பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 18

                             வரலாறு பேசும் பயணம் பகுதி 18

திருப்பத்தூர்.     
 
திருப்பத்தூர் என்று வேலூர் மாவட்டத்திலும் ஒரு ஊர் உண்டு. இந்தத் திருப்பத்தூர் இப்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊர். புதுக்கோட்டை மதுரை செல்லும் பாதையில் உள்ளது. இவ்வூர் இருக்கும் பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. முந்நாளில் மக்கள் இறை வழிபாட்டில் எத்துணை அக்கறை கொன்டிருந்தார்கள் என்பதற்கு இத்தனை கோயில்களும் சான்று பகிர்கின்றன. இவ்வூரையடுத்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் கொண்டிருக்கும் அழகான ஊர். நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வகிக்கும் இந்தக் கோயில் மிக அழகும் நேர்த்தியும் கொண்டது. இதன் முன்பாக பரந்து விரிந்த குளம். இதனருகில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ஒன்று உண்டு. குன்றக்குடி ஐந்து குகைக் கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்கள்.

ஈரோடு   
            
இது ஒரு மாவட்டத்தின் தலைநகரம். வர்த்தக நகரம். ஈரஓடை என்பது மருவி ஈரோடாக ஆனது என்பார் ரா.பி.சேதுப்பிள்ளை “ஊரும் பேரும்” எனும் நூலில். தமிழகத்தில் வாணிபம் அதிகம் நடப்பதும், மிகுந்த மக்கட்தொகை உள்ளதுமான இந்த ஊர் பல பெரிய தலைவர்களை வழங்கியிருக்கிறது. காவேரி நதியால் வளப்படுத்தப்படும் சுற்றுப்புற ஊர்கள் இவ்வூரையும் செழுமைப் படுத்துகிறது. வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால் இங்கு ஆண்ட பரம்பரையினரின் பட்டியல் சொல்லி முடியாது. சேரர்கள், பாண்டியர்கள், சோழர்கள், பிற்கால சோழர், விஜயநகர சாம்ராஜ்யம், மதுரை நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கர்நாடக சுல்தான்கள், எல்லோருக்கும் மேலாக பிரிட்டிஷார் ஆதிக்கம் செலுத்திய இடம் ஈரோடு. இவ்வூரின் நடுவே ஓடும் காளிங்கராயன் வாய்க்கால் மிகவும் பிரபலமானது. இதில் ஆண்டு முழுதும் நீர் ஒடிக்கொண்டிருப்பதால் இவ்வூரில் ஈரமாகவே இருக்கும் அதன் பெயருக்குத் தக்கபடி.

இப்பகுதியை கொங்கு நாடு என்பர். செல்வச் செழிப்புள்ள இவ்வூரில் காகிதத் தொழிற்சாலை இருக்கிறது. டி.என்.பி.எல். எனும் அரசு தொழில் நிறுவனம் அச்சுக் காகிதம் தயாரிக்கிறது. சேஷசாயி கம்பெனியின் தனியார் தொழிற்சாலையும் இங்கு உண்டு. இவ்வூர் வியாபாரப் பொருட்களின் சந்தை மிகவும் பிரபலமானது. மாந்தர் உபயோக்கிகும் பல உணவுப் பொருட்களுக்குத் தேவையான தானியங்கள், மிளகாய் போன்றவை இங்கு வணிகத்தின் உயிர்நாடி. பெரிய மாரியம்மன், மலைமீதுள்ள சிவாலயம் ஆகியவை பிரபலமான இடங்கள்.

அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலை ஒரு நூறாண்டு காலம் கோலோச்சிக் கொண்டிருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஊர் இது. அவருடைய சகொதரரி ஒரு பிரபலமான வியாபாரி. அவருடைய இல்லம் இப்போது ஈ.வே.ரா. நினைவு இல்லமாக வைத்துப் பராமரிக்கப்படுகிறது. அந்த பழமையான சுண்ணாம்பு மாடிக் கட்டடம் புதிதாகக் காட்சி யளிக்கும் பழமையான மாளிகை. அதனுள் பெரியார் ஈ.வே.ரா. சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற கைத்தடி, மூக்குக் கண்ணாடி, அவர் படுத்திருந்த மரத்தால் ஆன கட்டில், சாய்வு நாற்காலி முதலியன அவரை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கின்றன. மாடியில் பின்புறம் அப்போது அவர் நடத்தி வந்த “குடியரசு” பத்திரிகையில் வேலை பார்த்து வந்த சி.என்.அண்ணாதுரை தங்குவதற்காக ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இல்லத்தின் அவருடைய படுக்கை அறை, அலுவலகம், அதில் மேஜை, நாற்காலி, அவர் எழுதிய பேனா, இங்க் பாட்டில், மூக்குக் கண்ணாடி, படிக்கப் பயன்படுத்திய பூதக்கண்ணாடி ஆகியவைகளோடு, மிகச் சிறிய சமையல் அறையும் காட்சிக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. வரும் சுற்றுலாப் பயணிகளை அங்கு பணியாற்றும் பெண்கள் ஆர்வத்துடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்கள். நம் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகரை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த இல்லத்தின் விசிட் ஒரு வாய்ப்பு.

பவானி.    
     

பவானி எனும் இந்த இடம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. காவிரியும், பவானி ஆறும் சங்கமாகும் இடம். இவ்விரு ஆறுகளைத் தவிர நம் கண்களுக்குத் தெரியாமல் அமிர்தா நதியும் இங்கே சங்கமமாகிறது என்பது நம்பிக்கை. இந்த பவானி சங்கம் என்கின்றனர். இவ்விரு ஆறுகளும் இணையும் இடம் மிகவும் பெரிதாக இருக்கிறது. இங்கு வரும் இந்துக்கள் இந்த சங்கமத்தில் தங்கள் மூதாதையருக்குத் திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அருகிலுள்ள மண்டபத்தில் ஏராளமானோர் சங்கத்தில் நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவதைக் காண முடிகிறது. இங்கு ஆற்றங்கரையில் எரிக்கப்படும் பிணங்களின் மண்டையோடு சிதறிக் கிடப்பதில்லையாம். இங்கு பூமிக்கடியில் 1008 சிவலிங்கங்கள் இருப்பதாகவும், அவற்றை மக்கள் வழிபடுகிறார்கள் என்பதும் செய்தி. காய்ச்சல் வந்தால் மிளகு, ஜீரகம் கலந்து சோற்றை இறைவனுக்குப் படைக்கிறார்கள். இங்கு கோயில் கொண்ட ஈச்வரன் அமிர்தலிங்கேஸ்வரர். இவர் ஆவுடையார் எனும் லிங்கம் பதியும் பீடத்தின் மேல் உட்கார வைக்கப்பட்டிருப்பார். இச்சிலையை பீடத்தைவிட்டு அப்புறப்படுத்தவும் முடியும். இங்குள்ள அம்பிகை வேதநாயகி, சங்கமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். பவானி, மருதநாயகி, வக்ரேஸ்வரி என்றெல்லாம் பெயர்களும் இவருக்கு உண்டு. இத்தனை பெருமைகளையுடைய பவானிக்கு ஜமக்காளத்துக்கும் நல்ல பெயர் உண்டு. பவானி ஜமக்காளம் தான் எங்கும் விற்பனையாகும் ஜமக்காளம்.

                               .To be continued..........

No comments: