பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, August 9, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி XII

லக்ஷ்மி ராமாயணம் பகுதி  XII 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி  வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.


நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger.)


                           பரசுராமப் படலம்

இராமனுக்கு வேதநீதி போதித்த முனிகௌசிகன்
இமயமலைக்குப் புறப்பட்டார் தவஞ்செய்யவே
மிதிலையிலே சனகனுடன், தசரதனின் பரிவாரம்
களிப்புடனே அளவளாவி கழித்தனவாம் சிலகாலம்.                      377

தன்மக்கள், மருமக்கள், தசரதனைத் தொடர்ந்திடவே
மண்மக்கள், அயல்மக்கள் புடைசூழப் புறப்பட்டார்.
மிதிலைமக்கள் வருத்தத்துடன் திருமகளை வழியனுப்ப
அயோத்திமக்கள் ஆர்வமுடன் வரவேற்கக் காத்திருந்தார்.                378
                 
                   இருவகை நிமித்தங்கள் எதிர்படல்

செல்லும் வழியிலே-
இடமிருந்து வலமாய் மயில் சென்றிட.
வலமிருந் திடமாய் காகம் சென்றதாம்.
இடையூறு வழியிடையில் உள்ளதோ வென
நடவாது நின்றான் நெறி வந்தான்.                                       379

நின்றவன், நிமிடத்தில் நிமித்திகனை அழைத்தனன்.
‘நன்றோ, பழுதோ நடுநிலையுடன் நயந்துரை’ என்ன
‘இன்றேவரு மிடையூறது நன்றாய்விடுமெ’ன்றான்
குன்றொத்த புயம்கொண்டோ னிடம் நிமித்திகன்.                         380

அவ்வமையம்-
திடீரென இருண்டதாம் வானம் – செஞ்
சடை யுடையான், இடியொலி யுடையான்
கோடரிக் கையுடை யான், கனலுமிழ்
சுழல் விழியுடையான் பரசுராமன் – சிவ                                 381

தனுசுக் கொப்பான பொற்சிலை யெடுத்து
வளைத்து நாணேற்றி அம்பு தெறித்தான்.
அலை கடலில் அகப்பட்ட மரக்கலன்போல்
நிலைகுலைந்து நடுங்கியதாம் மூவுலகும்.                               382
அவன்-
முனிவராய் பிறந்த மற்றொரு அவதாரம்.
‘ராமன்’ என்றவன் காட்டினன்தன் வில்வீரம்
பரமனை நோக்கிக் கடும்தவம் புரிந்து
பரசுப்படை பெற்று ‘பரசுராமன்’ என்றானவன்.                            383

உருத்திர மூர்த்தி பிரளயத்தில் காட்டிய
கோர தாண்டவ தோற்றத்தைக் கொண்டு
இருபத் தொரு அரசர்களைக் கொன்றபின்
குருதிப் புனலில் குளித்தவோர் அந்தணன்.                               384

தனதாக்கிக் கொண்டான் புவிமுழுதும்
சினம் தணிந்தபின் முனி காசிய பரிடம்
தானம் செய்தனன் இப்புவி யனைத்தும் – பின்
தவம் செய்தனன் பரசுராம க்ஷேத்ரத்தில்.                                385

                  பரசுராமன் வருகை கண்டு தசரதன் வருந்துதல்

கடுஞ்சினத் துடனவன் வருவதைக் கண்டதும்
நடுங்கிய தசரதன் பணிந் தெழுந்தான்.
‘அறனல்ல இது’வென தழுதழுத்தான்.
அடிபணீந்தேன் ஆதரிப்பீ’ரென! மூர்ச்சித்தான்.                             386

மன்னனை சற்றும் மதித் திடாமல்
சொன்னனன் இராமனின் முகம் நோக்கி,
‘முன்னரே சிதிலமான சிவதனுசு வளைத்தநீ
என்றுமே வீரனல்லன்! என்னோடு போர்புரி’                              387

                           இரண்டு விற்களின் வரலாறு

முன்னாளில் இருந்ததுவாம் இரு விற்கள்
ஒன்றினை உமையவளின் அண்ணல் கொள்ள
மற்றொன்றை திருமால் தன்வசம் கொள்ள
ஒடிந்தது ஓர்வில். அம்மெய்நெறி கேள்நீ’                               388

இரண் டினும் வன்மை யெய்திடும்
வெற்றி யுடைய வில்லெது வென்று,
விண்ணோர் பிரும் மனை வினவினராம்.
வெகுண் டனராம் சிவனும், திருமாலும்.                                 389

ஏற்றினராம் நாணை தத்தம் வில்லினில்
ஈரேழுலகும் அஞ்சி நடுங் கினவாம்.
முறிந்ததாம் அவ்வமையம் உருத்திரன் வில்
மூண்டதுவாம் இருவருக்கும் மிகப்பெரும்போர்.                         390

விண்ணவர் விரைந்தே விலக்கினராம் - சிவ
வில்லதை தேவர்கோன் வாங்கினனாம்.
விருச்சிக முனிவர், தவத்தில் மிக்கவர்
அவருக்குத் திருமால் தம்வில் தந்தனராம்.                              391

விருச்சிகன் ஈந்தனன் அவ்வில்லை - அவர்
சதானந்த முனியாம் எம் தந்தை – நீ
கட்டமைந்த இவ்வில்லை வளைப்பா யெனின்
கோட்டையரசன் நீ! கொத்தடிமை நான்!’ என்றான்.                       392

முறுவல் பூத்த முகத்துடன் இராமன்
நாரணன் கைக்கொண்ட வில்லினை வாங்கி,
தோளின்பின் வரை இழுத்து வளைத்து,
நாணேற்றி யதில் அம்பினைத் தொடுத்தவன்,                            393

‘பூதலத்து பலமன்னர் உயிர் கொண்டோனே!
வேத வித்தகர் புத்திரனாய் பிறந்தவன் நீ!
தவத்தோ டிருந்ததை கருத்தினில் கொண்டு
இவ்வம்பினை உன்மேல் விடுவதை விடுத்தேன்.                         394

நாரணன் வில்லின் அம்புக்கு இலக்கு
வேறெது வென்று உரைத் திடெ’ன்றான்.
‘அல்லாரை அழித்து நல்லாரைக் காப்போனே!
இலக்கென என் தவப் பயனைக்கொள்” என்ன                            395

தவபலம் இழந்தான் பரசு ராமன்.
‘அவதரித்த உன் வலிமைக்கு இணையில்லை!
எண்ணிய பொருட்களை இனிது பெறுக!வென
வாழ்த்தி வணங்கி விடை பெற்றான்.                                    396

மூர்ச்சை தெளிந்த தசரதன் தழுவினன்.
தேவர்கள் பூ மழை பொழிந்தனர்.
வேற்படை யுடையவனாம் வருணனிடம்
மால்வில் தந்து அடைந்தனர் அயோத்தி.  .                              397

                      (பாலகாண்டம் இத்துடன் நிறைவு பெற்றது)
                           அயோத்யா காண்டம் தொடரும்.

No comments: