பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 9

                      வரலாறு பேசும் பயணம் பகுதி 9

1. பூம்புகார்.        
      பழந்தமிழ் நாட்டில் புராதன துறைமுகமாக விளங்கிய தலைநகரம் பூம்புகார். சிலப்பதிகாரத்தில் பூம்புகார் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்நகர் கடல் கொண்டபின்னர் அங்கு மண்மேடிட்டுப் போயிருந்தாலும், பின்னர் தமிழ்நாடு அரசு இங்கு ஒரு புதிய நகரத்தை உருவாக்கினர். இந்நகர் மயிலாடுதுறையிலிருந்து கிழக்கில் 22 கி.மீ. தூரத்தில் வங்கக்கடற்கரையில் அமைந்திருக்கிறது. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடம் இது. இங்குதான் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து பாரதி இயக்கத்தினர் வந்து சேர்ந்தனர்.

      சோழ சாம்ராஜ்யம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைநகரங்களைக் கொண்டிருந்திருக்கிறது. அப்படி கடல் கொள்வதற்கு முன்பு பூம்புகார் மிகப்பெரிய துறைமுக தலைநகரமாக விளங்கியிருக்கிற்து. கி.பி.500இல் ஏற்பட்ட ஒரு ஆழிப்பேரலை (சுனாமி) இந்நகரத்தைக் கடல் தன்னுள் அடக்கிக் கொண்டுவிட்டது.

      சாலை மார்க்கமாக பூம்புகாருக்கு மிக எளிதில் சென்றடையலாம். பழைய நகரம் கடலினுள் சென்றுவிட்ட படியால் இங்கு மீனவர்கள் குடியிருப்பு மட்டுமே எஞ்சியிருந்த போது தி.மு.க. ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலக்கியத்தில் காணப்படும் பெயர்களில் பல மன்றங்களும், காட்சிக்குடமும், கண்ணகிக்கு ஒரு சிலையும் எடுப்பிக்கப்பட்டது. அந்த நகரதில் எழிலையும், இங்கு விற்பனையாகும் கடல்சார்ந்த அரிய பொருட்களும், பல்வித மீன்களும் தவிர வரலாற்றை விளக்கும் காட்சி சாலையையும் கண்டு மகிழ்ந்தனர்.

2. தரங்கம்பாடி.     
      பெயரிலேயே இவ்விடத்தின் சிறப்பினைக் கொண்ட சிறு கடற்கரை கிராமம் இந்த தரங்கம்பாடி. தரங்கம் என்பது அலை, எப்போதும் அலைகள் கரையில் மோதி ஓசை எழுப்புவதால் இதனை தரங்கம்பாடி என்றழைத்தனர் போலும். இதனை ஆங்கிலத்தில் Places of Singing Waves என்று குறிப்பிட்டனர். தற்போதைய நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்குக் கிழக்கே கடற்கரையோரம் அமைந்த இடம் இவ்வூர். இந்தப் பெயர் வாயில் நுழையாததால் ஐரோப்பியர் இதனை “டிராங்குபார்” என்றழைத்தனர். இவ்வூர் காரைக்காலுக்கு 15 கி.மீ.வடக்கே உள்ளது. பூம்புகாருக்குச் சற்று தெற்கே இருக்கிறது. ஐரோப்பியர்கள் நாடு பிடிக்கவும், பொருள் ஈட்டவுமாக கடலில் பயணம் செய்து தூர தேசங்களுக்குக் கப்பலில் வந்து சேர்ந்தனரல்லவா? அப்படி 1620ஆம் வருஷத்தில் இந்த கடற்கரை ஊரில் வந்திறங்கிய டென்மார்க் எனும் ஐரோப்பிய நாட்டினர் இங்கு சுமார் 225 ஆண்டுகள் அதாவது 1845 வரை ஆக்கிரமித்திருந்தனர். டென்மார்க்கை நம்மவர்கள் டேனிஷ் மக்கள் என்றழைத்தனர்.

      இந்த நகரம் 14ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ நாட்டில் சோழர்களை வீழ்த்தி பாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். மாறவர்மன் குலசேகர பாண்டியன் இப்பகுதிகளை ஆட்சி செய்யத் தொடங்கினான். இவ்வூரிலுள்ள மாசிலாமணிநாதர் ஆலயத்துக்கு (இந்த ஆலயம் இப்போது கடல் கொண்டுவிட்டது. தமிழக அரசு கடற்கரையில் அந்த கற்களைக் கொண்டு புதிதாக ஒரு ஆலயத்தைத் தற்போது நிர்மாணித்திருக்கிறார்கள்) இடம் கொடுத்தவன் இந்த மன்னன் தான்.

      1620ஆம் ஆண்டில் டென்மார்க்கிலிருந்து ஐரோப்பியர்கள் இங்கு வாணிபம் செய்ய வந்து இறங்கினர். அவர்கள் வந்த சமயம் தஞ்சைப் பகுதிகளை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். டேனிஷ் தளபதி ஒவே ஜெட்டெ (Ove Gjedde) என்பார் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் வந்து இங்கு வாணிபம் செய்ய ஒப்புதல் பெற்று அங்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டார். அந்த கோட்டைக்கு டேனிஷ்பெர்க் என்று பெயர். டேனிஷ்காரர்கள் இங்கு வருவதற்கு முன்பு ஜெஸ்யூட் கேதலிக் கிறிஸ்தவ பிரிவின் பாதிரியார் ஒருவர் இங்கு வந்து மதபோதனை செய்து மக்களை மத மாற்றம் செய்தார். டேனிஷ்காரர்கள் அவருடைய ரோமன் காதலிக் ஆலயத்தை இடித்துவிட்டு கோட்டையைக் கட்டினர். இங்கு டேனிஷ்காரர்கள் சுமார் 150ஆண்டு காலம் நாயக்க அரசர்களின் ஆதரவோடு ஆட்சி புரிந்தனர். இந்த நட்பின் காரணமாகவே தஞ்சை ஆலய விமானத்தில் தொப்பி போட்டு இந்த டேனிஷ் தளபதியின் உருவத்தை நாயக்க மன்னர்கள் உருவாக்கினார்கள் என்க்று சொல்லப் படுகிறது. இப்போது தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ்பர்க் கோட்டை புதுப்பிக்கப்பட்டு அங்கு ஒரு அருங்காட்சியகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

      கிறிஸ்தவ மதைப் பிரிவினரில் பிராடஸ்டென்ட் பிரிவினர்தான் முதன் முதலில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவர்கள். ஜெர்மானிய லூத்ரன் சர்ச்சைச் சேர்ந்தவர்கள் ஹென்ரிச் ப்ளூட்செவ், பார்த்தலோமாஸ், சேசென்பர்க் ஆகியோர் 1705இல் இங்கு குடியேறினார்கள்.

      இந்த சேசென்பர்க் என்பவர்தான் இங்கு பைபிளின் புதிய ஆகமம், பழைய ஆகமம் இவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து ஒரு அச்சு இயந்திரத்தை உருவாக்கி முதன் முதலாக 1714இல் மேற்படி நூல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டார். நம் நாட்டில் அச்சில் வெளிவந்த முதல் நூல் இதுதான். வரலாற்றில் பதிவான அரிய செய்தி இது. இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேற முயன்ற போர்த்துகீசியர்கள் இங்கு காலூன்ற முடியாமல், நாகைப்பட்டணம் சென்று அங்கும் முடியாமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர்.

      கிறிஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் இங்கு அச்சடிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இங்கு தொடங்கப்பட்ட டிராங்குபார் மிஷன் அடுத்தடுத்து மெல்ல கடலூர், சென்னை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. தற்சமயம் தரங்கம்பாடியிலுள்ள கிறிஸ்தவ மிஷன் டி.ஈ.எல்.சி. எனும் தமிழ் ஈவாஞ்சலிகல் லூத்ரன் சர்ச் என வழங்கப்படுகிறது. இந்த டி.ஈ.எல்.சி. பிஷப் ஒருவரும், தேவாலயமும் இப்போதும் திருச்சியில் காணலாம்.

      இவர்கள் மூலம் சோழ நாட்டு எல்லைக்குள் கிறிஸ்தவம் பெருமளவில் வளர்ந்தது. 1701இல் சர்ச் ஆஃப் சியோன் உருவாயிற்று. மிகப் பழமையான பிராடஸ்டெண்ட் சர்ச் இது. 1718இல் தி சர்ச் ஆஃப் நியு ஜெரூசலேம் கட்டப்பட்டது. மொராவியன் பிரத்ரின் சீடர்கள் தரங்கம்பாடியை அடுத்த பொறையார் எனும் ஊரில் “கார்டன் ஆஃப் பிரதரின்” எனும் அமைப்பை நிறுவினர்.

      ஐரோப்பாவில் நடந்த பல அரசியல் மாற்றங்களை அடுத்து இங்கும் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சில மாற்றங்கள் நேர்ந்தன. 1808இல் தரங்கம்பாடி டேனிஷ் காரர்களிடமிருந்து ஆங்கிலேயர் வசம் வந்தது. காரணம் ஐரோப்பாவில் நெப்போலியன் போனபார்ட்டுக்கும், இங்கிலாந்தின் நெல்சனுக்கும் நடந்த கடல் யுத்தத்தில் டிரபால்கர் எனுமிடத்தில் நெல்சன் வெற்றி பெற்றார். அதன் பயன் இங்கும் ஆங்கிலேயர் ஆதிக்கம் பெற்றனர். அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி மனோரா எனும் கடற்கரையோர நினைவு கோபுரம் கட்டினார். கீழைக் கடற்கரைப் பகுதிகள் கடல் வாணிபத்தில் உயர்ந்தது. நாகப்பட்டினம் தென்னிந்திய ரயில்வேயின் தலைமை அகமாக ஆனது. பின்னர்தான் இது திருச்சிக்குக் கொண்டி செல்லப்பட்டது. அப்போது இந்த ரயில்வேயின் பெயர் தென்னிந்திய ரயில்வே அதாவது South Indian Railway. (SIR) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே மெட்ராஸ் & தென் மராட்டா ரயில்வே, Madras & Southern Maratta Railway (MSM) எனப் பெயர் பெற்றது. கடற்கரை காற்றும், அழகிய கடற்கரையும், அருங்காட்சியகமாக மாறிய டேனிஷ்பர்க் கோட்டையும் பிரியா விடை கொடுத்த பாரதி இயக்கத்தினரை வழியனுப்பி வைத்தன.

3. தில்லையாடி.     
      தில்லையாடி எனும் சின்னஞ்சிறு கிராமம் திருக்கடவூர், பொறையார் ஆகிய ஊர்களுக்கு மிக அருகிலுள்ளது. இந்த சின்ன கிராமத்துக்கு என்ன அப்படியொரு வரலாற்றுப் பெருமை? இந்த ஊரில் பிறந்த பலர் 19ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்னாப்பிரிக்கா முதலிய கடல் கடந்த நாடுகளுக்குப் பிழைப்பு தேடி சென்றார்கள். அப்பொழுதெல்லாம் இப்போது போல கடவுச்சீட்டு, விசா போன்றவைகள் இல்லாமையால் நாகப்பட்டினம் சென்று கடல் வழியாகக் கப்பலில் சென்று விடுவார்கள். அப்படிச் சென்றவர்களில் நாராயணசாமி, வள்ளியம்மை ஆகியோரில் குடும்பங்கலும் அடங்கும். காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் பங்கு பெற்று உயிர்த்தியாகம் செய்த சிறு பெண் வள்ளியம்மை. இந்த பெண்ணின் உயிர்த்தியாகத்தை மதித்து காந்தி யடிகள் தமிழகம் வந்து முதன் முதலில் ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் காலடி யெடுத்து வைத்தது இந்த தில்லையாடியில்தான். இந்த நிகழ்வைக் குறிக்க இங்கொரு ஸ்தூபி கட்டப்பட்டிருக்கிறது.

      இந்த ஊரில் உள்ள சிவாலயம் பிரசித்தி பெற்றது. சார்ந்தாரைக் காத்தார் என்றும் சரணாகதரக்ஷகர் எனும் திருநாமம் கொண்ட சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். சோழர் காலத்து ஆலயம். இந்த ஊரில் 1898 பிப்ரவரி 22இல் பிறந்து 1914 பிப்ரவரியில் இறந்து போன வள்ளியம்மையின் ஊர் என்பதில் இவ்வூராருக்குப் பெருமை. காந்தியடிகள் முதன்முதல் தமிழ்நாட்டில் காலடி வைத்த ஊரும் இதுதான் என்பது மேலும் ஒரு பெருமை.

      தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் கருப்பர்களாக வெள்ளைக்காரர்களால் கருதப்பட்டார்கள். அவர்கள் வெள்ளையர் வாழும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் சென்றுவர முடியும். கருப்பர்கள் அனைவரும் அடையாளச் சீட்டுடன் தான் வெளியில் வரமுடியும். இதை எதிர்த்து காந்தியடிகள் போராட்டத்தைத் தொடங்கினார். டிரான்ஸ்வால் எனும் ஊரிலிருந்து நேடால் எனும் ஊருக்கு வள்ளியம்மையும், அவர் தாயார் மங்களமும் சென்றார்கள். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்றார்கள். மாரிட்ஸ்பர்க் எனும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வள்ளியம்மைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் உடல் நலம் கருதி அவரை விடுதலை செய்ய நிர்வாகம் முன்வந்தபோதும் அந்த தீரப்பெண் மறுத்துவிட்டாள். விடுதலையான சில நாட்களுக்குள் 1914 பிப்ரவரி 22இல் அவர் இறந்து போனார்.


      வள்ளியம்மையைப் பற்றி மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். வள்ளியம்மை முனுசாமி முதலியார் 16 வயது சிறுமி. அவளை நான் சென்று பார்த்த போது அவர் படுத்த படுக்கையாக உடல்நலம் கெட்டிருந்தார். அவர் நல்ல உயரமான பெண். நான் பார்த்தபோது மிகவும் இளைத்து எலும்பும் தோலுமாக இருந்தார். காந்திஜி கேட்டார் “வள்ளியம்மை, நீ ஜெயிலுக்குப் போகநேர்ந்ததை எண்ணி வருந்துகிறாயா” என்று. அதற்கு வள்ளியம்மை சொன்ன பதில் என்ன தெரியுமா? “வருந்துவதா, நானா? இப்போது ஜெயிலுக்குப் போக நேர்ந்தாலும் நான் தயார்” என்றார். “சரி, அப்படி நீ ஜெயிலுக்குப் போக நேர்ந்தால் அங்கு இறக்கும்படி ஆனால் என்ன செய்வாய்?” என்றார் காந்திஜி. அதற்கு வள்ளியம்மை சொன்ன பதில்தான் அவர் வரலாற்றில் இடம்பெற காரணமானது. அவர் சொன்னார் “நான் அது பற்றி கவலைப்படவில்லை. தன் தாய்நாட்டுக்காக இறக்க நேர்ந்தால் யார்தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பார்கள்?” இது நடந்த சில நாட்களில் வள்ளியம்மை இறந்து போனாள். ஆனால் அவர் புகழை இன்றும் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நினைவாக தில்லையாடியில் ஒரு நினைவு மண்டபம் இருக்கிறது.
                                  To be continued.......

No comments: