி ராகப் பாடல் இவைகளைச் சொல்லலாம். தமிழும் தமிழிசையும் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமையும், இறையருள் பெற்ற முத்துத்தாண்டவர் பாடல்களும் என்றும் நிலைத்திருக்கும்.

அப்சல்கான்

அப்சல்கான்

மராட்டிய போன்ஸ்லே வம்சத்தில் வந்த ஷாஜி பிஜப்பூர் சுல்தானுக்குப் பல விதங்களிலும் உதவி அந்த ராஜ்யம் வலுவாக இருக்க பெரும் உதவி புரிந்திருக்கிறார். தட்சிண பிரதேசத்தில் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா என்பவருக்கும் அகமதுநகரை ஆண்ட நிஜாம் பாட்ஷாவுக்கும் அடிக்கடி யுத்தம் ஏற்பட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று மோதிக்கொண்டனர். இதில் டில்லி சக்கரவர்த்தியின் உதவியையும் நிஜாம் பெற்று வந்தார். போன்ஸ்லே வம்சத்தில் மாளோஜி என்றொரு ராஜா. இவருக்கு 1594 மார்ச் மாதம் 13ம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஷாஜி என்று அழைக்கப்பட்ட மாவீரர்.

ஷாஜிக்கு ஐந்து வயதானபோது கோலாப்பூர் ராஜாவுக்கும் அகமதுநகர் நிஜாம்ஷாவுக்கும் ஒரு யுத்தம் ஏற்பட்டது. அந்த யுத்தத்திற்கு ஷாஜியின் தந்தை மாளோஜியை நிஜாம் பெரும்படையுடன் அனுப்பியிருந்தார். அந்தப் போரில் மாளோஜி தீரத்துடன் போராடியும் எதிரிகளால் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இறந்துபோன மாளோஜிக்கு இரண்டு புதல்வர்கள். முதல் மகன் முன்பே சொன்னவாறு ஷாஜி, இரண்டாவது சரபோஜி. தந்தையை இழந்த இந்த இரு சிறுவர்களும் அவர்களுடைய சிற்றப்பனான விட்டோஜி என்பவனிடம் வளர்ந்தார்கள்.

வயது வந்த பின் ஷாஜி மோத்தேராம் என்பவருடைய மகளாகிய துக்காபாயி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1620ல் ஷாஜி நிஜாம் தனக்கு அளித்த பிரதேசத்தைச் சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார். அந்த ராஜ்யம்தான் சதாரா. ஷாஜி சதாராவை ஆண்டுவந்த காலத்தில் தேவகிரி யாதவ அரச மரபில் யாதவராஜா எனப்படும் லகோஜி ஜாதவ் ராவ் என்பவர் 10,000 குதிரைப்படைக்குத் தலைவராக இருந்தார். அந்த யாதவராஜாவுக்கு ஒரு மகள். அவர்தான் புகழ்பெற்ற வீரன் சிவாஜியைப் பெற்ற பாக்கியசாலி ஜீஜாபாய். இந்த பெண்ணை ஷாஜி இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ராஜ்ஜியத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்ததின் பலனாக ஷாஜி பிஜப்பூர் சுல்தான் படைகளும், ஷாஜியின் படைகளும் நிஜாம்ஷா மீது படையெடுத்தனர். அந்தப் போரில் நிஜாம் தோற்றுப் போனார். ஷாஜியின் வீரத்துக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் காரணமாக அலியடில்ஷா ஷாஜிக்கு மேலும் சில பிரதேசங்களை ஜாகீர் செய்து கொடுத்தார். இப்போது ஷாஜி அசைக்கமுடியாத வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.

பிஜப்பூர் சுல்தானின் கரங்களை வலுப்படுத்திய ஷாஜி விஜயதுர்க்கம் எனும் விஜயபுரத்தில் தன் மனைவிகளோடு குடும்பம் நடத்தினார். அப்போது ஜீஜாபாய்க்கு 1619 அக்ஷய வருஷம் முதல் மகன் சாம்பாஜி பிறந்தார். இந்த காலகட்டத்தில் டில்லி பாதுஷா ஜஹாங்கீர், 1628ல் தரியாகான் எனும் தளபதியை முகலாய பெரும் சேனையொன்றுடன் நிஜாம் மீது படையெடுக்க அனுப்பிவைத்தார். நிஜாம்ஷா அப்போது தனக்கு எதிராக இருந்த ஷாஜியை ரகசியமாக அழைத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இப்போது முகலாய படையை எதிர்ப்பதற்கு ஷாஜியை அனுப்பினார் நிஜாம். அந்த நேரத்தில் ஜீஜாபாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்குச் சில வீரர்களைத் துணையாக வைத்துவிட்டு ஷாஜி பெரும் படையுடன் போருக்குப் புறப்பட்டார். போரில் தரியாகானின் படை தோற்றது. வெற்றிவீரனாக ஷாஜி சிவனார் கோட்டைக்குத் திரும்பிய போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அது 1627ம் வருஷம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஜீஜாபாயிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்பதுதான் அந்தச் செய்தி. தனக்குப் போரில் வெற்றியும், அதே நேரத்தில் ஓர் ஆண் மகவையும் கொடுத்த அன்னை பவானியை வணங்கினார் ஷாஜி. அந்தக் குழந்தைதான் சத்ரபதி சிவாஜி என்று பின்னர் புகழ்பெற்ற மாவீரன்.

சதாராவுக்குத் திரும்பி தங்கியிருந்த போது ஷாஜிராஜாவின் முதல் மனைவியான துக்காபாயிக்கு ஏகோஜி எனும் மகன் பிறந்தான். இந்த ஏகோஜிதான் பிறகு தஞ்சைக்கு வந்து நாயக்க மன்னர்களிடமிருந்த தஞ்சாவூர் ராஜ்யத்தைத் தன்வசப்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த பெருமைக்குரியவன். இவன் பெரியவனான பிறகு பெங்களூர் வந்து கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். ஷாஜியின் மகன் சிவாஜி புனாவில் இருந்தார். அங்கு அவர் தாதாஜி பந்த் என்பவரிடம் கல்வி பயின்றார். சிவாஜிக்கு 12 வயது ஆனது. அந்த வயதிலேயே அவன் மகா வீரனாக விளங்கினான். ஷாஜியின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த சிவாஜி, முதல் மனைவியின் மகன் ஏகோஜியைவிட வயதில் மூத்தவர்.

சிவாஜி சதாராவுக்குத் திரும்பி அங்கிருந்த 12 சிறிய கோட்டைகளைப் பிடித்து ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். ஷாஜி ராஜாவும் சுல்தான்களிடம் விடை பெற்றுக்கொண்டு சதாராவுக்கு வந்து தன் மனைவிகள், மக்களுடன் வாழலானார். புனாவுக்கு அருகில் புரந்தர் என்றொரு கோட்டை. அது சிவாஜி வசம் இருந்தது. இதை அவர் 1648ல் கைப்பற்றியிருந்தார். அப்போது சிவாஜி தன் துணைவர்களிடம் தன் தந்தை ஷாஜி பற்றி சொல்லும் போது, இவர் சுல்தான்கள் இருவரிடமும் நட்பு வைத்திருந்தார், ஆனாலும் இவரால் அவர்கள் பல வெற்றியை அடைந்தும், இருவரும் இவரை எதிரியாகவே எண்ணி வருகின்றனர் என்றார். அந்த காரணம் தொட்டே அவ்விரு சுல்தான்களும் நம்மை அமைதியாக இந்த சதாராவை ஆளவிடமாட்டார்கள். ஆகையால் இவ்விரு சுல்தான்களையும் முதலில் ஒழித்த பிறகுதான் நாம் அமைதியாக இருக்க முடியும் என்றார். அவரது அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

முதலில் தனது கோட்டையை எவரும் எளிதில் நுழையமுடியாத மலைப் பிரதேசத்தில் கட்டிக்கொண்டார். பிரதாப்கோட்டைக்கு அருகில் செயவலிநகரம் என்பதுதான் அந்தப் பிரதேசம். பல கணவாய்களையும், உயரமான மலைச்சரிவுகளையும் தாண்டித்தான் அந்தப் பிரதேசத்தை அணுகமுடியும். அப்படிப்பட்ட இடத்தில் சிவாஜி தனது குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டு கோட்டையைக் கட்டினார். ஒரு விஜயதசமியன்று சதாராவிலிருந்து புறப்பட்டு சிவாஜி மகாராஜா காடு மலைகளைத் தாண்டி, மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் தான் கட்டிய புதிய கோட்டையில் குடியேறினார். வழியில் ராய்கிரி கோட்டையைப் பிடித்து அதற்கு ராய்கட் எனும் பெயர் சூட்டித் தன் வசம் எடுத்துக் கொண்டார்.

ராய்கிரி கோட்டைக்குச் சொந்தக்காரராக இருந்த இருவரில் சத்திரராஜா என்பவன் தப்பிப் பிழைத்து பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷா IIவிடம் சென்று சிவாஜிக்கு எதிராகப் புகார் செய்தான். சிவாஜியை ஒழிக்காவிட்டால் அவன் கை ஓங்கிவிடும், நாமெல்லாம் அழிந்து போவோம் என்றான். அதற்காக சுல்தான் தனது 12 வாசீர்களை வரவழைத்து ஆலோசனை செய்தான். அவர்களில் அப்சல்கான் எனும் வாசீர் மகாவீரன். இவனுக்கு அப்துல்லா படாரி என்று பெயர். இவன் காலம் சென்ற முகமது ஷாவுக்கும், அவனது சமையல்காரியாக இருந்தவளுக்கும் பிறந்த மகன்.

அவனை அழைத்து சுல்தான் சொன்னார், "நீ போய் பெரிய படையை அழைத்துக் கொண்டு அந்த சிவாஜியை எப்படியாவது உயிரோடு பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவன் நம்மை ஒழித்து விடுவான்" என்று உசுப்பேத்தி விட்டான். அதன்படியே அந்த அப்சல்கானும் படை, கொடி, திரவியம், வீரமிக்க வசீர்கள் ஆகியோடு சிவாஜியை ஒழிக்கப் பயணமானான்.

அப்போது சிவாஜி புனாவுக்கு வந்திருப்பதாகச் செய்தி வந்தது. அப்சல்கானிடம் சுல்தான் சொன்னார், உன்னால் சிவாஜியை அவன் ஊரில் இருக்கும்போது அடையாளம் காண்பது கடினம். அவன் இப்போது பூனா வந்திருக்கிறான். அவன் அங்கிருந்து புறப்படும் முன்பாக நாம் போய் வழியிலுள்ள பிரதாபகிரி கோட்டை, சாவிக்கோட்டை, பண்டரிபுரம் இவற்றைப் பிடித்துக் கொண்டால் அவனை எளிதில் மடக்கிப் பிடித்து விடலாம் என்றான். அப்சல்கானும் அதன்படி திட்டமிட்டு கிளம்பினான். அப்போது அவனுக்குப் பல அபசகுனங்கள் ஏற்பட்டனவாம். பட்டத்து யானை இறந்தது. இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அப்சல்கான் சிவாஜியைப் பிடிக்கப் புறப்பட்டான்.

புனாவில் இருந்த சிவாஜிக்குக் கனவில் அவரது குலதெய்வமான ஸ்ரீ ஜெகதாம்பா துளஜா பவானி தோன்றி உனக்கு ஆபத்து நெருங்கி வருகிறது. உடனே புனாவைவிட்டுப் புறப்படு என்றது. அந்தக் கணமே சிவாஜி எழுந்து அன்னையை வணங்கிவிட்டு புறப்பட்டார். வழிநெடுக இருந்த கோட்டைகளை வலுப்படுத்திவிட்டு வரும் அப்சல்கான் படைகளை எதிர்க்க ஏற்பாடுகள் செய்துவிட்டு வேகமாகச் சென்று விட்டார். போகும்போது எல்லா கோட்டைத் தலைவர்களுக்கும் ஒரு செய்தி சொல்லிச் சென்றார். அது, அப்சல்கான் என்பவன் பெரும் படையோடு வருகிறான். உங்கள் படைகளையெல்லாம் காட்டில் மறைத்து வைத்துவிட்டு அவனை அன்போடு வரவேற்பதுபோல் வரவேற்று அனுப்பி வையுங்கள். அவன் நமது கோட்டையை அடைந்தவுடன் ஒரு நாகரா ஒலி கேட்கும். அப்போது காட்டில் ஒளிந்திருக்கும் உங்கள் படைகளை வெளிவரட்டும். அப்சல்கானோ அல்லது அவன் படைவீரன் எவனாவதோ உயிரோடு திரும்பக்கூடாது என்று உத்தரவிட்டார்.

அதன்படியே அப்சல்கான் பண்டரிபுரம் வழியாகப் போனான். வழியில் பண்டரிபுரம் கோயிலில் இருந்த பாண்டுரங்கணின் உருவத்தை உடைத்தெறிய எண்ணினான். ஆனால் அந்தப் பாண்டுரங்கன் அவன் கண்களில் படவில்லை. அந்த நீசனின் கைகளில் அகப்படாமல் அவர் எங்கு போயிருந்தாரோ தெரியவில்லை. பண்டரிபுரத்தைத் தாண்டி அவன் படைகள் துளஜாபுரம் சென்றபோது அங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீ துளஜா பவானியும் அந்த கொடியவனின் பார்வையில் சிக்கவில்லை. சிக்னாபூரில் சம்பு மகாதேவருக்கு இடையூறு செய்ய நினைத்தான், அங்கிருந்த மராட்டிய வீரர்கள் அவனை முறியடித்து அனுப்பி விட்டார்கள்.

அப்சல்கான் பாலி எனும் கோட்டைக்கு வந்தான். அங்கு கிருஷ்ணாஜி பண்டிதர் எனப்படும் பண்டாஜி கோபிநாத்தை சிவாஜியிடம் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினான். அதில் சிவாஜி அலியடில்ஷாவுக்கு எதிராக செயல்பட்டு கட்டியுள்ள புதிய கோட்டைகளைக் கைவிட்டு, சதாரா வந்து சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். இது பற்றி சமாதானமாக நாம் பேசலாம் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான்.

கிருஷ்ணாஜி பண்டிதர் சிவாஜி ராஜாவிடம் சென்றார். சாமர்த்தியமாகப் பேசி சிவாஜி அப்சல்கானைச் சந்திக்க சம்மதிக்க வைத்தார். சிவாஜி ராஜாவும் அவனை நம்புவதைப் போல பாசாங்கு செய்து அவனை வரவழைத்தார். அங்கு ஜெயவல்லிபுரம் சாவளி என்கிற பெரிய மைதானம், அதைச் சுற்றி அடர்ந்த காடுகள், அந்த இடத்துக்கு அப்சல்கானை அழைத்து வாருங்கள். உட்கார்ந்து சமாதானமாகப் பேசலாம் என்று சொல்லி அனுப்பினார். கிருஷ்ணாஜி பண்டிதனும் அதை அப்படியே போய் அப்சல்கானிடம் சொன்னான். அங்கு அப்சல்கானைச் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள், சிவாஜியை அவ்வளவு எளிதாக நம்பிவிட வேண்டாம் என்று. அப்போது வழிநெடுக இருந்த பாதைகளை அடைக்கச் செய்தார் சிவாஜி. கணவாய்களை மூடிவிட்டார். எக்காரணம் பற்றியும் அந்த அப்சல்கான் தப்பி ஓடிவிடக்கூடது என்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டார். அப்படி யாராவது தப்பி வந்தால் கொன்றுவிடும்படி கட்டளையிட்டார்.

இதையொன்றையும் அறியாத அப்சல்கான் மமதையோடு சிவாஜியைக் காண வந்து சேர்ந்தான். அப்போது ஒரு செய்தி சிவாஜியை எட்டியது. சிவாஜியைக் கொல்ல அப்சல்கான் வருகிறான் என்ற செய்தி கேட்டு வழியில் அவனோடு போரிட்ட சிவாஜியின் அண்ணன் சம்பாஜி போரில் இறந்து போனார் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் சிவாஜியின் ஆத்திரம் அப்சல்கான் மீது அதிகமாகியது.

ஆறு வீரர்கள் பின் தொடர அப்சல்கான் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சிவாஜி ஏற்பாடு செய்திருந்த நாட்டியத்தைப் பார்க்க வந்தான். சிவாஜியும் நான்கு வீரர்களோடு வந்து சேர்ந்தார். இருவருக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. திடீரென்று அப்சல்கான் எழுந்து சிவாஜியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மடியிலிருந்த கத்தியை எடுத்து சிவாஜியின் வயிற்றில் ஓங்கி இரண்டு மூன்று முறை குத்தினான். நல்ல காலம் சிவாஜி ராஜா அங்கிக்கு உட்புறமாக கவசம் அணிந்திருந்தார். கத்தி உடலில் இறங்கவில்லை.

உடனே சிவாஜி ராஜா வலது கையால் தன் பிச்சுவாயை ஓங்கிக் கொண்டே, இடது கையால் இரும்பினால் ஆன புலிநகம் போன்ற ஆயுதத்தால் அவன் வயிற்றில் ஓங்கி அடித்துக் கையால் இழுத்தார். அவன் வயிறு கிழிந்து குடல் சரிந்து விழுந்தான். எனினும், அவன் தனது மேல் அங்கியினால் சரிந்த குடலை எடுத்து வயிற்றில் வைத்துக் கட்டிக்கொண்டு சிவாஜியை மீண்டும் தாக்க வந்தான். சிவாஜியும் தன் கேடயத்தால் அவன் கத்தி தன்மேல் படாமல் தடுத்துக் கொண்டு தன்னுடைய பெரிய வாளால், அவன் இடது தோள் தொடங்கி வலது விலாவரையில் ஓங்கி வெட்டி அவனை இரு துண்டாக ஆக்கினார். விகாரி வருஷம் மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் வியாழக்கிழமை நண்பகலில் இது நடந்தது என்று மெக்கன்சி சுவடிகள் கூறுகின்றன.

அப்சல்கான் வெட்டுண்டு விழுந்ததும், அவனுடைய வாளை கிருஷ்ணாஜி பண்டிதன் எடுத்துக் கொண்டு சிவாஜி ராஜாவைத் தாக்க முனைந்தான். அப்போது ராஜா சொன்னார்:- "ஓய்! பண்டிதரே, நீரோ பிராமணன். ஒரு பிராமணனைக் கொல்வது எனக்கு தர்மமல்ல. நாம் பிராமணர்களின் பாததூளியை பூஜை செய்து வருபவன். நமக்கு குரு, தெய்வம் எல்லாம் பிராமணர்களானபடியால், கையிலிருக்கும் கத்தியைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடும். போவதற்கு வழிகளை சீர்செய்து தர ஏற்பாடு செய்கிறேன். இல்லாவிட்டல் இங்கேயே தங்குவதானால் நான் எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்லுகிறேன்" என்று அன்போடு நிதானமாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

இவ்வளவு சொன்ன பிறகும் அந்த கிருஷ்ணாஜி பண்டிதன் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவரை வெட்டத் துரத்தினான். அவரோ இவனை லட்சியமே செய்யாமல் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். அப்போது இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் ஊழியன் கிஸ்மத்கான் என்பவன் கிருஷ்ணாஜியை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்தி விட்டான்.

சிவாஜி ராஜா நாகராவை ஒலிக்கச் செய்தார். அந்த ஒலி கேட்டதும் ஆங்காங்கே காடுகளில் ஒளிந்திருந்த மராட்டிய படைகள் வெளியே வந்து அப்சல்கானுடன் வந்த படைவீரர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொன்றனர். அவன் கொண்டு வந்த யானை, குதிரை அனைத்தையும் சிறைப்பிடித்தனர். தங்கள் செய்கைக்கு வருந்திய படைத்தளபதிகளை மன்னித்து அவர்களுக்கு உயிர்பிச்சையும், பரிசுகளும் அளித்துத் திருப்பி அனுப்பி வைத்தார் சிவாஜி ராஜா.

Sunday, May 22, 2011

ஊத்துக்காடு வேங்கட கவி

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்

ஊத்துக்காடு வேங்கட கவியென்று புகழ்பெற்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பையருடைய காலம் 1700 முதல் 1765 வரை என்று தெரிகிறது. மிகச் சரியான வரலாறு எழுதி வைக்கப்படாமையல் சில விவரங்கள் பரம்பரையாகவும், உறவினர்கள் மூலமும் தெரிய வருகின்றன. இவர் தமிழ் ஆவணி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவருடைய தந்தையார் இராமச்சந்திர வாதூலர், தாயார் கமலநயனி அம்மாள். தந்தையார் பெயரோடு ஒட்டியிருக்கிற சொல்லிலிருந்து இவர் வாதூல கோத்திரத்தில் உதித்தவராக இருக்கலாம். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு. அவர் பெயர் காட்டு கிருஷ்ணையர் என்பது. இவர் தஞ்சாவூரை            ஆண்ட மராத்திய மன்னனான பிரதாபசிம்ஹ மகாராஜாவிடம் ஆஸ்தான பாடகராக இருந்திருக்கிறார்.

இவர் மன்னார்குடியில் பிறந்தவர் என்றாலும் பாபநாசத்தை அடுத்த ஆவூர் அருகிலுள்ள ஊத்துக்காடு எனும் கிராமத்தில்தான் வளர்ந்தார். இவ்வூருக்கு அருகில்தான் பாகவதமேளாவுக்குப் பெயர்போன மிலட்டூர் எனும் ஊரும், புகழ் வாய்ந்த கர்ப்பரக்ஷாம்பிகா சமேத முல்லைவனநாதர் எழுந்தருளியிருக்கும் திருக்கருகாவூர் எனும் கிராமமும் அமைந்திருக்கின்றன.

பொதுவாக குழந்தை பிறப்பது தாயாருடைய பெற்றோர்கள் இருக்கும் ஊரில் என்பதால், இவருடைய தாயார் ஊர் மன்னார்குடியாகவும் தந்தையார் ஊர் ஊத்துக்காடு எனவும் இருக்கலாம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் உத்தமதானபுரத்தில் பிறந்தார் என்று புத்தகங்களில் எழுதிவருகிறார்கள். உண்மையில் அவர் பிறந்த ஊர் ஆடுதுறை அருகிலுள்ள சூரியமூலை எனும் கிராமம், அது அவரது தாயார் ஊர். தந்தையார் வாழ்ந்த ஊர் உத்தமதானபுரம். இது பாபநாசம் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இதுபோல சில தவறுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. ஊத்துக்காடு அருகில் உள்ள மிலட்டூர் கிராமம் நாயக்க மன்னர்கள் காலத்தில் இங்கு அறிமுகமான தெலுங்கில் கவிதையும், உரைநடையுமாக அமைந்த 'பாகவதமேளா' எனும் நாட்டிய நாடகங்களுக்குப் பெயர் போனது. இன்றும்கூட ஒவ்வோராண்டும் இங்கும் வேறு சில ஊர்களிலும் இந்த பாகவதமேளா எனும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருவதை அறிவீர்கள். இதில் ஆண்களே பெண்வேடமிட்டு பாடி, ஆடி நடிப்பார்கள். வசனம் பெரும்பாலும் தெலுங்கில்தான் இருக்கும். இந்த ஆண்டில்தான் மிலட்டூரில் தமிழில் "கீதோபதேசம்" எனும் பெயரில் தமிழில் நாட்டிய நாடகம் அரங்கேறியது.

இந்த சூழ்நிலையில் வளர்ந்த காரணத்தால் வேங்கடசுப்பையர் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலைகளில் ஆர்வமும், திறமையும் உடையவராக விளங்கினார். ராஜா பாகவதர் என்று ஒருவர் அப்போது இருந்தார். இவரை பூரனூர் நடேச பாகவதர் என்றும் குறிப்பிடுவார்கள். இவருடைய பாடல்கள் முதலியன வேங்கடசுப்பையருக்குப் பிடிக்கும். அவற்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினார். கிருஷ்ண யோகி என்றொருவர் இருந்தார். நல்ல திறமைசாலி. அவரிடம் இசை, நாட்டியம் இவற்றைக் கற்றுக்க்கொள்ள இவர் விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆகையால் இவர் சரியான குருநாதர் அமையாமல் ஊத்துக்காடு கிராமத்திலிருந்த ஆலயத்தில் இறைவன் சந்நிதியின் முன்பாக அமர்ந்து தானாகவே பாடத் தொடங்கினார். நீங்கள் ஊத்துக்காடு வந்து அந்த கிருஷ்ணன் ஆலயத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். அங்கு கருவறையில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம், காளிங்கனை வதம் செய்யும் பாலகிருஷ்ணன் வடிவத்தில் அமைந்திருக்கும். காளிங்கன் எனும் பாம்பு படமெடுத்து ஸ்ரீ கிருஷ்ணனோடு போரிடும்போது, அதனை அது வாழும் சுனையிலேயே எதிர்த்து போரிட்டு அடக்கி, அதன் படமெடுத்த தலைமீது நின்று ஆடி, அதன் கொட்டத்தை அடக்கிய காட்சியில், காளிங்கன் தலைமீது நிற்கும் கோலமும், ஒரு கையால் காளிங்கனின் வாலின் நுனியைப் பிடித்திருப்பது போலவும் அந்த அழகிய உருவம் காணப்படுகிறது. இதில் ஓர் அற்புதம் என்னவென்றால், அந்த சிலையில் காளிங்கன் தலைமீது கிருஷ்ணனின் கால் படுவது போல தோன்றினாலும், காலுக்கும் காளிங்கன் தலைக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி, கண்ணுக்குத் தெரியாத இடைவெளி உண்டு. அதன் மூலம் ஒரு காகிதத்தை விட்டு அப்புறம் எடுத்துவிடலாம்.

அப்படிப்பட்ட அற்புத அமைப்பு உள்ள சிலை அது. அந்த கிருஷ்ணன் அனுக்கிரகம் தான் வேங்கடசுப்பையர் வேங்கடகவியானார். இவருடைய வரலாற்றைக் கூறுபவர்கள், அவர் அந்த கிருஷ்ணன் சந்நிதியில் பாடும் போது, அவர் முன்பு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தோன்றி அருள் புரிந்ததாகக் கூறுவார்கள். வேங்கடகவி அரிய பல பாடல்களை ஸ்ரீ கிருஷ்ணன் மீது பாடிச் சென்றிருக்கிறார். இன்று அவருடைய பாடல்களைப் பாடாத பாடகர்கள் உண்டா?

'அலைபாயுதே', 'ஆடாது அசங்காது வா கண்ணா', 'குழலூதி மனமெல்லாம்', 'யார் என்ன சொன்னாலும்', 'விஷமக்காரக் கண்ணன்' போன்ற பிரபலமான பாடல்களை இயற்றியவர் வேங்கடகவிதான். இன்னும் பல பாடல்கள் வெளிவராமலே இருக்கின்றன. இவர் 60 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். வேறு சிலர் 80 அல்லது 90 வயது வரை வாழ்ந்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி? எது எப்படியோ அழியாத பல அற்புத பாடல்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது போதாதா என்ன? இவருடைய பாடல்கள் 200, 250 ஆண்டுகளைத் தாண்டி இன்னமும் உயிர்ப்போடு பாடப்படுகிறது என்பதே பெரிய சாதனை அல்லவா? புனிதமும், புலமையும், ஆத்மார்த்தமான பக்தியும், ஈடுபாடும்தான் இந்த சாதனைக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

இவருக்கு சீடர்கள் யாரும் இருந்தார்களா? தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சிஷ்ய பரம்பரையினரால் பாடப்பட்டு இன்று அந்த மகானுடைய வாரிசுகள் யார் என்பதும் தெரிந்திருக்குமே. யார் செய்த புண்ணியமோ, தமிழகத்தில் சிறப்பாக சோழ நாட்டில் செழித்து வளர்ந்த நாதஸ்வரக் கலையும், அந்தக் கலைஞர்களும் வேங்கடகவியின் பாடல்களை உயிர்ப்போடு வைத்திருந்திருக்கிறார்கள். குறிப்பாக ருத்ரபசுபதி எனும் நாதஸ்வர வித்வான் பற்றி சொல்லுகிறார்கள். வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையர் சில பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அது கைமாறி நாதஸ்வர வித்வான் ருத்ரபசுபதிக்குக் கிடைத்து அவர் அந்தப் பாடல்களைத் தன் நாதஸ்வரத்தில் பாடி பிரபலப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.

வேங்கடகவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையருக்கு மூன்று புதல்விகள். இவர்களும், இவர்களுக்குப் பின் அவர்களது வாரிசுகளும் இந்தப் பாடல்களைப் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிருஷ்ண சாஸ்திரியார் என்பவர். இவர் காட்டு கிருஷ்ணையரின் மகள் வழிப் பேத்தியின் கணவர். இவர் ஒரு இசைக் கலைஞர். இவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவரது இயற்பெயர் என்னவோ தெரியாது, ஆனால் தன் பெயரை 'குட்டி கவி' என்று வைத்துக் கொண்டார். பெரிய கவி என்பது வேங்கடகவியாம். மற்றொருவர் பெயர் கணபதி முனி. இவர்கள் வேங்கடகவியின் பாடல்களை அதிகம் பாடத் தொடங்கினர். இந்தப் பாடல்களை பிரபல ஹரிகதா வித்வான் ராஜு சாஸ்திரிகள் என்பவர் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடல்களின் வசீகரத்தில் மெய்மறந்த சாஸ்திரியார் இந்தப் பாடல்களைத் தன் உபந்யாசத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

இப்படி இந்தப் பாடல்கள் வாழையடி வாழையாக இசை உலகில், ஹரிகதா உலகில், பாகவத உலகில் பரவத் தொடங்கி எங்கும் எதிலும் இவர் பாடல்கள் கேட்கும்படியான நிலைமை உருவானது. வேங்கடகவி எத்தனை பாடல்கள் இயற்றினாரோ, எத்தனை பாடல்கள் கிடைத்தனவோ, எத்தனைப் பாடல்கள் மறைந்து போனதோ தெரியவில்லை.

இப்படி வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப்படுத்தியவர்களின் வரிசையில் நம்மால் மறக்கமுடியாதவரும், மிக முக்கியமானவருமான நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரை மறக்கமுடியாது. இவரால்தான் இன்று அப்பாடல்கள் பிரபலமாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இவர் சமீக காலத்தில், நம் காலத்தில் வாழ்ந்து நாடெங்கும் ஹரிகதா காலக்ஷேபங்களை நடத்தி வந்தவர். வேங்கடகவியின் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டவர். இவர் பாடி மக்களை மயக்கிய "காளிங்கநர்த்தனம்" மக்களால் மறக்கமுடியுமா? 'கிருஷ்ண கானம்" எனும் பெயரில் அவர் செய்து வந்த ஹரிகதாவும், அதன் ஒலிப்பதிவு நாடாக்களும் தமிழ் நாட்டையே உலுக்கியது என்றுகூட சொல்லலாம். எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமான ஊத்துக்காட்டில், எந்த வசதிகளும் இல்லாத நாளில் அரிய, உயரிய பாடல்களை இயற்றிச் சென்ற வேங்கடகவியின் பாடல்கள் இந்த நவீன யுகத்தில் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் மியூசிக் அகாதமி, நாரதகான சபா போன்ற இசையின் உயர் பீடங்களில் ஒலித்திருக்கிறது என்பது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் ஹரிகதா கச்சேரிகள், ஒலி நாடாக்கள், அச்சிட்டு வெளியிட்ட நூல்கள் இவைகள் வாயிலாக வேங்கடகவி தமிழர்களின் உணர்வில், உயிரில், கரங்களில் என்றும் நிலைத்திருக்கும்படியாக நேர்ந்தது. வேங்கடகவியின் பாடல்களில் அமைந்துள்ள தாளக்கட்டு, இசை வடிவம், உணர்ச்சிப் பிழம்பாக வர்ணிக்கும் மொழி ஜாலம், அவருடைய தமிழ், சமஸ்கிருத மொழி ஞானம் போன்ற பல விஷயங்கள் இன்றும் வியந்து போற்றி பாராட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரியவர்களின் வரலாறுகள், சில நூறு ஆண்டுகளே ஆனதென்றாலும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான். அவரது பாடல்களை எடுத்து, ஆய்வு செய்து அதன் அழகை, ஆழத்தை, இனிமையைப் பலர் வெளியிட்டிருந்தாலும், அவர் வாழ்க்கைச் சரிதத்தை முழுமையாக வெளியிடமுடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இல்லையா?

இவை சில பிரபலமான பாடல்கள்.

'அசைந்தாடும்' சிம்மேந்திரமத்யம ராகம்
'அலைபாயுதே' கானடா ராகம்
'ஆடாது அசங்காது வா' மத்யமாவதி ராகம்
'அபாலபாலா' கேதாரம்
'ஆடும்வரை அவர் ஆடட்டும்' ஹுசேனி ராகம்
'என்ன புண்ணியம்' ரீதிகெளளை ராகம்
'குழலூதி' காம்போஜி ராகம்
'மணிநூபுர' நீலாம்பரி
'மதனாங்க மோகனா' கமாஸ் ராகம்
'மதுர மதுர' அடாணா ராகம்
'மரகத மணிமய' ஆரபி ராகம்
'முன்செய்த தவப்பயன்' ரேவகுப்தி
'நாத முரளி கான' கல்யாணி
'என்ன தவம்' கமாஸ் ராகம்
'நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்' ஸ்ரீ ரஞ்சனி
'பால்வடியும் முகம்' நடகுறிஞ்சி
'பார்வை ஒன்றே போதுமே' சுருட்டி
'ஸ்வாகதம் கிருஷ்ணா' மோகன ராகம்
'தாயே யசோதா' தோடி ராகம்
'வரமொன்று' சண்முகப்பிரியா ராகம்
'வேணுகான ரமணா' தோடி ராகம்
'வந்ததும் போனதும்' பிலஹரி ராகம்
'யாரென்ன சொன்னாலும்' மணிரங்கு ராகம்


'

Friday, May 20, 2011

கோபாலகிருஷ்ண பாரதியார்

கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1896)        

கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர். இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத்துக்காக இவர் இயற்றிய "நந்தனார் சரித்திரம்" புகழ்பெற்று விட்டது. கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். மாயூரத்தில் வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ண பாரதியார், திருவையாற்றுக்குச் சென்று ஸ்ரீ தியாகராஜரை தரிசனம் செய்து, அங்கு அவருக்காக "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" எனும் ஆபோகி ராகக் கீர்த்தனையை இயற்றிப் பாடிக்காட்டினார்.

இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு இருந்த திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் படிக்க அங்கு சென்றிருந்த தமிழ்த்தாத்தா என்று பின்னாளில் புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் சிறிது நாட்கள் இவரிடம் சங்கீதம் பயின்றிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியார் நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் ராமசுவாமி சாஸ்திரி. அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான். மாயூரத்தில் வாழ்ந்த ஒரு ஆசிரியரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும் யோக சாஸ்திரத்தையும் கற்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமலேயே, துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சந்நியாசியைப் போல வாழ்க்கை நடத்தினார். இவர் குடும்பமே ஒரு சங்கீத குடும்பன் என்பதால் மிக இளவயது முதலே இவருக்கு சங்கீதம் இயற்கையாகவே வந்தது. அதனால் சிறிது வழிகாட்டியவுடன் இவர் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது. தன்னுடைய சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்காக இவர் பல பெரிய சங்கீத வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்கத் தொடங்கினார். தானாகவே நன்கு பாடவும், புதிய பாடல்களை இயற்றவும் தொடங்கினார். இவரது பாடல்களில் அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள் மேலோங்கியிருக்கும். மகாகவி பாரதியார் தனது 'சங்கீத விஷயம்' எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, புதிதாகப் பலர் சிறந்த பாடல்களை இயற்றிப் பாட முயற்சிக்க வேண்டும், பழைய பாடல்களையே பாடிக் கொண்டிருக்கக்கூடாது. பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்பதற்கேற்ப இவரே புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடியதை பலரும் வரவேற்றார்கள்.

அவருடைய காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களை கச்சேரிகளிலும், பெரிய ஜமீந்தார்கள் சபைகளிலும் பாடிவந்திருக்கிறார்கள். சங்கீத வித்வான்கள் தங்களுக்குப் புதிதாக இன்ன கருத்துக்களோடு பாடல்கள் வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றார்போல பாடல்களை இயற்றிக் கொடுத்தார். பெரிய பெரிய வாக்யேயக்காரர்களின் கிருதிகளில் அவரவருடைய பெயரை முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம். அதுபோலவே கோபாலகிருஷ்ண பாரதியும் தன்னுடைய பாடலின் வரிகளில் தன்னுடைய பெயரையும் சேர்த்துப் பாடியிருப்பதைக் கவனிக்கலாம். இப்போது போல திரைப்படங்கள் எல்லாம் இல்லாத நாட்களில் பல கதைகளை பாடல்கள் மூலம், பாட்டிடையிட்ட கதைகளாகச் சொல்வது வழக்கம். அந்த முறைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளையும் இயற்றி பாடிவந்தார். அந்த வகையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள "திருநாளைப்போவார்" சரித்திரத்தை சிறிது மாற்றி, சில புதிய பாத்திரங்களைச் சேர்த்து "நந்தனார் சரித்திரம்" எனும் பெயரில் எழுதினார்.

இந்த நந்தன் என்பவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தில்லை நடராஜன் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். இவர் ஓர் விவசாயி. விவசாய வேலைகளை முடித்துவிட்டு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க விரும்பினார். அலை ஓய்ந்து கடலில் ஸ்நானம் செய்வது போல, இவருக்கு வேலை விட்டபாடில்லை. இவர் தில்லை சென்று தரிசிக்கும்போது நந்தி மறைக்க, இவர் தரிசனத்துக்காக நந்தி விலகி வழிவிட்டது, இவர் ஜோதியில் கலந்தார் என்பது அந்தக் கதை. இந்தக் கதையில் மறையவர் என்று ஓர் பாத்திரத்தைப் படைத்து, அந்த மறையவர் நந்தனை தில்லை செல்லாதபடி வேலைவாங்கியதாகவும் கோபாலகிருஷ்ண பாரதி நந்தன் சரித்திரத்தில் எழுதினார். பின்னர் இவர் கற்பனையாக எழுதிய இந்தப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு இந்த வரலாற்றை ஜாதிப் பிரச்சினையாகவும் சிலர் ஆக்கிவிட்டனர். இவருடைய பாடல்களும் கருத்தும் கேட்க இனிமையாக இருந்த போதிலும் அவற்றில் இலக்கண பிழைகள் மண்டிக் கிடப்பதாக திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கருத்துக் கூறியிருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியின் பல பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும் இந்த நந்தன் சரித்திரம் மட்டும் இவருக்குப் பெருமை தேடிக் கொடுத்தது. அதற்குக் காரணம் அப்போது தமிழ் நாட்டில் மராட்டிய மன்னர்கள் அறிமுகம் செய்து வைத்த கதாகாலக்ஷேப முறைதான். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்பவர் இந்தக் கலையில் தலை சிறந்து விளங்கினார். அவர் நந்தன் சரித்திரத்தை கதாகாலக்ஷேபமாகச் செய்து ஊர் ஊராகப் பாடிப் பிரபலப் படுத்தினார்.

 கோபாலகிருஷ்ண பாரதியின் புகழும் வளர்ந்தது. இந்த கதாகாலக்ஷேபத்தின் மூலம் இந்தக் கதை நாடகமாக நடிக்கப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதில் பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழிசைக் கல்லூரியின் முதல்வராக இருந்தவருமான திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனாராக வந்து பாடல்களைப் பாடி அவற்றுக்கு அமரத்தன்மை அளித்தார். ஒரு மனிதன் வாழ்ந்தான், எதோ சாதனைகளைச் செய்தான் என்பதோடு மட்டுமல்லாமல் என்றும் நிலைத்திருக்கும்படியான இதுபோன்ற செயலைச் செய்ததன் மூலம் கோபாலகிருஷ்ண பாரதியார் இசைத் துறையில் இன்றும் போற்றப்படுகிறார்.

குறிப்பு:-

கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர், பெரிய புராணத்தின்படி நந்தனாரின் முடிவு எப்படி ஆயிற்று என்ற வினாவை எழுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய பதிலை கீழே கொடுத்திருக்கிறேன். அதில் அறிஞர் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள 'பெரிய புராணம் வசன காவியம்' எனும் நூலில் கண்டுள்ளபடி 'திருநாளைப்போவார்' சரித்திரத்தின் முடிவைக் கொடுத்திருக்கிறேன்.


நம்முடைய புராண வரலாறுகளில் அந்த நாள் செய்திகள் இன்றைக்குப் பொறுத்தமுடையதாக இருக்குமா என்பதை பலரும் கவனிப்பதில்லை. அன்று நாயன்மார்கள் பலருக்கு சிவபெருமான் கட்சி அளித்ததாகப் படிக்கிறோம். இன்று ஏன் அவர் காட்சி தருவதில்லை என்ற கேள்வியும் அறிவு பூர்வமானதாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். குலோத்துங்க சோழன் காலம் தமிழகத்தில் சோழ நாட்டின் பொற்காலம். நாடு செழித்து, செல்வத்தில் மக்கள் திளைத்தனர். மக்கள் ஜீவகசிந்தாமணி போன்ற இன்ப நூல்களைப் படித்து நேரத்தை வீணடித்தனர். மன்னன் சேக்கிழார் பெருமானிடம் கேட்டுக் கொண்டான், மக்களை நல்வழிப்படுத்த நல்ல நூல்களைப் படிக்க வைக்கமுடியாதா என்று. அவர் சொன்னார், மக்கள் கதைகளை, அதிலும் இன்பம் பயக்கும் கதைகளைக் கேட்க மனம் கொண்டிருக்கின்றனர் என்று. நீங்களும் கதை மூலமாக நல்ல அறவுரைகளைத் தரலாமே என்றான் மன்னன். பெரிய புராணம் பிறந்தது. இது வரலாற்றுப் பின்னணியில் சில மிகைப்படுத்தப்பட்ட கற்பனை கலந்தது என்பது பொதுவான கருத்து. அந்த வகையில் நந்தனார் தில்லை ஆலயத்தில் சிவனை தரிசித்து ஜோதியில் கலந்துவிட்டதாகப் புராணம் கூறினாலும், பிற்காலத்தில் இதனை சாதிப் பிரச்சனையாக்கி நந்தன் எனும் தாழ்த்தப்பட்டவரை மேல்சாதி மக்கள் தீக்கு இரையாக்கிவிட்டனர் என்று கூறலாயினர். வள்ளலார் ராமலிங்கசுவாமிகள் தனது அறையைத் தாளிட்டுக் கொண்டு தியானத்தில் இருக்கும் சமயம் ஜோதியில் கலந்துவிட்டதாக வரலாறு. அங்கும் அவர் எரிக்கப்பட்டதாக பிற்கால மக்கள் பேசலாயினர். ஆகவே, நாம் முடிவை எப்படி எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோமோ அப்படி எடுத்துக் கொள்வது நல்லது.  எனினும் ஆறுமுக நாவலர் எழுதியுள்ள பெரியபுராண கதைகளின் படி நந்தனாரின் முடிவு இதோ. 

"நந்தனார் ஒரு நாள் சிதம்பர தரிசனம் பண்ண வேண்டும் என்கிற அளவிறந்த ஆசையினாலே தன் ஊரை விட்டுப் புறப்பட்டு சிதம்பரத்தின் எல்லையை அடைந்து மதில்வாயிலில் புகுந்து அங்குள்ள அந்தணர்களுடைய வீடுகளிலே ஓமம் செய்யப் படுதலைக் கண்டு பயந்து அங்கே நின்று வணங்கி அந்த எல்லையை வலம் செய்து கொண்டு போனார். இப்படி செய்துகொண்டிருந்த திருநாளைப் போவார், "இந்த இழிந்த பிறப்பு சபாநாயகரைப் போய்த் தரிசிக்க தடை செய்கின்றதே" என்று துக்கத்தோடு நித்திரை செய்தார். சபாநாயகர் (நடராஜப் பெருமான்) அவருடைய வருத்தத்தை நீக்கி அருள் செய்ய திருவுள்ளங்கொண்டு அவருக்குச் சொப்பனத்தில் தோன்றி "நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து அந்தணர்களோடும் நம்முடைய சந்நிதானத்திற்கு வருவாயாக!" என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணர்க்கும் சொப்பனத்தில் தோன்றி அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆணையிட்டு மறைந்தருளினார்.  தில்லைவாழ் அந்தணர்கள் எல்லோரும் விழித்தெழுந்து கோயில் வாயிலில் வந்து கூடி, சபாநாயகர் ஆணையிட்டபடி செய்வோம் என்று சொல்லி திருநாளைப் போவாரிடத்தில் சென்று "அய்யரே! சபாநாயகருடைய கட்டளையாலே இப்பொழுது உம் பொருட்டு அக்கினி வளர்க்கும்படி வந்தோம்" என்றார்கள். திருநாளைப்போவார் அதைக் கேட்டு "அடியேன் பிழைத்தேன்" என்று சொல்லி வணங்கினார். அந்தணர்கள் தென் மதில் சுவர் அருகில் கோபுர வாயிலுக்கு முன்பு ஒரு குழியிலே அக்னி வளர்த்து அதைத் திருநாளைப் போவாருக்கு போய்த் தெரிவித்தார்கள். அவரும் அந்த நெருப்புக் குழியை அடைந்து சபாநாயகருடைய திருவடிகளை மனத்தில் தியானித்து அதனை வலம் வந்து கும்பிட்டுக்கொண்டு அதன் உள்ளே புகுந்தார்.  அப்படி புகுந்த நாயனார் பழைய தேகத்தை ஒழித்துப் புண்ணியமாகிய அந்தண முனிவடிவம் கொண்டு சடைமுடியோடு எழுந்தார். அதுகண்டு தில்லைவாழ் அந்தணர்களும் மற்ற சிவபக்தர்களும் களிப்படைந்தார்கள். திருநாளைப் போவார் அவர்களோடு கோபுரத்தை அணுகி அதை வணங்கி எழுந்து உள்ளே போய்க் கனகசபையை அடைந்தார். அவரை, பின் அங்கே ந்ன்ற அந்தணர் முதலான பேர்கள் யாவரும் காணாமையால் ஆச்சரியம் கொண்டு தொத்திரம் செய்தனர். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய திருப்பாதங்களைத் தந்தருளினார்."
"செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டர் திருத்தொகை கூறும்.


அருணாசல கவிராயர்


அருணாசல கவிராயர் (1711 - 1779)

அருணாசல கவிராயர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் வாழ்ந்த நல்லதம்பிப் பிள்ளை வள்ளியம்மாள் தம்பதியரின் நான்காவது மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் சமண மதத்தவராயினும் பின்னர் சைவத்துக்கு மாறியவர், அப்பர் சுவாமிகளைப் போல. குழந்தை அருணாசலத்துக்கு ஐந்தாவது வயதில் அட்சராப்பியாசம் செய்து வைத்து கல்வி பயல அனுப்பப்பட்டார். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அருணாசலம் தனது ஐந்தாவது வயதில், ஐந்தாவது மாதத்தில் ஐந்தாம் தேதியில் கல்வியைத் தொடங்கினார். பாரம்பரிய முறையில் கற்பிக்கப்பட்ட கல்வி அவருடைய பன்னிரெண்டாம் வயது வரை தொடர்ந்தது. காரணம் அப்போது அவருடைய தந்தையார் காலமாகிவிட்டார்.

தந்தையின் மறைவையொட்டி கல்வி நின்று போனது அருணாசலருக்கு மட்டுமல்ல, மகாகவி பாரதி உள்ளிட்ட பலருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் பழைய பாடலொன்று சொல்லும்: "தந்தையோடு கல்வி போம், தாயோடு அறுசுவை உண்டி போம்" என்று. இவர் அருகிலிருந்த தருமபுர ஆதீனத்துக்குச் சென்று தனது நின்று போன கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் தமிழ் கிரந்தங்களும், ஆகம சாஸ்திரமும் படித்து வந்ததோடு சம்ஸ்கிருத மொழியையும் கற்றார்.

கல்வி கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெற்று சிறப்பாக விளங்கிய இவருக்கு பதினெட்டு வயதானபோது, சிலர் இவரை மடத்துக்குத் தலைவராகக்கூட வாய்ப்பிருக்கிறதாகச் சொல்லி வைத்தார்கள். ஆனால் அருணாசலரோ துறவு வாழ்க்கை வாழ்ந்து மடத்துக்கு அதிபராக ஆவதினும் தான் ஒரு கிரஹஸ்தானகவே விரும்பினார். அவர் படித்த திருவள்ளுவரின் திருக்குறளும், கம்பராமாயணமும் அப்படியிருப்பதைத்தான் அவருக்குப் போதித்ததாகக் கருதினார். பதிமூன்று வயது வரை தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பழுதற கற்றுக் கொண்டார். திருமணம் செய்து கொண்ட அருணாசலருக்கு ஒரு நகைக்கடை (காசுக்கடை) வைத்து வியாபாரம் செய்யப் பணித்தனர். அவர் கடையில் வியாபார நிமித்தம் செலவிடும் நேரம் போக அதிக நேரம் கிடைத்தமையால் இவர் அங்கு இருந்து கொண்டே நாலாயிர திவ்ய பிரபந்தம், திருமுறைகள், வேத ஆகம சாஸ்திரங்கள் போன்ற சமயம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் படித்து வரலானார்.

அவர் படித்த இலக்கியங்களிலும், திருக்குறள் போன்ற அற நூல்களிலும் காணப்படும் வாழ்க்கை நெறிமுறைகளையும் பண்புகளையும் கம்பனுடைய காவியத்தில் இராமபிரானிடம் இருப்பதை கண்டுகொண்டார். இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி, இவர் புதுச்சேரிக்கு தன்னுடைய நகைக்கடைக்காக தங்கம் வாங்க வந்தபோது சந்தித்த இருபெரும் இசை மேதைகளின் மூலம் அமைந்தது. அந்த இருவரின் பெயர்கள் ஒருவர் வெங்கட்டராம ஐயர் மற்றவர் கோதண்டராம ஐயர். இவர்கள் இருவரும் சீர்காழியை அடுத்த சட்டனாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

ஊரிலிருந்து கிளம்பி புதுச்சேரி செல்லும் வழியில் சீர்காழியில் இவர் தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது. அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசலருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த வேலை பளுவின் காரணமாக அது முடியாமலிருந்தது. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசலர் அங்கு வந்தபடியால், அவரிடம் இந்த சீர்காழி பாமாலையைப் பூர்த்தி செய்து தர வேண்டினார். அருணாசலரும் அதற்கு ஒப்புக்கொண்டு புதுச்சேரி வந்து சேர்ந்தவுடன் ஒரே இரவில் அந்த பாமாலையை எழுதி பூர்த்தி செய்து ஒரு தூதுவர் மூலம் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். படித்துப் பார்த்துவிட்டு இத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறாரே, இவரது புலமைதான் என்னே என்று வியந்து போனார். உடனே அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார். எப்படியாவது அருணாசலரைத் தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார். புதுச்சேரியிலிருந்து திரும்பி வரும் வழியில் சீர்காழி வந்த அருணாசலருக்கு ஒரே திகைப்பு. இது என்ன, நம் குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து கொண்டு வந்து சீர்காழியில் குடியமர்த்தி விட்டாரே, சரி இனிமேல் இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அதுமுதல்தான் அவர் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார்.

புதுச்சேரியில் அருணாசலர் சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் வசித்து வந்த அருணாசலரைச் சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதறாக வந்தனர். அப்போது கம்பராமாயணம் அதன் நயங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் சொன்னார்கள், "நீங்கள் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக ஏன் ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

இந்த யோசனை அருணாசலருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனுடைய காப்பியச் சுவையில் ஏற்கனவே மனம் கவரப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் மேலும் படித்து அனுபவிக்க வேண்டுமென்கிற அவா இருந்ததால், அதை ஒரு இசை நாடகமாக வடிக்கலாம் என்று நண்பர்கள் சொன்ன யோசனை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் இவரை இராம நாடக கீர்த்தனைகளை இயற்ற தூண்டுகோலாக அமைந்தன. அப்படி அவர் இயற்றும் இராம நாடக கீர்த்தனைகள் பண்டிதர்களுக்கு அல்லாமல், பாமர மக்களும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பயன்படும் என்று எண்ணினார்.

இராம நாடக கீர்த்தனைகளை இவர் முதலிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக, முதன் முதலில் யுத்த காண்டத்தில் வரும் "அடடா வெளியே புறப்படடா" எனும் பாட்டை எழுதி, நண்பர்களிடம் கொடுத்து இசை அமைக்கச் செய்து அதனை சென்னையில் பாடச் செய்தார். அங்கு அந்தப் பாட்டு மிகவும் பிரபலமானது. சென்னையிலிருந்து திரும்பும் வழியில் இசைக் கலைஞர்களான நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில், இராம காவியத்தை முழுவதையும் பாட்டுகள் இயற்றி பூர்த்தி செய்யத் தொடங்கினார். அப்படி தோன்றியதுதான் அருணாசல கவிராயரின் "இராம நாடக கீர்த்தனைகள்".

மிகச் சாதாரணமான புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்து அவர் இயற்றிய அந்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு செர்ந்து, கேட்போர் நெஞ்சங்களையும், படித்த மற்றும் பாமரர்களையும் மிகவும் கவர்ந்தன.

கவிராயரின் "இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் அருணாசலருக்கு ஒரு ஆசை. முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் கொண்டு போய் அரங்கேற்றம் செய்தாராமே, அது போல நாமும் அங்கே கொண்டு போய் நமது நாடகத்தை அரங்கேற்றினால் என்ன என்று எண்ணமிட்டார். அதோடு, அங்கு அரங்கேற்றம் செய்தால் கம்பன் செய்தது போல நாமும் மற்ற தெய்வங்கள் மீது தோடயங்களை இயற்றிப் பாடலாம் என்று எண்ணினார். கம்பனின் காப்பியத்தைத்தானே இவர் எளிய தமிழில் நாடகப் பாடல்களாக ஆக்கியிருக்கிறார், ஆகையால் கம்பனின் பாதையில் செல்வதையே இவரும் விரும்பினார்.

அந்த எண்ணத்தில் உருவானதுதான் "ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கனாதா" எனும் மோகன ராக கீர்த்தனை. பின்னாளில் பரத நாட்டியக் கலைஞர்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு அபினயம் பிடித்து இந்தப் பாடலுக்கும், ஆடலுக்கும் பெருமை சேர்த்தனர் என்பது வரலாறு சொல்லும் செய்தி. இந்தப் பாடலுக்கு ஆடும் போது நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமை முழுவதையும் வெளிப்படும் வண்ணம் பாவம் காட்டி ஆடுவதை நாம் இன்றும் ரசித்துக்கொண்டு வருகிறோம்.

அவர் காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் துளஜாஜி மகாராஜா ஆவார். அப்போது தஞ்சாவூர் மராட்டிய அரசுக்கும், அரசர் குடும்பத்துக்கும் சூழ்நிலை சரியில்லாமலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. எனவே அருணாசல கவிராயர் புதுச்சேரி சென்று அங்கு துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர் என்பதால் அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இதற்கிடையே தஞ்சையில் மன்னன் துளஜாவுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. எனவே அருணாசல கவிராயர் முதலில் இராம நாடகத்தை மன்னனுக்கு முன்னதாக நடத்தினார். அதன் பின் புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

இந்த "இராம நாடக கீர்த்தனைகள் " மட்டுமே அவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்திருந்தது என்றாலும், அவர் மேலும் பல நல்ல பாடல்களை இயற்றியிருக்கிறார். அவரது படைப்புக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை: "அஜோமுகி நாடகம்", "அனுமார் பிள்ளைத்தமிழ்", "சீர்காழி ஸ்தலபுராணம்", "சீர்காழி கோவை" என்பவை சில.











பாரதிதாசன்

பாரதிதாசன்

புதுச்சேரியில் வாழ்ந்த செல்வந்தர் குடும்பத்தில் கனகசபை முதலியார், லக்ஷ்மி அம்மாள் எனும் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். தொடக்கக் கல்வியிலிருந்து தமிழிலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம் வேதாந்தம் ஆகியவற்றைச் சிறந்த அறிஞர்களிடம் கற்று புலமை பெற்றார். மகாகவி பாரதியாரின் அறிமுகம் இவருக்கு 1909இல் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே மகாகவியை இவர் தனது குருநாதராக வரித்துக் கொண்டார். கல்லூரி படிப்புக்குப் பிறகு காரைக்கால் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இந்திய சுதந்திரப் போரில் இவர் ஈடுபட்டு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், புதுச்சேரி பகுதியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகவும் தனது பேச்சு, எழுத்துக்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். இவருடைய இந்த எழுத்துக்களுக்காக பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இவரை சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் இவர் பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்துக்களால் கவரப்பட்டு அவருடைய அத்தியந்த சீடரானார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இவர் ஒரு தூணாக இருந்து செயல்பட்டார். அதன்பின் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக உருவெடுத்த பிறகும் இவர் அதிலும் தீவிரமாக ஈடுபட்டார். திராவிட இயக்கத்தார் இவரை பாவேந்தர் என பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர். சென்னையில் நடைபெற்ற நாத்திகர்கள் மகாநாடொன்றில் தன்னையொரு "நாத்திகன்" எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு பெருமைப் பட்டார். இவருடைய இந்த கருத்துக்களாலும், பாரதியாரை ஒரு பிராமண சமூகத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமலும், அவருக்குப் போட்டியாளரைப் போல திராவிட இயக்கத்தார் இவரைப் போற்றிப் பெருமைப் படுத்தத் தொடங்கினர். ஆனாலும், பாரதிதாசனோ, தன்னுடைய சுப்புரத்தினம் எனும் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டு தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியும், பாரதியை யார் குறை சொன்னாலும், இவர் ஏற்றுக் கொள்ளாததோடு, பாரதியாரின் சீடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். 1950இல் "தினத்தந்தி" பத்திரிகையில் இவர் தன் குரு நாதரின் பெருமையையும், தான் அவரது தாசன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் காலத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களோடு ஒத்துப் போய் பல மேடைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆருடனும் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. 1954இல் இவர் புதுச்சேரி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இவர் சென்னை மருத்துவ மனையொன்றில் காலமாகும் வரை தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவரது பாடல்கள் பாரதியாரின் அடியொற்றிய அறிவுபூர்வமான எழுத்துக்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பாரதியை இவர் பெயர் சொல்லி எழுதுவதோ பேசுவதோ கிடையாது. "ஐயர்" என்றும் "குருநாதர்" என்றே குறிப்பிட்டிருக்கிறார். இவர் "புதுவை கலைமகள்", "தேசோபகாரி", "தேசபக்தன்" போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். பெரியாரின் பக்தர் என்பதால் இவர் பிராமண எதிர்ப்பில் ஊறித்திளைத்தவர் ஆகையால் இவரது எழுத்துக்களில் பிராமண எதிர்ப்பு என்பது வெளிப்படையாகக் காணப்படும். தமிழர்களுக்குள் 'தமிழ் இனம்' என்றும் 'ஆரிய இனம்' என்றும் இனம் பிரித்துப் பார்த்து பிராமணர் பிராமணரல்லாதாரைக் குறிப்பிட்டு வந்ததை கவனிக்கலாம். இவருக்கு "புரட்சிக் கவிஞர்" எனும் பட்டத்தை பெரியார் ஈ.வே.ரா. அளித்தார். இவரது அமைதி ஊமை எனும் நாடகத்துக்கு விருது கிடைத்தது. 'பிரிராந்தையார்' எனும் நூலுக்கு இவரது காலத்துக்குப் பிறகு 1970இல் சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது.