பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 6, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி IX

ல‌க்ஷ்மி ராமாயணம் 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.
நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )


இவ்விடம் செய்திகள் இவ்வித மிருக்கையில்,
அவ்விடம் மாடத்தில் ஐயனை கண்டவள்,
எவ்விதம் தம்முயிர் தாங்கி நின்றாள்? –  அவள்      
விம்மிடும் மனத்தொடு ஏங்கி நின்றாள்.                                 304

அண்ணலைக் கண்டதும், எண்ணங்கள் தொலைத்தவள்
பின்னருங் கண்டிடும் ஆர்வமும் உந்திட
பளிங் குமண்டப தடாக மடுத்த
குளிர்ந்த இடத்தினை கடிதி னடைந்தாள்.                                305

அசைந் திடும் தாமரை மலரினை நோக்கி,
‘இரவினில் நின்னுரு கருமையாய்த் தெரிவதால்,
மறைந்தது எந்தன் மனவாட்ட்ம் – இருப்பினும்
தருவதற் குதவுவீர் எம்முயிரை!’ யென பிதற்றலானாள்.                  306

எண்ணத் திலே நிறைந்துள்ளான் – இருப்பினும்
யாரென்று தெரி கிலே னே!
கண்ணுள்ளே இருந்த போதும்
கா ணற் றிருக் கிறேனே!                                               307

‘பாற் கடலினின் றெடுத்த அமிர்தத்தை
பொற்பாத்திரத்துடன் தவற விட்டேன்!
அப்போதே கைப்பற்றி உண்ணாது விட்டெதென்        
தப்பன்றி வேறென்ன?’ கடிந்து கொண்டாள்.                              308

புண்பட்டு, உள்நைந்து, விம்மி அழுதழுது
துன்பமே உருவாகி பிராட்டி இருக்கையிலே
நாணேற்றி வில்முறித் தானென்று சொல்லி,
‘நீலமாலை’ எனும்சேடி ஓடி வந்தாள்                                    309

வந்தவள்; அடி வணங்கிப் பணிந்திடாமல்
அந்தமில்லா உவகை கொண் டாடிநின்றாள்.
அர்த்த மற்ற அவள்செயலால் சினத்துடனே
‘சிந்தையில் புகுந்த செய்தியென்னடி. சொல்லென்றாள்.’                   310

‘பெரும்படை யுடையவனாம் – கல்வி
மேம்பாடு டுடையவனாம் – அள்ளித்தரும்
நீள்கை யுடையவனாம் தசரத புதல்வனவன்
அழ கிலும்மேம் பட்ட வனாம்!                                          311

திரண்டு நீண்ட தோ ளுடையவன்
பரமனோ வென ஐயத் தக்கவன்.
பற்றகன்ற முனியோடும், இளவலோடும்
வந்திருக்கும் ஆற்றலுடை ஸ்ரீராமன்.                                     312

உருத்திரன் எய்த அவ்வில் லை - முனி
கருத்துடன் பார்த்திட அழைத்து வந்தார்.,
அரசனின் ஆணைக்கு சிரம் சாய்த்து
ஏற்றினன் நாணை; முறிந்தது வில்’லென்றாள்.                           313

கோ முனியுடன் வந்தவ னென்றும்,
தாமரைக் கண்ணினா னென்றவள் சொன்னதும்,
‘ஆம்! ஆம்! ஆம்! அவனே தானெனப் பூரித்தாள்.
அவனல்லன் என்றாயின் இறப்பேனெ’ன சூளுரைத்தாள்.                  314

                              சனகன் செயல்.

கமலத்தோன் பிரும்மனால் படைக்கப் பட்ட
வில்லறும் ஓசை முழங்கி யதும் - மன்னன்
எல்லை யில்லாத பெரு மகிழ்வுடனே 
கௌசிக முனியைத் தொழுது வினவினன்.                              315

‘ஐயனே! நின்புதல்வன் திரு மணத்தை
ஒருபொழுதில் முடிப்பது உன் விருப்பமோ!
முரசெறிந்து அறிவித்து தசரதமா மன்னனை
முறைப்படி யழைத்து நடத்திடலுன் விருப்பமோ?’                        316

கரைபுரண்ட உவகையுடன் கோ முனியும்,
விரைவினிலே தசரதனும் உடனிரு த்தல்
நல்லதாகும், நிகழ்ந்த வற்றை தூதனுப்பி
சொல்லுதலே சரியாகும்! ஓலைவரைந்தி டென்றார்.                      317

                            எழுச்சிப் படலம்
       (தூதுவர் அயோத்தி சேர்ந்து அரண்மனை வாயிலை அடைதல்)

இடிக் குரலில் முரசறைந் தபடி
கடுகிய தூதரும் அயோத்தி மன்னனின்
ஒளிர்கழல் பாதங்கள் தொழுது வணங்கி,
ஓலை கொணர்ந்ததைப் பகர்ந் தனராம்.                                  318

மெய்க்கீர்த்தி பல சொன்ன தூதுவர்கள்
‘மன்னா! முனிவரோடு நின் புதல்வர்
வனம் நோக்கிப் போன பின்னர்
நடந்தவை யிவையென நெடிது சொன்னார்,                              319

‘திருமண வோலை’ அது வென்றறிந்தவன்
அறிஞனை அழைத்து ‘வாசி’ யென்றனன்.
தலைமகன் இராமனின் வில்லாற்ற லுணர்ந்ததும்
மலையென வளர்ந்தன மன்னவன் தோள்கள்.                            320

வெற்றிவேல் மன்னன் மகிழ்ச்சி மேலிட
‘அன்றொருநாள் இடியொத்த ஒலி கேட்கையிலே
யாதோ! யென்று யாம் ஐயுற்றோம். – வில்
இற்ற பேரொலி தானென இன்றறிந்தோம்’                               321

என்று ரைத்த மா மன்னர்
வீரக் கழலணிந்த மிதிலை தூதருக்கு
வரிசைகளென பட்டும், பொன் கலன்களும்,
வரையி ன்றி வழங்க லானார்.                                          322

                        
                             முரசறைய பணிதல்

‘சேனையும், அரசரும் மிதிலை நகருக்கு,
சென்றிடக் கடவ ரென்ற படி,
யானை மேலே அணிமுர சறைக!’
ஆணையை யிட்டான் தசரத மன்னன்.                                   323

ஈரடி வைத்து மூவுல களந்த
திருமால் செயலினை ‘சாம்புவனும்’
சுற்றித் திரிந்து சாற்றினார் போலே
முரசினைக் கொட்டி அறி வித்தார்.                                      324

                          முரசொலி கேட்டார் மகிழ்ச்சி

சாற்றிய முரசொலி செவியில் பட்டதும்,
காற்றினில் மோதிய கடலலைப் போலவே
களிப்பினில் ஓங்கினர் மகளிர் அனைவரும்
களியாட்டம் போட்டனர் காளைகள் பலரும்.                             325

                          சேனையின் எழுச்சி

சூரியத் தேரென பொலிந்திடும் தேர்களும்,
வானவில் ஒளிரும் மேகமாய் வேழங்களும்.
பொங்கும் பெரும்புறக் கடலது போலே
பெரும்படைக் கூட்டமாய் புறப் பட்டதாம்!                                326

குடைகளும், கொடிகளும் நிறைந்து பறந்திட,
கருநிற முடைய வேழக் கூட்டத்தை
கருங்கட லெனவே கருதிய வெண்முகில்
பருகிட விழைந்து தாழ்வதாய் தெரிந்ததாம்.                              327

பேரிகை பேரொலி முழக்கத்துக் கிடையில்
பெருந்திரள் மக்களும், நால்வகைப் படையுடன்,
நெறிமுறைப் படிமுன் விரைவினில் செல்ல
சிவிகையில் தொடர்ந்தனர் தேவியர் மூவரும்.                           330

இராமன்பால் பேரன்பு கொண்டிருந்த கைகேயி,
இரத்தினங்கள் பொதிந்திருந்த சிவிகை யிலும்,
மின்னற்கொடி போன்றவளாம் சுமித்திரையும் – நீல
மணிபதித்த சிவிகையிலே பின் தொடர,                                 331

பல்வகை மணியனைய ஊர்தி யொன்றில்
வள்ளலைப் பயந்த நங்கையாம் கௌசலையும்,
வெள்ளைச் சிவிகையில் வசிட்ட முனிவரும்,
வில்லுடை பரத-சத்ருக்னர், இராம-இலக்குவனாய் தேரேற,                332

மறைவல்ல அந்தணர்க்கு அளவற்ற தானஞ்செய்து,
அரங்கனின் திருவடியைத்தன் சிரசிலே சூடிக்கொண்டு,
அறுகுநீர் தெளிக்க, அரியவேத மொலிக்க,
புறப்பட்டனராம் சக்ரவர்த்தி மிதிலை நோக்கி.                            333

கொற்றவேள் மன்னர், மற்றொரு சூரியனாய்
சுற்றிலும் கமலம்பூத்த தொடுகடல் திரையின்மீது
வெண்புரவி அலைகளென வேகமாய் ஓடுகையில்,
மணிநெடுந் தேரில் மிடுக்கோடு மிளிர்ந்தனராம்.                          334

பூமிபாரம் தீர்க்கக் காக்கும் தசரதனின்
சேனைபாரம் தங்க பூமி தவித்துப்போனதாம்.
இருயோசனை கடந்த பின்னர் சேனைக்கூட்டமும்
சந்திரசைல மலையடியில் தங்கிச்சென்றதாம்.                           335

களிறொடும், தேரொடும், பரியொடும், பெரும்படை
மலையடி வாரத்தில் தங்கிய வர்ணனை
‘வரை காட்சிப் படலத்தில்’ வரைந்துள்ளார், - கம்பர்
கற்பனை வளத்தினை விரித் துள் ளார்.                                  336

சோணை யாற்றங் கரையினை யடுத்த
சோலை புகுந்ததை ’பூக்கொய் படலமாய்,
கள்ளுண்டு, நீராடி, களித்து, மகிழ்ந்ததை – ‘நீர்
விளையாட்டுப் படலமா’ய் கொடுத் துள்ளார்.                             337

நான்கு தினங்கள் பயணம் முடித்த
கோ மகனின் சேனை முற்றும்
கங்கையாற்றின் நீரையள்ளி பருகியபின்
ஐந்தாம்நாள் காலையிலே மிதிலை யடைந்ததாம்.                        338

                                                   

                         (இன்னும் வரும்)

No comments: