பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 20

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 20
மேட்டூர் அணை. 

தமிழ்நாட்டில் மிகப் பழமை வாய்ந்ததும், மிகப் பெரியதும், காவிரி டெல்டா பகுதிகளுக்கு உயிர் கொடுக்கும் நீர்தேக்கமாகத் திகழ்வது மேட்டூர் அணை. மேட்டூரில் நீரின் மட்டம் உயர்ந்தால் நாடு செழிக்கும், குறைந்தால் மக்கள் வாழ்வும் மங்கும் எனும் நிலைமை. இது முந்தைய சேலம் ஜில்லாவில் 1934ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. காவிரி ஆறு மலைப் பகுதியிலிருந்து சமவெளிக்குள் நுழையுமிடத்தில் இது கட்டப்பட்டது. இது கட்டப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சை, நாகை முதலிய மாவட்டங்கள் பயன்பெற்றன.

இந்த அணையின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் நீள அகலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மொத்த நீளம் 1700 மீட்டர். இது நீரைத் தேக்கி வைக்கும் இடம் ஸ்டான்லி ரிசர்வாயர் என்கின்றனர். இந்த நீர்தேக்கத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் பயன்பெற்று வருகிறது. இதன் பிரம்மாண்டம் கருதி இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த அணையின் மேலே மலைப்பகுதியில் இருக்குமிடம் தான் ஹொகேனக்கல் எனும் சுற்றுலாத் தலம். மேட்டூர் அணையில் 120 அடிகள் வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். கர்நாடக மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகரைப் போல இருமடங்கு நீரைத் தேக்க முடியும். கிருஷ்ணராஜசாகர் நம் ஊர் சுதேசி எஞ்ஜினீயரான எம்.விஸ்வேஸ்வரய்யா என்பவரால் 1922இல் தொடங்கி கட்டப்பட்டு 1917இல் முடிவடைந்தது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட இடம் நாயம்பாடி எனும் கிராமம். இதைக் கட்ட இங்கிலாந்து அரசு பணம் கொடுத்தது. அணையின் காரணமாக நீர் தேங்கிய இடங்களில் வசித்த மக்கள் குடிபெயர்ந்து கொள்ளேகால் பகுதிக்குக் குடியேறிவிட்டனர்.

மேட்டூர் அணையில் பாரதி இயக்கத்தினர் போனபோது தண்ணீர் அடிமட்டத்துக்குப் போய்விட்டதால், நீரின் அழகை, அது பாய்ந்து வரும் சிறப்பைக் காணமுடியாமல் வறண்ட சுற்றுப் புறத்தையும் அணையின் நீர்தேக்கப் பகுதியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கோயில் கோபுரம், தேவாலயம் ஆகியவற்றை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பினர்.

ஒகேனக்கல்.

கன்னடத்தில் ஹொகே என்றால் புகை. இவ்வூரில் கர்நாடகத்திலிருந்து காவிரி வனாந்தரங்கள் வழியாக ஓடிவந்து மலையிலிருந்து சமவெளிக்குத் தாவிக் குதிக்கும் பகுதி ஹொகேனக்கல் எனப் பெயர். ஹொகேனக்கல் என்றால் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் நீர்த்துளிகள் புகைபோல எங்கும் மண்டிக் காணப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. அங்கு நுழைந்ததுமே சமவெளியில் காடுகளிலுள்ள மரங்கள் வழியாக பாறைகளுக்கு இடையிலுள்ள ஓடைகளின் வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடிவந்து மலையிலிருந்து மிக மிக ஆழமான பள்ளத்தாக்குகளில் நீர் விழுந்து ஓடும் அழகுதான் கண்களுக்குத் தென்படும். அப்படி இயற்கையின் வேகத்தோடு மிக உயரத்திலிருந்து பள்ளத்துக்குத் தாவும் வீழ்ச்சியில் சென்று யாரும் குளிக்க முடியாது என்பதால் ஒரு செயற்கை குளிக்கும் நீர்வீழ்ச்சியையும் இங்கு அமைத்திருக்கிறார்கள். பாரதி இயக்கத்து நண்பர்கள் போன நேரம், ஆற்றில் தண்ணீர் இல்லை, நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரவில்லை, எல்ல இடங்களும் வறண்டு போய் கிடந்தது.

காவிரியில் தண்ணீர் மிகுந்து ஓடுங்காலங்களில் ஹொகெனக்கல் மிக அருமையான சுற்றுலாத் தலம். அந்த அழகை இனி காணமுடியுமா என்கிற ஏக்கம் அங்கு வந்த அனைவருக்குமே இருந்தது. “தலை கொடுத்தான் தம்பி” என்றொரு பழைய படம், அந்த படத்தின் எல்லா காட்சிகளுமே இந்த ஹொகேனக்கல்லின் அழகைக் காட்டக்கூடியதாக இருந்ததை நினைவு படுத்திக் கொண்டோம்.


பயணிகளைப் பரிசல்களில் அழைத்துச் சென்று அருவி நீர் கொட்டும் இடங்களைக் காட்டும் ஊழியர்கள் கூட தங்கள் பரிசல்களைக் கவிழ்த்து வைத்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நீர் குட்டைகளில் பிடித்த மீன்களை மீன்வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தனர். மீன் பிரியர்களுக்காக அந்த மீனைப் பதப்படுத்தி காரம் போட்டு விரும்பியவர்களுக்கு வியாபாரம் செது கொண்டிருந்தனர். சும்மா சொல்லக் கூடாது பாரதி இயக்க சுற்றுலா வந்தவர்களில் ஒருசிலர் மெல்லச் சென்று புதிய அந்த மீன்களை வாங்கி ரசித்துச் சாப்பிட்டு வந்தார்கள்.

                              To be continued..........

No comments: