பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 24

                                  வரலாறு பேசும் பயணம் பகுதி 24
திருவண்ணாமலை.  
   
பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக வழிபடப்படுவது திருவண்ணாமலை. இங்குதான் சிவபெருமானின் அடி முடி தேடி மகாவிஷ்ணுவும், பிரம்மனும் மேலும் கீழுமாகச் சென்றும் கண்டு பிடிக்கமுடியவில்லை எனும் செய்தியை நமது பக்தி இலக்கியங்கள் எல்லாம் பகருகின்றன. அப்படிப்பட்ட புண்ணிய பூமிக்குச் சென்றனர் பாரதி இயக்கத்தினர். அந்த நகரத்தை நெருங்கும் போதே வானுயர்ந்த அண்ணாமலையார் மலையும், அந்த மலையின் பின்னணியில் முன்புறம் நாற்புறமும் ராஜகோபுரங்கள் அமைந்த அற்புதமான அண்ணாமலையார் ஆலயமும் நம் கண்களையும் கருத்தையும் ஒருசேர கவர்ந்திழுக்கின்றன.

பண்டைய காலத்திலிருந்து இந்தப் பகுதியை பல்லவ மன்னர்களும், இடைக்கால சோழர்களும், பிற்கால சோழர்களும், ஹொய்சாளர்களும், விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளும், கர்நாடக நவாபுகளும், மைசூரின் திப்பு சுல்தான் இவர்களையெல்லாம் தொடர்ந்து பிரிட்டிஷாரும் இந்தப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள். ஹொய்சாள மன்னர்களுக்கு இவ்வூர் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. இதுவும் காஞ்சி, கும்பகோணம் போல ஒரு கோயில் நகரம். அண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயம் இவைகளைச் சுற்றிதான் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

இந்த ஊருக்கு ஒரு புராண வரலாறு உண்டு. சிவபெருமான் உறையும் கயிலை மலையில் இனிமையானதொரு பொழுதில் சிவபெருமான் சற்று வேறு ஏதோ கவனமாக இருந்த நிலையில் பார்வதி பின்னால் இருந்து அவர் கண்களை விளையாட்டாகப் பொத்துகிறாள். கைலாயத்தில் நடந்த இந்த ஓரிரு விநாடி நிகழ்ச்சியின் காரணமாக இந்த பூமியெங்கும் பல ஆண்டுகள் இருளில் ஆழ்ந்தனவாம். மனம் வருந்திய பார்வதி தேவி தேவ கணங்களுடன் சேர்ந்து உலகுக்கு ஒளி தரவேண்டுமென்று பெருந்தவம் இயற்றத் தொடங்கினார். அப்போது சிவபெருமான் அக்னி வடிவமாக இந்த அண்ணாமலை மலையின் மீது தோன்றினாராம். அப்போது இவ்வுலகுக்கு மீண்டும் ஒளி பரவியதாம். பார்வதியின் இந்த பக்தியை மெச்சி இறைவன் அன்னையைத் தன்னுடலின் ஒரு பாகமாக ஆக்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தாராம்.  இதுதான் இவ்வூரின் சிறப்பு.

இந்த அண்ணாமலை மலைச் சிகரமே சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. அருணாசலம் என்ற பெயர் இந்த மலைக்கு உண்டு. அருணன் என்றால் நெருப்பு, அசலம் என்றால் மலை. முந்தைய யுகத்தில் இது நெருப்பு மலையாக இருந்து குளிர்ந்து இப்போது இப்பூவுலகில் காட்சியளிக்கிறது என்கின்றனர்.

இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து குவிகிறார்கள். அண்ணாமலை யாரையும் உண்ணாமுலை அம்மனையும் கண்டு தரிசித்து மகிழ்கிறார்கள். இங்குதான் முருகன் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் வாழ்ந்தார். அவர் கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒரு கிளி உருவம் எடுத்தபோது அவருடலை எதிரிகள் எரித்துவிட்டதால் அவர் கிளியாகவும் இருந்து பாடல்களைப் பாடினாராம். அருணகிரி தவிர இவ்வூர் பல மகான்களைக் கவர்ந்திருழுத்து வந்திருக்கிறது. அவர்களில் ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார் இவர்கள் போன்ற பல சித்த புருஷர்கள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ரமண மகரிஷியின் ஆசிரமம் அவருடைய பக்தர்களால் நிரம்பி வழிகிறது. பாரதி இயக்கத்தாரும் ரமண மகரிஷி ஆசிரமம் சென்று தரிசித்து மகிழ்ந்தார்கள். அப்போது நமது திருவையாறு நாட்டியாஞ்சலியில் பங்குபெறும் பரதநாட்டியக் கலைஞர் திருமதி கலைச்செல்வி கங்காதரன் என்பார் அங்கிருப்பது அறிந்து அவரை தொலைபேசியில் அழைத்தோம். அவரும் உடனடியாக வந்து இவர்களை சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சந்தித்து பிறகு திருவண்ணாமலையை விட்டு நீங்கும் வரை உடனிருந்து வழிகாட்டி உதவினார். அவருக்கு நன்றி.

அவரும் மற்றொரு நண்பரும் இவர்களை அண்ணாமலையார் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்விக்க மிகவும் முயன்று பார்த்தார்கள். ஆனால் அதற்கு சில நாட்கள் முந்திதான் அந்த ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றிருந்தது. அதனால் அன்று ஏராளமான மக்கட் கூட்டம். உள்ளே நுழைய முடியவில்லை. இவ்விருவரும் அவ்வாலயத்துடன் தொடர்பில் இருந்தும், திருமதி கலைச்செல்வி அந்த ஆலயத்தில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்த போதும், அங்கிருந்த காவலாளிகளின் கெடுபிடியால் இவர்கள் தரிசனம் செய்யமுடியாமல் திரும்ப நேர்ந்தது மனதுக்கு வருத்தமளித்தாலும், அண்ணாமலையார் இவர்களை மறுபடி ஒருமுறை வரச்சொல்லி இப்படி செய்திருப்பாரோ என்கிற எண்ணத்தோடு நீங்கினர்.

நண்பகலில் திருவண்ணாமலையை விட்டு நீங்கி செஞ்சி நோக்கி விரைந்தனர் பாரதி இயக்கத்தினர்.

செஞ்சிக்கோட்டை.

தமிழகத்துக் கோட்டைகளில் செஞ்சிக் கோட்டைக்குத் தனிப் பெருமை உண்டு. ராஜா தேசிங்கு என்று பால பாடங்களில் படித்த நினைவை யாரும் மறந்து விட முடியாது. தேசிங்குராஜன் டெல்லிக்குச் சென்று முகலாய மன்னர்களின் குதிரையை அடக்கியதாக பாட்டுகூட ஒன்று உண்டு. கோட்டை என்றதும் நமக்கு சத்திரபதி சிவாஜிதான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் அவர்தான் மராட்டியப் பிரதேசத்தில் யாரும் உட்புகமுடியாத கோட்டைகளைக் கட்டி முகலாய மன்னர்களுக்கும் தட்சிண சுல்தான்களுக்கும் தண்ணீர் காட்டியவர். அந்த சத்ரபதி சிவாஜியே சொல்கிறார் “யாராலும் சுலபமாக உட்புக முடியாத வலுவான அற்புதக் கோட்டை இந்த செஞ்சி கோட்டை” என்கிறார். பிறகு வேறெவர் சாம்றிதழ் கொடுக்க வேண்டும்? ஐரோப்பியர்கள் இந்தக் கோட்டையை “கிழக்கின் டிராய்” என்கின்றனர். கிரேக்க புராணத்தில் வரும் டிராய் எனும் கோட்டை பற்றிய வரலாற்றினை புகழ்வாய்ந்த ஹாலிவுட் படமான “ஹெலன் ஆஃப் டிராய்” படத்தில் பார்த்திருக்கலாம். அந்தப் புகழுக்குரிய கோட்டை செஞ்சிக் கோட்டை.
தமிழகத்தின் வடமாவட்டமான திருவண்ணாமலை அருகில் அமைந்தது இந்தப் பகுதி. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று பெரிய மலைகள். இடையில் இரு சிறிய குன்றுகள். இவை அனைத்தையும் சுற்றி 12 கி.மீட்டர் தூரத்துக்கு மதிற்சுவர் கட்டி பாதுகாக்கப்பட்டது செஞ்சி. இன்று சாலையில் நின்றுகொண்டு இரு புறமும் பார்த்தால் இதன் கம்பீரம் தெரிகிறது. அடே அப்பா! எந்தவித நவீன சாதனங்களும் இல்லாத காலத்தில் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான மலைகளை இணைத்துக் கோட்டைகளைக் கட்டி அதற்கு மதிற்சுவரும் கட்டி பாதுகாத்திருப்பதை நம்மால் நம்பமுடியவில்லை, ஆனால் கண்களால் பார்க்கிறோமே அதனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

பண்டைய தமிழகத்தில் இப்பகுதி சிங்கபுரி என வழங்கப்பட்டது. இதுவே மருவி செஞ்சியாக மாறியிருக்க வேண்டும். மேலும் இங்கு சிங்கவரம் என்ற பெயரில் ஒரு கிராமமும் இருக்கிறது. அது செஞ்சியாக மாறியிருக்கலாம். 13ஆம் நூற்றாண்டில் யாதவ வம்சத்தினர் இந்தக் கோட்டையைக் கட்டத் துவங்கினர். பின்னர் பல மன்னர்களும் இதனை வலுவாகக் கட்டினர். விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுகையின் போது 1509 தொடங்கி 1529 வரையில் செஞ்சியை விரிவு படுத்தினர். செஞ்சியின் சிறப்புகளுக்குக் காரணமான கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், பாடி வீடுகள், நெற்களஞ்சியம், ஆழமான அகழிகள் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
பல்லவ மன்னர்கள் காலத்தில் செஞ்சியில் பல கோயில்கள், குகைக்கோயில்கள் உருவாக்கப் பட்டன. சோழர்கள் ஆதித்த கரிகாலன், ராஜராஜன் ஆகியோரும் இந்த இடத்தை சிங்கபுரம் எனும் பெயரில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோரும் இங்கு வருகை புரிந்திருக்கின்றனர். மராத்தியர்கள் இந்த கோட்டையைத் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தபோது பீஜப்பூர் சுல்தான் இதை கைப்பற்றியிருக்கிறார். பிறகு சத்ரபதி சிவாஜி இதனை அவர்களிடமிருந்து மீட்டிருக்கிறார். சத்ரபதியின் தம்பி ராஜாராம் இங்கு முகலாயர்களுடன் போரில் ஈடுபட்டிருக்கிறார். முகலாயர்களின் ஏழு ஆண்டு முற்றுகை வெற்றியை அவர்களுக்குத் தரவில்லையாம். 1698இல் இந்தக் கோட்டையை முகலாயர்கள் கைப்பற்றியபோது உள்ளே இருந்த ராஜாராமை அவர்களால் கைது செய்யமுடியவில்லை. இந்தக் கோட்டையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்வதே பெரும்பாடு. அப்படியிருக்கும்போது ராஜாராம் தப்பிவிட்டதில் வியப்பேதும் இல்லை.

செஞ்சியை விட்டு நீங்கி பயணத்தைத் தொடர்ந்தனர் பாரதி இயக்கத்தினர்.
                       
                                    தூய மேரி தேவாலயம்

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.

பாரதி இயக்க அறங்காவலர் திரு இரா.மோகன் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிபவர். அவர் சென்னை சேப்பாக்கத்திலுள்ள அவர்களது தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரது பணி நிறைவு நாள் வந்தது. அதற்காக சென்னைக்குச் சென்று அவர் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டபோது அந்த அலுவலகத்துக்கு அருகில்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகாம் இருக்கிறது என்பதால் அங்கு சென்று பார்க்கலாம் என்று சென்றார்கள். அப்போது கோட்டியினுள் நுழைய நிறைய கெடுபிடிகள் இருந்தன. அதன் பின்புறம் சுமார் 335 ஆண்டிகள் பழமையான செயிண்ட் மேரீஸ் சர்ச் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அந்த தேவாலயத்தைச் சென்று பார்த்து வரலாம் என்று அனைவரும் அங்கு சென்றார்கள்.

எப்போதும் மக்கட் கூட்டம் நிரம்பி வழியும் தலைமைச் செயலக வளாகத்தின் ஒரு மூலை, வேம்பு மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. அந்த மரக்கூட்டங்களுக்கிடையே ஓங்கி உயர்ந்ததொரு தேவாலய கோபுரம், முன் வாயிலில் இரும்பி கேட். அதனுள் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக எழும்பி நிற்கும் தேவாலயம் தான் செயிண்ட் மேரீஸ் தேவாலயம் என வழங்கப்படும் சென்னையின் முதல் ஐரோப்பியர் கட்டிய தேவாலயம்.

இது1680 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் கோட்டையில் வசித்த ஆங்கிலேயர்களின் வழிபாட்டுக்காகக் கட்டப்பட்டது. 1678 மார்ச் 25ஆம் தேதி இந்த கட்டடம் கட்ட துவக்கப்பட்டது. அப்போது சென்னை கவர்னராக இருந்தவர் ஸ்டிரேன்ஷாம் மாஸ்டர். சென்னையில் அப்போது இருந்த ஆங்கிலேயர்களின் நன்கொடையால் கட்டப்பட்டது இது. இது 80 அடி நீளம் 50 அடி அகலமும் மூன்று வராந்தாக்களுடன் அமைந்தது. செங்கல் சுண்ணாம்பு கொண்டு கட்டியிருக்கிறார்கள். 1680 அக்டோபர் 28இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேவாலய வளாகத்தில் 104 கல்லறைகள் இருக்கின்றன. இதில் 1777இல் இருந்த பிகாட் பிரபுவின் கல்லறையும் அடங்கும். இப்போது உயர்நீதி மன்றம் இருக்குமிடத்தில்தான் ஐரோப்பியர்களின் கல்லறைகள் முன்பு இருந்தன. பின்னர் அது இங்கு மாற்றப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியாரின் தேவாலயம் என்று முதலில் அழைக்கப்பட்ட இது பின்னர் 150 ஆண்டுகள் ராஜதானி தேவாலயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.


ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஐஸ் ஹவுஸ் எனப்படும் சுவாமி விவேகானந்தர் இல்லம் நோக்கிப் போய் அந்த பிரம்மாண்டமான வளாகத்தைக் கண்டு அங்குதான் சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தபோது தங்கியிருந்த செய்திகளைத் தெரிந்து கொண்டு கிளம்பினர்.
                              To be continued.............

No comments: